ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி  நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் மு வாசுகி

ஹைக்கூ விருந்து!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

 நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !

வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17.
தொலைபேசி 044- 24342810-  24310769 

பக்கங்கள் 80 விலை ரூபாய் 80.

கவிஞர் இரா.இரவியின் இருபத்தியெட்டாவது நூலான ‘ஹைக்கூ விருந்து’ என்ற நூல் ‘கவிதையும் காட்சியும்’ என்ற இரண்டு அழகையும் நமக்கு அள்ளிக்கொடுத்து இருக்கிறது. ஹைக்கூ தளத்தில் இயங்கும் கவிஞர்கள் மிகவும் குறைவு. இந்தத் தளத்தில் இரா.இரவி அவர்கள் இடைவிடாது இயங்குபவர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளவர் என்பது மிகவும் போற்றுதற்குரியது.

குறைவான சொற்களில் நிறைவான கவிதைகளை எல்லோராலும் எளிதாக எழுதிவிட முடியாது. அதில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போலவே மிக அழகான, ஆழமான, எளிமையான, உண்மையான, மனதை விட்டு நீங்காத, மிகச்சிறந்த கவிதைகளை இந்நூலில் அளித்திருக்கிறார். இந்நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் அணிந்துரை மிக அருமை.

முதல் பக்கத்தில், முதல் கவிதையே மிக மிக அருமை.

உயராத கூலி, உயரும் விலைவாசி வேதனையில் ஏழைகள்!

என்ற கவிதையில் சமூகத்தின் இன்றைய நிலை நமக்குப் புரிகிறது.

சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது!

என்ற கவிதையை வாசிப்பவர்களுக்கு எள்ளல் சுவையின் வாசனை கூடவே பயணிக்கும்.

காப்பியம் காவியம்
      எல்லாம் ஒரே விலை
      பழைய காகித வியாபாரி!

இன்றைய யதார்த்த வாழ்வின் உண்மை நிலையைப் பேசியிருக்கிறது.

      தொட்டால் மட்டுமல்ல
      கேட்டாலும் அபாயம்
      மின் கட்டணம்!

என்ற கவிதை வரிகள் தேசிய கீதம் போல் அனைவருக்க்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.

      புள்ளிகள் உண்டு
      கோலம் இல்லை
      நட்சத்திரங்கள்!

என்ற வரிகள் மிக அழகு. புள்ளிகளே இல்லாத ரங்கோலி கோலத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு கோலமே இல்லாத புள்ளிகளால் இருந்தாலும் அழகில் அதைவிட மகிழ்விக்கும் ஆற்றலால் முன்னுரிமை பெற்று விடுகின்றன.

      எல்லாக் கவிதைகளுமே அருமையென்பதால் இதில் பிரித்து போற்றுவது மிகவும் சிரமம். எல்லாக் கவிதைகளையும் நானே எடுத்துச் சொல்லிவிட்டால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு சற்று சுவாரசியம் குறையும் என்பதால் இதை நிறைவு செய்கிறேன்.

      ‘ஹைக்கூ விருந்து’ என்ற தலைப்பிற்கேற்றவாறு விருந்தாக்வே அமைந்துள்ளது அத்தனை கவிதைகளும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

இன்னும் பல விருந்துகள் கொடுங்கள்
பயன் பெறுகிறோம் நாங்கள்

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (9-Jun-23, 8:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 39

மேலே