துவைக்கும் இயந்திரம் துணிக்குமட்டும்தானா

"இது உலகத்தில் முதன்முறையாக, மூன்று மாதங்களுக்கு முன்புதான் கனடா நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறை எங்கள் மூலம்தான் இந்த இயந்திரம் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதனுடைய அளவு 5 அடிக்கு 6 அடி"
இதைச் சொன்னவர் சென்னை தொழிற்பொருட்காட்சியில் மிகவும் பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் ஸ்டால் போட்டிருந்த அதன் உரிமையாளர்தான்.
நான் கேட்டேன் "இவ்வளவு பெரிதாக இருக்கிறதே இந்த இயந்திரம். இது என்னென்ன வேலைகள் செய்யும்?"
அவர் சொன்னார் "நன்றாக கேட்டீர்கள். இது பல வேலைகளைச் செய்யும். முக்கியமாகத் துணிகளை துவைத்து உள்ளுக்குளேயே காயப்போட்டு உலர்த்தித் தந்துவிடும், சமையல் செய்த பாத்திரங்களை சுத்தம் செய்து, கழுவி பளபளவென்று உலர்த்தித் தந்துவிடும். காய்கறிகளையும், பழங்களையும் மிகவும் நேர்த்தியாக நறுக்கி கொடுக்கும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இது வேலை செய்யும்போது சத்தமே போடாது. அதற்கு பதில், இனிய இசை ஓசை உங்களுக்கு கேட்கும். தேவை இல்லை என்றால், நீங்கள் அதையும் நிறுத்திவிடலாம். அதிகம் போனால் உங்கள் அறையில் மின்விசிறி சுற்றுவது போன்ற ஒரு ஓசை தான் உங்கள் காதுக்கு கேட்கும்."
நான் மனைவியிடம் கூறினேன் "நமது இல்லத்தில், சலவை இயந்திரம் வைத்திருக்கும் பால்கனி நல்ல பெரிய இடம். இப்போதிருக்கும் சலவை இயந்திரமும் வாங்கி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அதை இங்கே exchange offer ல கொடுத்துவிட்டு, இந்த புதிய இயந்திரத்தை வாங்கலாம். நீதானே இப்போது பாத்திரங்களை கழுகுகிறாய். இந்த இயந்திரம் வாங்கிவிட்டால் உனக்கு அந்த வேலையும் குறையும்தானே"
மனைவி சொன்னாள் "ஆமாம், நிச்சயமாக. ஆனால், இந்த இயந்திரம் எந்த அளவுக்கு நன்றாக வேலை செய்யும் என்று தெரியவில்லையே. இதை தயாரிக்கத் துவங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது" என்று என்னிடம் ரகசியமாகச் சொன்னதை, எங்களுக்குத் தெரியாமல் காதுகொடுத்துக் கேட்ட அந்தக் கடை முதலாளி " நீங்க கவலையே படவேண்டாம். இதற்கு மூன்று வருடங்கள் உத்தரவாதம் உண்டு. ஏதேனும் பெரிய அளவில் கோளாறு என்றால் , கம்பெனி உங்களுக்கு புதிய இயந்திரத்தை கொடுத்துவிடும்."
என் மனைவி கேட்டாள் "ஆறு வருடங்கள் ஆகிய எங்களது செமி ஆட்டோமேட்டிக் துணிதுவைக்கும் இயந்திரத்திற்கு மதிப்பு போட்டு எடுத்துக் கொள்வீர்களா?"
கடை முதலாளி "அந்த இயந்திரத்தை நாங்கள் ரூபாய் நாலாயிரம் மதிப்பு போட்டு எடுத்துக் கொள்வோம்."
நான் கேட்டேன் " இந்த இயந்திரத்தின் விலை என்ன?"
அவர் ஒரு கைக்கணக்கு கருவியை எடுத்து, ஐந்து நிமிடங்கள் அதில் பலவிதமான எண்களைப் போட்டு கூட்டி, பெருக்கி, வகுத்து, அதே வேலையை பலமுறை செய்துவிட்டு, எங்களிடம் அந்த கைக்கணக்கு கருவியை காட்டினார். அதில் 75000 என்று இருந்தது.
