ஆரவாரங்களும் ஆதங்கமும்

ஆரவாரங்களும் ஆதங்கமும்

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? இந்த கேள்வி ஏதோ சாதாரண மக்கள் நன்கு சந்திக்கும் போது கேட்டு கொள்ளும் கேள்வியாக போய் விட்டது. அப்படி கேட்கவில்லை என்றால் இன்னைக்கு யாரு யாருக்கும் மேட்ச்? இப்படியான கேள்வியாக வரும்.
அப்படி என்ன இருக்கிறது இந்த விளையாட்டில்? இந்த கேள்வி கடந்து முப்பது வருடங்களாக கேட்கப்பட்டு கொண்டிருக்கும் கேள்வி. இந்த விளையாட்டை போல் எத்தனையோ விளையாட்டுக்கள் மிக சுவாரசியமாக, அல்லது வீரத்துடனும், விவேகத்துடனும், இல்லையென்றால் தனித்து உழைத்து வெற்றி தோல்வி காண்பது, அட, அதை விடுங்கள் குத்து சண்டை, மல்யுத்தம், கத்தி சண்டை, ஜூடோ, கராத்தே இவை எல்லாம் உடலளவில் காயமோ அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியதாகும், இருந்தும் அதில் துணிந்து சாதிக்கும் வீர வீராங்கனைகளை எப்படி பாராட்டுவது?
நீச்சல் போட்டி, கூட்டு கடின விளையாட்டுக்களான வாலிபால், உதை பந்து,, ஹாக்கி போன்றவைகள் வீரர்களுக்கு தனிப்பட்ட உழைப்பையும், விவேகத்தையும் வரவழைக்கும் போட்டி ஆயிற்றே..!
இன்றைய அளவில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, கிரிக்கெட்டை முதன் முதலில் விளையாடிய இங்கிலாந்து கூட இன்றைய காலகட்டத்தில் நான்கு அல்லது ஐந்து ஆறாவதாகத்தான் வரும் போலிருக்கிறது. ஆசிய நாடுகளே இப்பொழுது முன்ணனியில் இருக்கிறது. அதுவும் பொருளாதார சூழலில் தற்போதுதான் மெல்ல மேலேறி வந்து கொண்டிருக்கும் இலங்கையில் இந்த விளையாட்டு மிகுந்த செல்வாக்கு பெற்று விட்டது, பாகிஸ்தான் சொல்லவே வேண்டாம், இந்தியாவுடன் ஒன்றாக இருக்கும் போதே அங்குள்ளவர்கள் இந்த விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார்கள். அதுவும் செல்வாக்கான மிகுந்த பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டாகத்தான் இருந்தது.
எப்படி வந்தது இந்த விளையாட்டுக்கு கிடைத்திருக்கும் புகழ், செல்வாக்கு? ஒரு காலத்தில் மேல் குடி மக்கள் மட்டும் விளையாண்டு கொண்டிருந்த விளையாட்டு இன்று பட்டி தொட்டி எங்கும் விளையாடப்பட்டு கொண்டிருக்கிறது.
மற்ற விளையாட்டுடன் தொடர்புடைய வீரர்களுக்கு இவர்கள் அளவுக்கு புகழும், செல்வாக்கும் கிடைக்கிறதா என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த விளையாட்டுக்கு மட்டும் அரசு தனிப்பட்ட கவனம் செலுத்தி வளர்த்து விட்டதோ என்னும் சந்தேகம் இயற்கையா மனதில் எழுகிறது என்றாலும், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அரசு எல்லா விளையாட்டுக்களையும் ஒன்றாகத்தான் அளவீடு செய்து ஊக்குவிப்பதை கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால்..!
தனிப்பட்ட, செல்வாக்கான, முக்கியமான பணக்காரர்களால் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டு உலகம் முழுவதும் இருக்கும் செல்வாக்கான, பணக்கரர்கள், நிறுவனங்கள் இவர்களாலேயே வளர்க்கப்பட்டு இன்று வீரர்களுக்கு புகழும், செல்வாக்கையும் பெற்று கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதில் கொடுக்கப்படும் விளம்பரம் போல் வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுப்பதில்லை. அது போல் கிரிக்கெட் வீர்ரகளை கடவுளாய் துதிக்கும் இரசிகர்கள் அவர்கள் விளையாடும் விளையாட்டை காண எவ்வளவு விலை கொடுத்தேனும் நுழைவு சீட்டு வாங்கி சென்று பார்க்கும் அளவுக்கு சென்று விட்டார்கள்.
இந்த விளையாட்டை இந்தளவுக்கு கொண்டு வந்த செல்வந்தர்கள் மிக சாதாரணமாக கொண்டு வந்து விடவில்லை. ஒரு காலத்தில் ஐந்து நாள் விளையாட்டாக இருந்ததை, ஒரு நாளாக்கி, இன்று அரை நாளூக்குள் முடிவு தெரியும்படி, இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும்படி கொண்டு வந்துள்ளார்கள். அதனால் இந்த விளையாட்டை இரசிக்கும் இரசிகைள் இதை பார்ப்பதில் ஆனந்தம் அடைகிறார்கள்.
இந்த விளையாட்டுக்கு கொடுக்கப்படும் அதீத விளம்பரம், துதிகள், இவை எல்லாம் பார்க்கும்போது நம் மனதுக்குள் ஒரு ஆதங்கம் ஏற்படுவது இயற்கையே. அதுவும் உள்ளூர் போட்டிகளை மாநில பெயரிட்டு அணியாக பிரித்து ஐ.பி.எல், என்று பெயரிட்டு அப்பப்பா., இதற்கான செலவுகள், விளம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆடம்பரங்கள், இந்த விளையாட்டுத்தான் இவனது வாழ்க்கையை நிர்மாணிப்பது போல் ஒரு கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி…
கண்டிப்பாய் வணிக உலகத்திற்கும், இதை நடத்தி கொண்டிருக்கும் இயக்குநர்களும், அதுவும் நேரடியாக, மறைமுகமாக வளர்த்து கொண்டிருக்கும் எல்லா நிறுவனங்கள், ஊடகங்கள், இவைகளை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
என்றாலும், மனதுக்குள் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுக்களை விளையாண்டு, சாதித்து கொண்டிருக்கும் வீர்ரகளை நினைக்கும்போது ஒரு ஆதங்கம் வரத்தான் செய்கிறது. இதற்கும் இந்தியா உலகில் பேர் சொல்லும் அளவுக்கு தடகளம், டென்னிஸ், செஸ், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்து சண்டை, கூட்டு விளையாட்டான கபடி, வாலிபால், உதை பந்து இன்னும் எத்தனையோ விளையாட்டுக்களில் சாதித்து இருந்தும் அந்த விளையாட்டுக்கள் இந்த அளவுக்கு நாட்டில் மக்களின் மனதில் ஊன்றி ஆர்ப்பாட்டத்தையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறதா என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும்போது, மனது என்னவோ ஆதங்கப்படத்தத்தான் செய்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Jun-23, 2:16 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 67

மேலே