சாதாரண மனிதர்களின் ஆசைகளும் துன்பங்களும்

சாதாரண மனிதர்களின் ஆசைகளும் துன்பங்களும்

இது புத்தரின் வார்த்தையை நினைவு படுத்தும் கட்டுரை என்று நினைத்து கொள்ள வேண்டாம் அவர் சொன்னது “ஆசையே துன்பத்துக்கு காரணம்” இது அப்படியல்ல, நம்முடைய ஆசைகள், துன்பங்கள் என்னவாயிருக்கும் என்பதை பற்றிய கண்ணோட்டம் மட்டுமே.
பெரும்பாலும் ஆசைகளை இரண்டாக பிரித்து சொல்லி விடலாம், அற்ப ஆசை, பேராசை. அற்ப ஆசை என்பதற்கு என்ன வரைமுறை என்று தெரியவில்லை. சின்ன சின்ன ஆசைகளா? அல்லது இதுவெல்லாம் ஒரு ஆசையா? என்று கேட்க கூடிய வரைமுறையா?
அதே போலத்தான் துன்பங்களும். சிறு துன்பம் என்பார்கள், பெரும் துன்பம் என்பார்கள். துன்பத்தில் என்ன சிறு துன்பம், பெரும் துன்பம்? பொதுவாக துன்பம் என்பதே நம்முடைய வலிதானே. அது உடலளவில் வந்தாலும் சரி மனதளவிலும் வந்தாலும் சரி.
பெரும் துன்பம் என்றால், பொருளிழப்பு, இயற்கையின் செயல்களான நமக்கு வேண்டியவர்களை நாம் இழப்பது, அல்லது பிறரால் நண்பர்களாலோ, அல்லது கூட பிறந்தவர்களாலோ ஏற்படுத்தும் துன்பம், பொருளிழப்பு, இன்னும் சில பல., இவைகள் பெரும் துன்பம் எனலாமா?
நாம் மிக மிக சாதாரணமானவர்கள், நம்முடைய துன்பம் என்பதோ ஆசை என்பதோ நிச்சயமாக பெரும் அளவில் இருக்காது என்று நம்புவோம். அதிகபட்சம் போனால் நாம் பெரும் பணக்காரனாக வேண்டும், எப்பொழுதும் நம் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
இதையே நேர்மாறாக பணக்காரனிடம் கேட்டு பாருங்கள், இந்த ஆசையை அவன் துன்பம் என்று சொல்லக்கூடும். பணம் வச்சிருக்கறவன் கிட்ட இருக்கற துன்பம் வேற எங்கயும் இருக்காது என்பார்கள். வீட்டில் பணம் இருந்தால்…! அதை விட துன்பம் வேறு எதுவுமில்லை என்பார்கள். எந்நேரமும் அதை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் பணம் கேட்டு வந்து நச்சரிப்பார்கள், இல்லை என்றும் சொல்ல முடியாது, கொடுத்தாலும் திருப்பி வராது, கேட்டால் அவனுக்கென்ன இந்த பணம் வந்துதான் நடக்கப்போகுதா என்று தத்துவம் பேசுவார்கள். அடுத்தவன் பணம்தானே, தத்துவத்திற்கு என்ன குறைச்சல்.
கொடுத்தவனுக்கோ சிறு துன்பம் அல்ல இது பெரும் துன்பம், சே இவனுக்கு கொடுத்து எப்ப திருப்பி தருவான்னு நினைச்சு நினைச்சே என் நிம்மதி போச்சு என்று புலம்புபவர்கள் பலர். (இங்கு நன்கு கவனிக்க பணம் என்பது அவர்களுக்கு துன்பம்) அதற்காக அதை சம்பாதிக்காமல் விட்டு விடுவார்கள் என்கிறீர்களா? அது மட்டும் கிடையாது. ஆசைகள் எப்பொழுதும் எவர் மனதிலும் தூங்குவதில்லை, நம்மை தூண்டி கொண்டேதான் இருக்கும்.