அவர் சொன்னார் "இதன் அசல் விலை, ஒரு லட்சத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டு ரூபாய். நீங்கள் தான் முதன் முதலில் இந்த எந்திரத்தை எங்களிடம் வாங்குவதால், வழக்கமாக நாங்கள் இந்த பொருட்காட்சியில் கொடுக்கும் 15 % தள்ளுபடிக்கு பதில் 25% தள்ளுபடி தருகிறோம். நீங்களே, இன்னொருவரை அழைத்து வந்தாலும், அடுத்து விற்பனையாகும் இரண்டாவது இயந்திரத்திற்கு 15% தான் தள்ளுபடி கிடைக்கும். முதன் முதலில் இந்த இயந்திரத்தை வாங்குபவருக்கே இந்த சிறப்பு தள்ளுபடி" என்றார்.
இதைக் கேட்டுவிட்டு, எங்கள் இருவரின் முகமும், நன்கு துவைத்த துணிகளைப் போல பளிச்சென்று ஆகியது.
என் மனைவி என்னைக் கொஞ்சம் ஓரமாக அழைத்துச் சென்றாள். பின்னால் பார்த்துக் கொண்டாள், கடை முதலாளி பின்தொடருகிறாரா என்று. என் மனைவி திரும்பிபி பார்த்ததும், பின்னாலேயே வந்துகொண்டிருந்த கடை முதலாளி, அங்கேயே நின்று விட்டார். என் மனைவி கேட்டாள் "நம்முடைய பட்ஜெட் மொத்தமே ரூபாய் நாற்பதாயிரம் தான். மேற்படி 35000 ரூபாய்க்கு என்ன பண்ணுவது?"
நான் சொன்னேன் "நான் பிஎப் (Providend Fund) லோன் ரூபாய் 40000 க்கு போட்டால், இரண்டு வாரங்களில் கிடைத்துவிடும். இப்போதே நாற்பதாயிரம் பணத்தை கட்டிவிட்டு, மீதி பணத்தை இரண்டு வாரத்தில் தருவதாகச் சொல்லுவோம்."

என் மனைவி வேகமாகச் சென்று, கடை முதலாளியிடம் "75000 என்பதை கொஞ்சம் குறைத்து ரூபாய் 70000 செய்துவிடுங்கள். எங்களுக்கும் கொஞ்சம் பணமுடை இருக்கிறது." என்று சொன்னபோது, அந்த முதலாளி "உங்களுக்கு 25 % தள்ளுபடி தருவதால், இந்த விற்பனையில் எனக்கு ஏற்கெனவே ரூபாய் 10000 வரை நஷ்டம் இருக்கும். இருப்பினும் நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காகக் கூடுதலாக ரூபாய் 2000 தள்ளுபடி தரமுடியும். இதுதான் கடைசி விலை" என்றார்.
நான் அவரிடம் சொன்னேன் "இப்போது என்னிடம் இருப்பது ரூபாய் நாற்பதாயிரம் மட்டுமே. இன்னும் இரண்டு வாரத்தில் நான் மீதி 33000 ரூபாயை கொடுத்துவிடுகிறேன்". கொஞ்சம் யோசித்துவிட்டு அவர் சொன்னார் " மன்னிக்கவும், நாங்கள் தவணை முறையில் எதையுமே விற்பதில்லை. 'மொத்தப் பணம் கொடுத்து இஷ்டப்பொருளை எடுத்துச்செல்', இதுதான் எங்கள் பாலிசி'.
