வாழைக்காய் உப்புறைத்தல் இல் - பழமொழி நானூறு 338
நேரிசை வெண்பா
இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற் றன்னையரும் நேரார் - செருவறைந்து
பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
வாழைக்காய் உப்புறைத்தல் இல். 338
- பழமொழி நானூறு
பொருளுரை:
இரண்டு கயல்கள் போன்ற மையுண்ட கண்களையுடைய இளமைப் பருவமுடையாளை அரசன் கொடுப்பாயாக என்று தூது விட்டால், இவள் தமையன்மாரும் கொடுத்தற்கு உடம்படாராகி போர்ப்பறை அறைவித்து வலிமையுடைய தோள்களைப் பிசைந்து நின்றார்கள் இனிமையாக இருப்பதல்லாமல் எக்காலத்தும் வாழைக்காய் இயல்பாய் உவர்ப்போடு கூடி நிற்றல் இல்லையாதலான் உறுதியாக வெற்றியைக் காணுதலுறுவோம்,.
கருத்து:
அரசன் மகள் வேண்டினானாக, அவள் தமையன்மார் சினந்து போருக்கு எழுந்தனர்.
விளக்கம்:
இது மகண் மறுத்து மொழிதல் என்ற துறை இஃது அகப்புறத்தின்பாற்படும்.
வாழைக்காய் உப்புறைத்தல் இல்லையாதல் போல, மறக்குடியிற் பிறந்த நாம் மறந்தவிர்ந்து ஒழிதல் இல்லை; ஆதலால், உறுதியாக வெற்றியையே காண்போம் என்று போருக்கெழுந்த சில மறவர்கள் கூறியதாகக் கொள்க.
'வாழைக்காய் உப்புறைத்தல் இல்' என்பது பழமொழி.