விலங்கியல் பூங்கா தரும் அறிவுரை
ஒரு முறை, என்னுடைய நண்பர் ஒருவரிடம் உறவாடிக்கொண்டிருக்கையில் விலங்கியல் பூங்காவைப்பற்றிப் பேச்சு வந்தது. அப்போது நான் கூறினேன் "எனக்கு விலங்கியல் பூங்காவிற்கு போவதில் எப்போதும் விருப்பம் இல்லை. சுதந்திரமாக வாழவேண்டிய விலங்குகளையும் பறவைகளையும் கூண்டுகளில் அடைத்து வைத்து அவைகளை சித்திரவதை செய்வதுதான் விலங்கியல் பூங்காவின் சொல்லாமல் சொல்லப்படும் குறிக்கோள்".
என் நண்பர் கூறினார் "ஒரு வகையில் நீங்கள் கூறுவது சரிதான்". நான் "அது புலியாகட்டும் சிங்கமாகட்டும், மானாகட்டும், குரங்குகள் பறவைகள் ஆகட்டும், அவை காட்டில் இருப்பின் எவ்வளவு சுதந்திரமாக வாழும். இந்த உயிரற்ற விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டு அவதிப்படுவதை பார்க்கையில் என் மனது மிகவும் வேதனைப் படுகிறது" என்று புலம்பினேன்.
அப்போதுதான் அந்த நண்பர் அருமையான ஒரு கருத்தைக்கூறினார். "ஒன்றை நாம் இங்கே கவனிக்கவேண்டும். ஒருவேளை இந்த விலங்குகளுக்குப்பதில் நாமே காட்டில் வசிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்மை இதைப்போன்ற ஒரு மனிதவியல் பூங்காவில் கொண்டு அடைந்துவிட்டால், நீங்கள் கூறுவதுபோல நாம் இதனுள்ளே சுதந்திரமும் மகிழ்ச்சியும் இல்லாமல் கவலையிலேயே இருப்போம். ஆனால், இந்த விலங்குகள் காட்டிலிருக்கும்வரை அவைகளின் இயற்கை வழிகளில் வாழ்கிறது. ஆனால், அப்படி வாழ்கையில் அவை மகிழ்ச்சியுடனோ அல்லது துன்பத்திலோ வாழ்கின்றது என்று நாம் கூறமுடியாது. அவைகளுக்குத்தேவை, பசியைபோக்கிக்கொள்ளுதல், தூக்கம் வருகையில் தூங்குதல், அதன் தோழர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அவைகளை துரத்தி, கட்டிப்பிடித்து உருண்டு விளையாடுதல் இவ்வளவே. இதைத்தவிர மற்றநேரத்தில் விலங்குகள் வெறுமனே அவைகளின் தத்தம் இடங்களில் சும்மா இருக்கிறது."
நான் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ' ஆமாம், உண்மைதான்' என்றேன்.
என் நண்பர் தொடர்ந்தார் "இப்படி வாழும் விலங்குகளை, உயிரியல் பூங்காவில் கூட்டிவந்து கூண்டுகளில் அடைத்தபின், சில நாட்கள் அவ்விலங்குகள் அமைதியின்றி இருக்கும். அங்கும் இங்கும் ஓடும். ஓலமிடும், சத்தமிடும், உறுமும். ஆனால், அதற்குமேல் அவைகளால் ஒன்றும் செய்ய இயலாது, அவைகளுக்கு செய்யவும் தெரியாது. அவைகளுக்கு உணவு கிடைக்கையில் உண்கின்றன. தண்ணீர் இருக்கையில், தாகம் இருப்பின் தண்ணீரை அருந்துகின்றன. ஆனாலும், அவைகள் மனதளவில் சிந்திக்கமுடியாது என்ற காரணத்தினால், தம்மை தம் சொந்தஇடமான காட்டிலிருந்து, செயற்கையான ஒரு சூழ்நிலைக்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளோம் என்றெல்லாம் நினைத்து வருந்தாது.”
“இந்த விலங்குகள் "ஐயோ, நாம் காட்டிலிருந்து இங்கு கூண்டினில் அடைக்கப்பட்டுள்ளோமே" என்று நினைக்காது, கவலைபடாது.. மனிதர்களைக்காட்டிலும் விலங்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்கிறது."
இப்படி என் நண்பர் கூறிமுடித்தபின், நான் அவரைப்பார்த்து வியந்துபோனேன். அவருடைய எளிமையான விளக்கம், நான் இந்நாள் வரையில் கொண்டிருந்த கருத்து ஒரு வகையில் தவறு என்பதை உணர்த்துவதாகத்தான் இருந்தது. விலங்குகள் அவைகளின் இயற்கை சூழ்நிலையில் இல்லையெனில் சுதந்திரம் இல்லைதான். ஆனால், சுதந்திரம் இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக அவைகள் வானவியல் பூங்கா வந்தபின்னர் வாழாமலில்லை. அந்த சூழலுக்கு ஏற்றமாதிரி அவை தம்மை மாற்றிக்கொள்கின்றன.
மனிதர்களாகிய நாம், இந்த விலங்குகளிடம் சிறிது கற்றுக்கொள்ளமுடியும். நாம், எப்படி இருப்பினும் நம்முடைய தற்கால நிலையை ஏற்றுக்கொண்டு வாழ முடியும். மனமும் முயற்சியும் செய்து தற்கால நிலையிலிருந்து வருங்காலத்தில் இன்னும் நல்ல நிலைக்கு மாற்றிக்கொள்வதில் தவறில்லை. ஆனால், அத்தகைய வருங்காலம் வரும்வரையில் (வருமா இல்லையா என்பதும் நிச்சயம் இல்லை), நாம் தற்போது இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்தகைய மனப்பக்குவமும் வெளிநோக்கும் ஒருவருக்கு இருப்பின் அது, ஒருவர் மகிழ்ச்சியுடன் தனது தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுக்கும்.