அடுத்து திருட்டு பயம், வீட்டில் பணமோ நகையோ இருந்தால் நம்மால் நிம்மதியாக வெளியூரோ வேறு எங்காவது சென்று வர முடியுமா? அட வங்கியில்தான் பத்திரமாக இருக்கட்டும் என்று பணத்தை போட்டு வைத்தால் “எவன் அதை நம்மை ஏமாற்றி எடுத்து விடுவானோ என்னும் பயத்தில் இருக்கிறோம். “உங்க பின் நம்பர் சொல்லுங்க” என்று தே ஒழுக கேட்டு இது போல பாவம் எத்தனை பேருடைய சேமிப்பு பணங்கள் களவாடப்பட்டு விடுகிறது.
இது சாதாரண ஆசைதான், வயதான காலத்தில் நமக்கு என்று கொஞ்சம் பணம் சேமிப்பு வேண்டும் என்று. ஆனால் அதை நம்மால் சேமிக்கவோ, வங்கியில் போட்டு பத்திரப்படுத்தவஓ இயலுகிறதா? தினம் ஒரு பயம், இது சிறு துன்பமா பெரும் துன்பமா?
சரி பணத்தை விடுங்கள் இந்த ஆசையை என்ன சொல்கிறீர்கள், ஒரு ஜிலேபி, அல்லது மைசூர்பாகு சாப்பிட வேண்டும், ஆனால் “சுகர்:’ என்று மருத்துவர்கள் எச்சரித்து இவர்களின் இந்த ஆசையை நிராசையாகவே வைத்திருப்பார்கள். இது எப்படிப்பட்ட ஆசை? மிக மிக சாதாரண ஆசை, வசதி இருந்தும் இதை சாப்பிட ஏங்கி போகிறவர்களுக்கு. அதே நேரத்தில் இவைகளை கண்ணால் கூட காணாமல் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு அற்ப ஆசையா? இல்லை பேராசையா?
ஒன்று நிச்சயம் பணம் உள்ளவர் இதை சாப்பிட்டு அதன் பின் பெறப்போகும் உடல் சம்பந்தப்ட்ட பிரச்சினைகளுக்கு அவர் படும் துன்பம் சிறு துன்பமா, பெரும் துன்பமா? அவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளது என்றாலும் அதற்காக அவர்கள் அந்த துன்பத்தை சகித்து அடுத்த ஆசைக்கு போய் அதனால் வாங்கும் துன்பத்தை எதிர் நோக்க தயாராய் இருப்பார்கள்.
அடுத்து நாம் இன்னவாகவேண்டும், இப்படியாகவேண்டும், நன்றாக படித்தோ, அல்லது தொழில் கற்றோ இந்த சமுதாயத்தில் பெரிய இடத்தை நோக்கி வரவேண்டும். இப்படிப்பட்ட ஆசைகள் பெரும்பாலான குடிமக்களின் மனதில் எப்பொழுதும் கனறு கொண்டேதான் இருக்கிறது. என்றாலும் இவர்களின் மெனக்கெடல் இதனை சிறு துன்பம் அல்லது பெரும் துன்பம் என்றும் சொல்லலாம், இந்த துன்பத்தை வெற்றிகரமாய் சமாளித்து உச்சியை அடைகிறார்கள். பலர் இந்த துன்பத்திற்கு பயந்து இருக்கும் இடம் போதும் என்னும் மன நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
மற்றபடி அவரவர் வயதுக்கு தகுந்தவாறு (சில நேரங்களில் வயதுக்கு மீறிய)
சின்ன சின்ன ஆசைகள், நிறைவேறி அவரவர்களை மகிழ்ச்சி படுத்தாலாம்,(ஏண்டா நிறைவேறிற்று என்று வருத்தப்பட்டு துன்பபடுவதும் உண்டு), நிறைவேறாமல் மனதுக்கு மிகுந்த துன்பத்தை தந்து விடலாம், அப்பாடி நல்லவேளை கிடைக்கலை, தப்பிச்சோம் என்றும் மகிழ்ந்து போகலாம்.
