அயிலாலே போழ்ப அயில் - பழமொழி நானூறு 337

நேரிசை வெண்பா

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில். 337

- பழமொழி நானூறு

பொருளுரை:

கண்களுக்கினிய மயில்கள் (தோகையை விரித்து ஓகையொடு) நடமாடும் சிறந்த மலைநாட்டை யுடையவனே!

எக்காலத்தும் இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பர்; அதுபோல, கற்றவாறு அமைந்த நற்குணமுடையோர்களது அறிவின் நன்மையை அறிவதாயின், அவர்களை விடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள்,

கல்வி ஒன்றே உடைய ஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

கருத்து:

நல்லார் அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்.

விளக்கம்:

இரும்பினை அதையொத்த கூர்மையற்ற வேறோர் இரும்பு கொண்டு பிளத்தல் இயலாதாகலின் நல்லார் நலத்தையும் அவரை ஒத்தோரால் அறிந்து கொள்ளக் கூடாது. ஆகவே பிறர் என்பது கல்வி, ஒழுக்கம் என்ற இரண்டிலும் ஒன்றே உடையாரும் இரண்டுமின்றி இழிந்தாரும் ஆவர்;.நல்லார் நலத்தை அவரினும் நல்லார் அறிவர்.

'இரும்பை இரும்பு கொண்டு துணித்தல் வேண்டும்.' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-23, 1:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே