அமைதிக்கான தாலாட்டு

அமைதிக்கான தாலாட்டு
***************************
சிலநேரம் சிறுதவறு நேரும் - அதைச்
சிந்தித்துச் செய்வதில்லை யாரும்
பலரிடத்தில் நிகழுமிதைப் பாரும் - மனம்
பார்த்தறிந்து மன்னிக்கும் பாரும்
நிலவறிந்தா தேய்பிறையாய் மாறும் - அது
நினைத்தழுது விடுமோகண் ணீரும்
மலருடனே முள்ளிருந்து கீறும் - முழு
மனதுடனே நடந்ததென்றா கூறும்
*
விவசாயி மிதித்துழுவும் சேறும் - நாம்
விருந்துண்ண தந்துதவும் சோறும்
அவமான மென்கின்ற சேறும் - உளம்
அடையுமெனில் வாழ்வுமுன் னேறும்
சுவரோரம் குழந்தைகளும் கீறும் - அதன்
சுதந்திரத்தைப் பறிக்காதீர் யாரும்
தவறாகக் கருதுகின்ற தேதும் - மறு
தவறாலே சரியாக மாறும்
*
நேருகின்ற தவறுகளை மாற்று - உயர்
நேர்மையதை நெஞ்சமதில் மாட்டு
சேருகிற நிம்மதியைக் கூட்டு - ஒரு
சிலுசிலுப்புத் தேனள்ளி யூற்று
சீருலவல் விட்டுவிடுங் காற்று - பொய்
செய்திகளைக் கூட்டிவரக் கேட்டுப்
பேருவகை யாவதைநிப் பாட்டு -அது
பேரமைதிக் கானத்தா லாட்டு
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jun-23, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 44

மேலே