இளமை இனிமை புதுமை நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் மு வாசுகி
இளமை இனிமை புதுமை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!
நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17.
தொலைபேசி 044- 24342810- 24310769
பக்கங்கள் 98 விலை ரூபாய்100
கவிஞர் இரா.இரவி அவர்களின் 29-வது நூலான ‘இளமை இனிமை புதுமை’ என்று தலைப்பிட்ட கவிதை நூல் உள்ளேயிருக்கும் கவிதைகளுக்கேற்ப கண்ணாடியாய் அட்டைப்படம் அமைந்திருக்கிறது. வானதி பதிப்பகத்தார் தேர்வு செய்து வடிவமைத்திருப்பது இந்நூலை வாங்குவதற்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ளது. பின்பக்க அட்டையை ஏர்வாடியார் தன் அழகான வரிகளில் அலங்கரித்துள்ளார். அதில் இரா.இரவி அவர்கள், அவரின் மணிமுடியில் மீண்டும் ஒரு மாணிக்கம் அணிந்திருக்கிறார் என்ற வரிகளோடு அவர் நிறுத்தியிருந்தால் அது சாதாரண கவிஞராக அவரைக் காட்டியிருக்கும். அதற்கு மேலும் ஒரு வரியாக ‘அழகாக இருக்கிறார்’ என்ற இரண்டே சொற்களின் ரசனையில் இமையத்தை தொட்டிருக்கிறார் என்பது, என்னைப்போன்ற கவிஞர்கள் வாசிக்கும்போது நிச்சயமாய் அதை உணர்வார்கள்.
நான் நினைத்த அத்தனை கவிதைகளையுமே ஏர்வாடியார் அவர்கள் எடுத்துக்காட்டி எழுதிவிட்டார். நான் எழுதுவதற்கு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. ‘என்னவள்’ கவிதையில் ‘கூந்தல் உள்ள குற்றாலம்’ என்ற வர்ணனை மிக அழகு. எவராவது சினிமா பாடலுக்கு இவ்வரிகளை திருடினாலும் வியப்பில்லை.
யாரும் பார்க்காத போது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம்
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர்
என்ற இயல்பான கவிதை வரிகளில் எல்லோருக்கும் புன்சிரிப்பை வரவழைத்து விட்டார் கவிஞர் இரா.இரவி.
ஓர் இருபது வயது இளைஞனைப் போல எழுதியிருக்கிறார் மாறாத ‘இளமை’ நினைவுகளின் ‘இனிமை’. இது தான் இரா. இரவியின் ‘புதுமை’.
தொடரட்டும் கவிதைகள்!
படரட்டும் இனிமைகள்!