இதை கேட்டுவிட்டு என் மனைவி சட்டென அவள் கழுத்தில் போட்டிருந்த தங்கச் செயினை கழட்டி எடுத்து அவரிடம் தந்தாள். " இந்தாங்க , இதன் விலை ஒரு லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். நாங்கள் மீதி பணத்தை கொடுத்த பின்பு, இதை எங்களுக்கு திருப்பிக் கொடுங்கள்" என்றாள். நான் திடுக்கிட்டுப் போனேன். என் மனைவியின் இந்தச் செயலை சற்றும் எதிர்பார்க்காத கடை முதலாளி "பரவாயில்லை. ஒன்று செய்யலாம். நான் இப்போதே இந்த நகையின் மதிப்பை கணித்துவிடுகிறேன். எனக்கு ஒரு ஐந்து நிமிடங்கள் கொடுங்கள்." என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு அறைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து "இதற்கான ரசீதை நான் தருகிறேன். நீங்கள் இப்போதே பணம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் விலாசத்தை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். நாளை கம்பெனி ஆட்கள் உங்கள் வீட்டிற்கு வந்து, இயந்திரத்தை பொருத்திவிட்டு, முன்னோட்டமும் செய்து காட்டுவார்கள்." என்று சொல்லிவிட்டு, அடுத்த பத்து நிமிடங்களில் தங்கச்செயினுக்கான ரசீது (அதன் எடையையும் துல்லியமாக குறிப்பிட்டு) மற்றும் துணி-பாத்திரம்-காய்கறி இயந்தித்திற்கும் பில் செய்து கொடுத்தார்.
நாங்கள் கிளம்புகையில் "இங்கே இன்னும் 10 நாட்கள்தான் எங்கள் ஸ்டால் இருக்கும். எனவே, இரண்டு வாரம் கழித்து நீங்கள் பணத்தை செலுத்த எங்களது மெயின் ஷோ ரூம் வாருங்கள்" என்று சொல்லிவிட்டு அவருடைய ஷோ ரூம் விசிட்டிங் கார்டை கொடுத்தார்.
சொன்னபடியே அடுத்த நாள் என் வீட்டில், கனடாவில் தயாராகிய பல வேலைகள் செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டு, முன்னோட்டமும் செய்து கட்டப்பட்டது. இயந்திரம் இயங்கும்போது மிகவும் மெலிதான ஓசையே கேட்டது. இசை பட்டனை தட்டிவிட்டால், இனிய இசை வந்தது. அந்த இசை வேண்டாமென்றால், MP3 இசை அடங்கிய பென் டிரைவ் போட்டால் நமக்கு வேண்டிய இசையை கேட்கலாம். இயந்திரம் வேலை செய்து முடித்தவுடன் இசையும் நின்றுவிடும். வேலை முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும் தனி இசையும் ஒலிக்கும். அதனுடன் இயந்திரத்தில் பச்சை விளக்குகள் எரியும். எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த மூன்று மாதம்வரை ஒரு பிரச்னையும் இன்றி இயந்திரம் வேலை செய்தது. ஒரு முறை எனக்குப் பிடிக்காத ஒரு உறவினர் என் வீட்டிற்கு வந்தபோது, அவரை தொலைவிலிருந்தே நான் பார்த்துவிட்டு என் மனைவியிடம் "நான் இயந்திரத்தின் உள்ளே ஒளிந்து கொள்கிறேன், அவரை சீக்கிரம் வெளியே அனுப்பிவிட்டு வந்து இதன் கதவை திறந்துவிடு" என்றபோது மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயினும் நான் வேகமாகச் சென்று அந்த இயந்திரத்தின் துணிதுவைக்கும் பகுதியில் ஒளிந்துகொண்டு அதன் கதவை மூடிக்கொண்டேன். நல்ல வேளை, கொஞ்சம் காற்று உள்ளே வந்ததால் மூச்சடைப்பு ஏதும் இருக்கவில்லை."
நான் இயந்திரத்தில் பதுங்கி இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் அதன் பக்கத்திலிருந்து என் உறவினர் பேசுவது மெலிதாகக் கேட்டது. " ஆஹா, இது இயந்திரமா இல்லை சொகுசாக படுத்துக்கொள்ளும் வழவழப்பான கட்டிலா. மிகவும் அருமை. நான் வாரம் ஒருமுறை என் பழைய துணிகளைக் கொண்டுவந்து இதில் போட்டு தோய்த்துக்கொள்கிறேன்."
