யாரும் குலக்குல வண்ணத்த ராகுப - பழமொழி நானூறு 340
நேரிசை வெண்பா
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப; ஆங்கே
புலப்புல வண்ணத்த புள். 340
- பழமொழி நானூறு
பொருளுரை:
தேன் போன்ற சொற்களை உடையாய்! ஒருவரது உள்ளத்தின் தன்மை ஆராய விரும்பும் ஒருவரால் ஆராயும் திறம் இல்லை;
நிலந்தோறும் தாம் வாழும் நிலத்திற்குத் தக்க தன்மையாயிருக்கும் புட்கள் அதுபோல, மக்கள் யாவரும் குலங்கள் தோறும் அவ்வக் குலத்திற்குரிய தன்மையை உடையவராய் இருப்பார்கள்.
கருத்து:
ஒருவரது குலத்தால் அவரது குணம் அறியப்படும்.
விளக்கம்:
ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து கண்டறிய முடியாது. அவரது குலங்கொண்டே குணம் அறியப்படும் என்பதாம். ஆகவே,குலமே தம்மையுடையாரது குணத்தை அறிவுறுத்துவதாம்.
'புலப்புல வண்ணத்த புள்' என்பது பழமொழி.

