காணாமல் போன மாடு - அனுபவ கதை
காணாமல் போன மாடு - அனுபவ கதை
இந்த கதையிலும் திடுக்கிடல் திருப்பங்கள் கிடையாது
டீ கட நாயர் வூட்டு செவலை மாட்டை காணோம், இதுதான் எங்கள் குடியிருப்பில் பிரதானமான பேச்சு. இந்த பேச்சு தொடங்கும்போது மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது.
என்ன ஆச்சு? எல்லோரும் நாயர் வீட்டு ஆட்களிடம் கேட்டு கொண்டிருந்தாரகள். நாங்கள் எங்கள் நண்பனும், அவர் மகனுமாகிய சுகுமாரனிடம் விசாரித்த போது, தெரியலை, காலையில ஆறு மணிக்கு மேச்சலுக்கு விட்டுட்டு வந்தேன், அஞ்சு மணி ஆச்சுன்னா டாண்ணு முன்னாடி வந்து நிக்கும், போய் தேடி பாக்கலாமுன்னா இப்ப வேணா இருட்டிடுச்சு, அப்படீங்கறாரு அச்சன். சுகுமார் எங்களிடம் சொல்லி கொண்டிருந்தான்.
அவன் எங்கள் மாணவர்கள் பட்டாளத்தில் ஒரு அங்கம், எல்லோருமே ஒன்பது பத்து படிக்கும் மாணவர்கள். அவனுக்கு ஒன்று என்றால் நாங்கள் சும்மா இருப்போமா.! நீ மட்டும் தனியா போகாதடா, நாங்களும் வர்றோம், அவனிடம் சொல்ல அவன் முகம் மலர்ந்தது.
ஆனால் எங்கள் பெற்றோர்களும் அவன் “அச்சன்” சொன்னதையேத்தான் சொன்னார்கள். இப்ப இருட்டிடுச்சு, காட்டுக்குள்ள இருக்கற மிருகங்கள் வெளிய வர்ற நேரம்.
உண்மைதான், நாங்கள் குடியிருந்தது காட்டுக்குள் ஒரு பகுதி. குடியிருப்புக்கள் அனைத்துமே மின்வாரியத்துக்கு சொந்தமானவை. அருகிலேயே தொழிலாளர்கள் குடியிருப்பும் இருக்கும். இரண்டிலும் குடும்பங்கள் வசிக்கிறது. தொழிலாளர்கள் குடியிருப்பில் கிட்டத்தட்ட ஐநூறு குடும்பங்களுக்கு மேல் இருக்கும் அந்த குடியிருப்புக்கு எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு பள்ளிக்கூடம், போஸ்ட் ஆபிஸ், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேசன், டீ கடை, மளிகை கடை, சலூன் கடை எல்லாமே இருக்கிறது. பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் குடும்பங்கள் பத்திருபது குடும்பங்கள், போஸ்ட் ஆபிஸ், தந்தி அலுவலகம் மருத்துவமனை, போலீஸ் ஸ்டேசன், இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் குடும்பம், இப்படி நிறைய மக்கள் புழக்கம் இருக்கும் பொள்ளாச்சியில் இருந்தும் வால்பாறையில் இருந்தும் நாளொன்றுக்கு நான்கு முறை பஸ் வந்து திரும்பி செல்லும். பொள்ளாச்சியில் இருந்து இரவு வரும் பஸ் தங்கி காலை ஆறு மணிக்கு கிளம்பும். அடுத்து ஒன்பது மணிக்கு வால்பாறையில் இருந்து பஸ் வரும்.
இப்படி பரபரப்பாகவும் போக்குவரத்து இருந்து கொண்டிருந்தாலும், இவை அனைத்துமே வனத்துறையின் கண்காணிப்பில்தான் இருக்கும். மின்சார வாரியத்தில் அணை கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் இத்தனை ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும், இவ்வளவு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுத்திருந்தது. இது போக எட்டாம் வகுப்புக்கு மேல் நாங்கள் வால்பாறை சென்று படிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஸ்கூல் பஸ் வசதியை மின்சார வாரிய அலுவலகம் ஏற்படுத்தி கொடுத்திருந்தது. அணை கட்டும் பணி எப்பொழுது முடிவடைகிறதோ அதற்கு பிறகு அந்த இடங்களை வனத்துறையிடம் ஒப்படைத்து விடவேண்டும் மின்துறை. அணை மற்றும், ஊழியர்கள் குடியிருப்புக்கள், மேலும் ஒரு சில இடங்களை மட்டும் மின்வாரிய பராமரிப்பு பணிக்கு விட்டு கொடுத்து விடுவார்கள் வனத்துறையினர். மற்றபடி அந்த காட்டு பகுதி முழுவதுமே வனத்துறையின் கட்டுப்பாட்டை சார்ந்ததாகி விடும்.
நாங்கள் காலையில் எழுந்து காட்டுக்குள் போய் நாயர் கடை செவலை மாட்டை
தேடி செல்லலாம் என்று முடிவு செய்து இரவு உறங்க போனோம். எங்களது குடியிருப்புகளின் அமைப்பு “லைன் வீடு” என்பார்கள். அதாவது ஒரு வரிசையில் ஏழு வீடுகள் இருக்கும். மலைப்பகுதியாக இருப்பதால் லைன் வீடுகள் அடுக்கடுக்காய் கட்டியிருப்பார்கள். நடுவில் இருபக்க “லைன் வீடுகளுக்கும்” சென்று வர படிக்கட்டுகள் இருக்கும் படிகள் சரியாக வண்டி பாதையை தொட்டு கொண்டிருக்கும். வண்டி பாதையில் கடைகள், அமைந்திருக்கும்.
இதனால் ஒரு வசதி குடியிருப்புக்கள் மேடான பகுதியில் இருந்ததால் வீட்டில் இருந்து பார்த்தால் வண்டி பாதையில் ஆட்களின் நடமாட்டம் ஓரளவு தெரியும். அது மட்டுமல்ல எங்கள் ஒவ்வொரு லைன் வீடுகளும் “பாரத விலாஸ்தான்” எல்லா மதத்தவரும் குடியிருப்பார்கள். பல மொழிகள் பேசுபவர்களும் குடியிருப்பார்கள். இதனால் ஏழு வீட்டுக்க்கும் எல்லா பண்டிகைகளில் தனி கவனிப்பு கிடைத்து விடும்.
காலையில் அனைவரும் நாயர் கடையில் கூடும்போதுதான் முகமது கனி சொன்னான், இராத்திரி எங்க வீட்டுலயும் ஒரு மாடு வரலை.
ஏண்டா நேத்து சாயங்காலமே நாயர் வூட்டு மாட்டை காணோமுன்னு சொல்லும்போதே தெரியலையா?
இல்லியே, அப்ப எல்லா மாடும் வந்துடுச்சுன்னு நினைச்சு கொண்டு போய் அடைச்சுட்டோம். காலையில வெளிய வரும்போதுதான் சாம்பல் கலர் மாடு இல்லையின்னு தெரிஞ்சுது.
சரி கிளம்புவோம், அவங்க மாட்டையும், உங்க மாட்டையும் சேர்ந்தே தேடுவோம்.
அணைக்கட்டு பகுதியை தாண்டி காட்டு வழிக்குள் நுழைந்தோம். இவ்வளவு தூரம் மாட்டை மேய விட்டா எப்படி? சலித்து கொண்டேன்.
அதுக்கென்னப்பா பண்ண முடியும்? முன்னாடித்தான் மேய விட்டுட்டு போறோம், அதுக மேச்சலுக்கு கிடைக்குதுன்னு காட்டுக்குள்ள புகுந்துடுதுங்க. அதுக கழுத்தை காலோடு கட்டவும் முடியாது, இல்லை ஒரு இடத்துல கட்டி வைக்கவும் முடியாது, என்ன பண்ணறது?
நாங்கள் உள்ளே செல்ல, செல்ல, காடுகள் அடர்ந்து கொண்டே வந்தது. அணை கட்டும் பகுதியில் இருந்து மெல்லியதாய் கேட்டு கொண்டிருந்த சத்தம் கூட சுத்தமாய் இல்லை. எங்கும் அமைதி, அவ்வப்பொழுது ஒரு சில மிருகங்களின் உறுமல், சல சல வென தலைக்கு மேல் சத்தம் வர எல்லோரும் அரண்டு மேலே பார்க்க மரங்களின் மேலிருந்த கருங்குரங்குகள் எங்களை உறுத்து பார்த்தபடி.
நாங்கள் நடந்து கொண்டிருந்த பாதையை ஓட்டி சர சர்வென பாம்பு ஒன்று எங்களை கடந்து போனது.
அதுவரை எங்களிடம் இருந்த தைரியம் எல்லாம் காணமல் போயிருந்தது. எதிரே ஒன்றும் தெரியாத அளவுக்கு பச்சை மரங்களும் செடிகளும் அடர்த்தியாய் இருந்தது. இந்த புதரில் இருந்து ஏதாவது ஒரு மிருகம் பாய்ந்து வந்தால், இல்லை மலைப்பாம்பு தலைக்கு மேல தொங்கிட்டு இருந்தா, நினைக்கும்போது எங்கள் மனசு படக் படக்கென அடிக்க ஆரம்பித்தது.
வேணாம்ப்பா போயிடலாம், முணங்கினேன். சுகுமாரன் என் முகத்தை பார்த்தவன் சரி விடுங்க போயிடலாம், மெல்ல திரும்ப எத்தனித்தோம்..அப்பொழுது சற்று மேடாய் இருந்த இடத்தில் கறுப்பாய்..! அது என்ன?
சுகுமாரன் அது எங்க செவலை கழுத்து மேல போட்டிருந்த கயிறுப்பா, பரபரப்பாய் அதை நோக்கி ஓடினோம். கறுப்பு கயிறு மட்டும் அங்கிருக்க சுற்று முற்றும் புதர்கள் கலைந்தது போல் இருந்தது.
கனி அதை பார்த்தவுடன் சொன்னான், இங்க வச்சுத்தான், ஏதோ ஒண்ணு மாட்டை அடிச்சிருக்கணும், பாரு மாடு சுத்தி சுத்தி புதருக மேல உருண்டிருக்கு, அவன் சொல்லி கொண்டிருந்த போழுது…..
சற்று தள்ளி “சல சல” வென சத்தம்.
எங்கியோ தண்ணி ஓடிக்கிட்டிருக்கு, ஒருவன் பயத்தில் மெல்ல முணங்கினான். வாங்கப்பா அங்க போய் பார்ப்போம். வந்திருந்த அனைவர் மனத்துக்கும் பயம் ‘டிரம்ஸ் வாசிக்க’ அங்கு சென்று பார்த்தோம். ஒரு பக்கம் நீர் ஓடையாய் வழிந்து அகலமான குட்டை ஒன்றில் விழுந்து கொண்டிருந்தது.
தண்ணி தாகமா இருக்குப்பா, எல்லோரும் வழிந்து கொண்டிருந்த தண்ணீரை இரு கைகளை ஏந்தி ‘மடக் மடக்கென’ குடித்தோம். இந்த சூழ்நிலை கொடுத்திருந்த பய உணர்வில் எல்லோருடைய நாக்கு எல்லாம் வறண்டு போயிருந்ததால் தண்ணீர் தாராளமாய் உள்ளே சென்றது. அப்படி குடிக்கும்போதுதான் முகமது கனி கையை காட்டினான். அதோ அங்க கிடக்குது எங்க சாம்பகலர் மாடு.
வேகமாய் அங்கு போக இருந்த என்னையும் மற்றொருவனையும், சட்டென தடுத்து நிறுத்தினான் முகமது கனி. வேண்டாம், பக்கம் போக வேண்டாம். புலி அடிச்சு போட்டிருக்கும், இங்க எங்கியாச்சும் பக்கத்துலதான் இருக்கும், வாங்க பேசாம போயிடலாம். அவனின் பேச்சு அப்பொழுது எனக்கு வியப்பாய் இருந்தது. ஏண்டா இவ்வளவு பெரிய மாடு, அதுவும் உங்க மாடு, இப்படி கிடக்குது, பார்க்க போக வேண்டாங்கறே.
முட்டாள்தனமா பேசாதே, அந்த மாட்டு பின்னாடி பாரு சதைங்களை பிச்சு தின்னுருக்கு, ஒரு வேளை குட்டிகளை கூட்டி வர போயிருக்கலாம், நாம அங்க போகவும், அதுக அங்க வந்தா நாம ஒருத்தன் கூட உயிரோட போக முடியாது.
அதுவும் உண்மைதான், தலையாட்டினேன். புலி எங்கோ இருக்கிறது, அதுவும் அருகில் எங்காவது, எங்கள் மனம் பயந்த பயம். சொல்ல வார்த்தைகள் இல்லாமல் இருந்தது. வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
போகும்போது இருந்த பேச்சு, தைரியம் எதுவுமில்லாமல் எப்படியாவது இந்த இடத்தை விட்டு போனால் போதும் கிட்டத்தட்ட ஆறு பேர் வாயே திறக்காமல் வேகமாக இல்லையில்லை ஓட்டமாய் நடந்தோம்
திடீரென ஒருவன் கூவ, எல்லோரும் மிரண்டு அவனை பார்க்க அவன் ஒரு இடத்தை கையை காட்டினான். கிட்டத்தட்ட ஆறடியில் மரம் ஒன்று நின்றிருக்க அதனை மூடியது போல் காட்டு புதர்கள் இருந்தது, அதன் மேல் மாடு ஒன்று பாதியளவு சதைகள் தீர்ந்து போய்..மிச்சம் தொங்கியபடி கிடந்தது.
ஐயோ அது எங்க செவலை மாடுதான், அவன் சொல்லி விட்டு அழுக ஆரம்பிக்கு முன், எங்கள் கூட வந்த ஒருவன் “முதல்ல எல்லோரும் இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்”, அவன் வந்த வழி ஓட ஆரம்பிக்க என்ன ஏது என்று கேட்காமல் அனைவரும் தலைதெறிக்க, அவனை பின் தொடர்ந்து அந்த காட்டை விட்டு ஓட ஆரம்பித்திருந்தோம்.
அணைகட்டும் இடத்தின் ஆரவாரமும் கூச்சலும் கேட்ட, இடம் வந்த போதுதான் மனசுக்குள் ஒரு தைரியம் வந்து நின்றோம்.
டேய் மாடுக தண்ணி குடிக்க வந்திருக்கும், முதல்ல உன் மாட்டை அடிச்சு தின்னுகிட்டிருக்கும் போதுதான் கனி மாடு கண்ணுல பட்டிருக்கும், அதையும் அடிச்சு போட்டுட்டு அப்புறம் சாப்பிடலாமுன்னு போயிருக்கும்னு நினைக்கிறேன். கூட வந்தவர்களில் ஒருவன் சொல்லி கொண்டிருந்தான்.
இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், இரண்டையும் வேறு வேறு விலங்கு அடித்து போட்டிருக்கலாம், ஒருவரும் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் மனதுக்குள் இதைத்தான் நினைத்து கொண்டோம். வேறு என்ன செய்வது?