அடுத்த ஒரு நிமிடத்தில், நான் இருந்த பகுதியில் கொஞ்சம் தண்ணீர் வரத்தொடங்கியது. கொஞ்சம் பழைய துணிகளும் அந்த இயந்திரத்தில் இருந்தது. நான் அதன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வரலாம் என்று பார்த்தால், அந்த உறவினரின் குரல் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் நான் கொஞ்சம் கொஞ்சமாக தோய்க்கப்பட ஆரம்பித்தேன். ஆ ஆ என்று நான் சத்தம் இட்டது யாருக்கும் கேட்கவில்லை போல் தெரிந்தது. இன்னும் இரண்டு நிமிடங்கள் என்னை பலபேர் சேர்ந்து உதைப்பது போலிருந்தது. அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாயிலும் மூக்கிலும் சோப்புத்தண்ணீர் போகத் தொடங்கியது. எனக்கு அப்போது செய்யமுடிந்த ஒரே காரியம் "கடவுளே, கட உள்ளே என்று நான் இதில் இருந்தது போதும். இப்போது என்னை காப்பாற்றி வெளியே விடு கடவுளே".
அடுத்த ஒரு நிமிடம் நான் பட்ட வேதனையை அந்தக் கடவுள் மற்றும் என்னைத் தவிர வேறு யாரும் அறிய வாய்ப்பே இல்லை. கொஞ்சம் உடலை குறுக்கிக் கொண்டதால் கர்ப்பப்பையில் இருக்கும் சிசுபோல நான் மற்ற துணிகளுடன் கசக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். என்ன ஆயிற்றோ தெரியவில்லை, திடீரென்று இயந்திரம் என்னையும் துணிகளையும் துவைத்து போட்டு அடிப்பது நின்றது.
மெல்லத் திறந்தது கதவு, அட நீங்க ஒண்ணு, பழைய சினிமா படமெல்லாம் இல்லை, என் உயிர்காத்த ஆருயிர் மனைவிதான் கதவை திறந்தாள். நான் அப்போதுதான் பிரசவம் ஆன ஒரு ஐம்பது வயது ஆண் குழந்தையைப்போல வெளியே விழுந்தேன்.
"அய்யோ, உங்களுக்கு ஒண்ணும் இல்லையே" என்று துடித்தாள் மனைவி. நான் வாயிலிருந்து சோப்புத் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டே "இப்போது தான் எனக்கு உயிரே வந்தது. கட்டிலுக்கு கீழே ஒதுங்குவேனே தவிர இனி ஒரு நாளும் இந்த இயந்திரத்திற்குள்ளே சென்று பதுங்க மாட்டேன்" என்று நான் சோப்பு தண்ணீருடன் வழிந்தபோது, என் மனைவி "அந்தக் கடை முதலாளியிடம் நாம் செல்லும்போது " இந்த இயந்திரம் துணிகளை மட்டும் அல்ல, மனிதர்களையும் கூட நன்றாக துவைத்து காயப்போடுகிறது" என்கிற செய்தியை சொல்லவேண்டும்" என்று சொல்லிவிட்டு, உங்க உறவினர் வந்து "எங்கே அவன், எங்கே அவன்" என்று எல்லா இடமும் தேடிவிட்டு, நம்முடைய இயந்திரத்தை பார்க்கிறேன் பேர்வழி என்று, எனக்குத் தெரியாமலேயே சுவிட்சை தட்டிவிட்டிருக்கிறார். இந்த இயந்திரம் சத்தம் போடாமல் இருப்பதால் எனக்கு இந்த இயந்திரம் வேலை செய்வதுகூட காதிற்கு கேட்கவில்லை. நல்லவேளையாக, அந்த உறவினர் சென்ற கையோடு, வெளியே கதவைக் கூடச் சரியாக மூடாமல் ஓடிவந்து இந்தக் கதவைத் திறந்தேன்.

அப்போது அறைகுறையாக காய்ந்திருந்த நான் "இப்போது என்னைத் துணி கொடியில் உலர்த்திவிடு. ஐந்து நிமிடங்களில் மொத்தம் காய்ந்துவிடுவேன்" என்றதும், முதலில் சிரித்தது என் மனைவியல்ல, என் உறவினர் தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-May-23, 12:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 76

மேலே