நற்காப்பின் தீச்சிறையே நன்று - பழமொழி நானூறு 336
நேரிசை வெண்பா
அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்
இமையாது காண்பினும் ஆகா(து) - இமையோரும்
அக்காலத் தோம்பி அமிழ்துகோட் பட்டமையால்
நற்காப்பின் தீச்சிறையே நன்று. 336
- பழமொழி நானூறு
பொருளுரை:
தேவர்களும், முற்காலத்து பாதுகாத்தும் அமிர்தம் கருடனால் கொள்ளப்பட்டமையால் நன்றாகக் காவல் செய்தலினும் யாரும் நெருங்க முடியாத தக்க இடத்தில் வைத்துக் காவல் செய்தலே நல்லது.
ஆதலால், பொருந்தாத இடத்தில் ஓர் அரிய பொருளை வைத்தால் கண்ணிமையாது காவல் செய்யினும் காவல் செய்ய முடியாதாம்.
கருத்து:
பொருளை, யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தில் வைத்துக் காவல் செய்தல் வேண்டும்.
விளக்கம்:
சிறை என்றது சிறை செய்யப்படும் இடத்தினை, அதற்குத் தீமையாவது யாரும் நெருங்க முடியாமையாம். இமையாது நோக்கும் இமையவர் பாதுகாத்தும் அமிர்தம் கோட்பட்டது என்ற தீச்சிறையின் இன்றியமையாமை குறிப்பிடப்பட்டது.
அமிழ்து கோட்பட்டமையாவது, கருடன் தன் தாயின் அடிமையை நீக்கும் பொருட்டுத் தேவர்கள் அமராவதியில் வைத்துக் காவல் செய்த அமிர்தத்தைத் தன் வலிமையால் கொண்டு சென்றான் என்பது.
'நற்காப்பின் தீச்சிறையே நன்று' என்பது பழமொழி.