இப்படித்தான் ஆசைகளும், துன்பங்களும் அவரவர் தகுதிக்கேற்ப, அல்லது இடங்களுக்கு ஏற்ப மாறுபாட்டு கொண்டே இருக்கிறது.
மாடமாளிகையில் இருக்கவேண்டும் என்று ஒரு சாராரும், மாட மாளிகையில் இருப்போர் சாதாரண பங்களாவுல இருந்தாலே போதும் என்னும் மன நிலையிலும் இருப்பார்கள். இவர்களுக்கு இடையில் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். இந்த வித்தியாச கோட்பாடுகளுக்கு நடுவேதான் ஆசைகளும் நிராசைகளும், துன்பங்களும் நடைபெற்றபடி இருக்கின்றன.
இன்னொன்று கட்டாயம் சொல்லியாக வேண்டும். சின்ன சின்ன செயல்களின் வெற்றி கூட நம் மனதை சந்தோசப்படுத்தி விடுகிறது, அதே போலத்தான் கடுகத்தனை துன்பம் என்றாலும் அதை சந்திக்க பயந்து மனதை போட்டு அலைக்கழித்து போராடி கொண்டிருக்கிறோம்.
“மண்ணாசை” “பொன் ஆசை” “பெண் ஆசை” என்று சொல்வடையாக சொல்வார்கள். ஆனால் நாம் அந்தளவுக்கு கடின முயற்சியாக இதை பற்றி அலச வேண்டியதில்லை. இந்த கட்டுரையின் நோக்கம் என்பது சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு என்பது எப்படி ஆசையாக உருவெடுக்கிறது என்பதையும், அதே போல் அவர்களுக்கு வரும் துன்பம் மனதுக்குள் பெரும் துன்பமாகவே எண்ணப்படுகிறது என்பதை மட்டுமே.
அதே நேரத்தில் உண்மையிலேயே பெரும் துன்பமாக வசதி உள்ளவர்களுக்கும், வசதி இல்லாதவர்களுக்கும் ஏற்படும் கொடிய நோய்கள், அதனால் அவர்கள் படும் துன்பம், இவைகள் மனதை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய வாழ்க்கியயை இழக்க கூட தயாரான நிலையில் இருக்கிறோம். அதையும் தாண்டி மன உறுதியுடன் இதிலிருந்து மீண்டு வந்து சமுதாயத்தில் வெற்றி பெற்றவர்கள் நிறைய உண்டு.
எந்த நொடியில் என்ன நடக்கும் என்பதே தெரியாத வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்க்கிறோம். என்னதான் சவடாலாக மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது போல
“வருவதை தடுக்கமுடியாது” எதிர்கொள் என்று சொன்னாலும் நமக்கு என்று வரும்போது நாம் எப்படி இந்த துன்பத்தை சந்திப்போம் என்னும் பயம் எல்லோர் மனதிற்குள்ளும் இருந்து கொண்டே இருக்கும்.
கடைசியாக நாம் சொல்ல வருவது, நம்முடைய வாழ்க்கை நம் கையில் இல்லை என்றாலும் நம்முடைய செயல்கள் அனைத்தும் நம் கையில்தான் இருக்கிறது. அதை ஒழுங்கு படுத்தி கொள்ள முயற்சிக்கலாமே என்பதுதான். இதற்கான மன உறுதி நம்மிடம் இருக்கிறதா என்று கேட்டால் கிடைக்கும் பதில், குறைந்த பட்ச நபர்களிடமே இருக்கிறது என்னும் உண்மை மட்டுமே.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Jun-23, 2:17 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே