காட்டு வழி பாதையில் ஒரு பணி- அனுபவ கதை

காட்டு வழி பாதையில் ஒரு பணி- அனுபவ கதை
இது கதைக்குரிய எந்த திருப்பங்கள், திடுக்கிடல்கள் எதுவும் கிடையாது , சாதாரண அனுபவங்கள் மட்டுமே

மின்வாரிய அலுவலக வாசலில் காத்திருக்கிறேன். இன்னும் அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வரவில்லை. மணி ஒன்பது ஆக போகிறது. அவர் வந்த பின்னால் இந்த வேலையை தொடங்கலாம் என்று அவர் அனுமதி கொடுத்தால் தான் நான் ஆட்களை அழைத்து சென்று வேலையை தொடங்க வேண்டும். வெயில் அடித்த போதும் குளிர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
சற்று தள்ளி நான்கு ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லாருமே காட்டு குடி மக்கள். எங்கள் ஊரில் காட்டுக்குள் வசிப்பவர்கள். இந்த வேலைக்கு இவர்கள்தான் லாயக்கு. வேலை முழுவதுமே காட்டு பாதை வழி என்பதால் இவர்களை அழைத்து வந்திருக்கிறோம்.
முதலாளி என்னிடம் இவர்களை ஒப்படைத்து இரண்டு வாரத்துக்குள் முடித்து விட்டு கூட்டிக்கொண்டு வந்து விடு என்று அவர் கிளம்பி விட்டார். இது போல் நான்கு இடங்களில் அவருக்கு வேலை நடந்து கொண்டு இருக்கிறது.
வேலை என்னவோ சுலபமாக தோன்றும், ஆனால் விடாமல் பெய்யும் மழை, குளிர், காட்டுக்குள் இருக்கும் அட்டைபூச்சி இவைகளை சமாளித்து இயந்திர வண்டிகள் சென்று,வந்து கொண்டிருக்கும்,பாதையின் இருபுறமும் வளர்ந்து நின்றிருக்கும் புதர்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். வால்பாறையில் இருந்து ஷேக்கல்முடி எஸ்டேட் போகும் நெடுஞ்சாலை இடையில் இருந்து மானாம்பள்ளி என்னும் ஊருக்குள் செல்லும் பாதை. ஆரம்பத்திலேயே வனகாவல் மற்றும் செக்போஸ்ட் இருக்கும். அவர்கள், மின்வாரிய அலுவலர்களை தவிர மற்றவர்களை அனுமதி கொடுத்தால்தான் ஊருக்குள் வர முடியும்.
பெரும்பாலும் இங்கு மின் வாரிய அலுவலர்கள் குடியிருப்பு மட்டும்தான். இடையில் ஆறேழு கிலோ மீட்டரில் மானாம்பள்ளி எஸ்டேட் வரும். அதையும் தாண்டித்தான் இந்த குடியிருப்புக்குள் வரவேண்டும். இங்குதான் நீர் மூலம் மின்சாரம் தயாரித்து கொண்டி ருக்கும் ஜெனரேட்டர் மற்றும் பவர் ஹவுஸ் இருக்கும்.
அதை கவனிக்கவும் செயல்படுத்தவுமே அந்த ஊழியர்கள் அங்கு இருக்கின்றனர். மற்றபடி இங்கு தங்கி இந்த பாதை முழுவதும் சீர் செய்து கொடுக்கும் பணியை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
திடீரென அலுவலகம் பரபரப்பானது, இஞ்சீனியர் வந்து விட்டார். விறு விறுவென உள்ளே சென்றார். உள்ளிருந்து யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. வர சொல்லி ஒரு ஊழியர் வந்து சொன்னார்.
என்னை பார்த்தவுடன் என்ன? புருவத்தை உயர்த்த, சார் நாங்க ரோட்டுல இருக்கற புதரை வெட்டற ஆளுங்க, நீங்க பர்மிசன் கொடுத்தீங்கன்னா நாங்க வேலைய ஆரம்பிச்சிருவோம், சொன்னேன்.
நீங்க?
நான் சூப்பர்வைசர்.
ஏன் உங்க முதலாளி வரமாட்டாரா?
சார் அவருக்கு நவமலையில நாளைக்கு ஒரு டெண்டர் இருக்கு, அதனால என்னைய பார்க்க சொல்லிட்டு போயிருக்காரு.
சட்டென எழுந்தவர் எங்கோ வேகமாக வெளியே சென்றார். ஜீப் ஒன்று நின்றிருக்க அதில் ஏறி பவர்ஹவுஸ் போப்பா என்று டிரைவரிடம் சொல்வது எனக்கு கேட்டது.
சரி இன்னைக்கு வேலை அவ்வளவுதான், ஆள் பழி வாங்குகிறான் என்று புரிந்தது. ‘ஈகோ பிரச்சினை’, முதலாளியே இவருக்காக காத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறான், மனதுக்குள் புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தேன். இவர் அனுமதி இல்லாமல் வேலையை ஆரம்பிக்க முடியாது. அவ்வளவுதான் எத்தனை வருடமானாலும் “பில் பாஸாகாது”. இவர் கையெழுத்து போட்டால்தான் எல்லாமே நடக்கும்.
வெளியே வந்தேன். நால்வரும் என் முகத்தை பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். இவர்கள் எங்கள் ஊர் காட்டில் வசித்து கொண்டிருக்கும் காடர்கள், வேலை இருந்தாலும், இல்லையென்றாலும் இன்றைய சம்பளம் கொடுத்து விடவேண்டும். இதுதான் பேச்சு. இவர்களை மேல் ஆழியாறில் இருந்து பஸ்ஸில் அழைத்து வந்திருக்கிறோம். இன்றைக்கு வேலை ஆரம்பிக்க முடியாவிட்டாலும் இவர்கள் போய் எங்காவது புகையை இழுத்து உட்கார்ந்து விடுவார்கள். புகை இழுக்க ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான், போதை தலைக்கேற கூடி பேச ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் அவர்களுக்குள் சண்டை வந்து அடித்து கொள்ளும் அளவுக்கு போய் விடும்.
என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. இந்த ஆட்களை சமாளித்து வேலை வாங்க கூடிய அளவுக்கு எனக்கு “திரண்” இருக்கிறதா என்பதும் தெரியாது. நானே இருபது வயதில் இருந்தேன். ஆளும் ‘சள்ளையாய் இருப்பேன்’. அவர்கள் நாலு பேருமே காட்டு மக்களுக்கே உரிய பலமும் வளர்த்தியும் கொண்டவர்கள்.
நான் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஒருவன் மட்டும் எழுந்து வந்தான், என்னாச்சு? நாங்க போகட்டுமா?
அந்த அதிகாரி மேல் இருந்த கோபம் இவன் மேல் பாய தயாரானவன் போல் வாயை திறக்க போனவன், முதலாளி சொல்லியிருந்த வார்த்தை ஞாபகம் வர அமைதியானேன். “ சுரேசு இவனுங்க முரடனுங்க, பார்த்து பேசி வேலை வாங்கு” கோபிச்சுகிட்டு போயிட்டானுங்கன்னா வேற ஆளுங்களை கூப்பிட்டு வரமுடியாது. உள்ளுருக்காரனுங்களை கூப்பிட்டியின்னா சம்பளம் ஏத்தி கேப்பானுங்க, அப்புறம் அவங்க ஒண்ணு சேர்ந்து நம்மளை கவுத்து விட பார்ப்பானுங்க”
‘மாடா’ அவனை அழைத்து மத்தியானம் ஆயிடும்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம், பதில் சொன்னேன்.
அரை மணி நேரம் கழித்து வந்த இஞ்சீனியர் உள்ளே நுழையும் முன் என்னை பார்த்து சரி வேலைய ஆரம்பியுங்க, சொல்லி விட்டு சென்று விட்டார்.
அப்பா.. நேரம் பத்தரையை தொட்டிருந்தது. பரவாயில்லை, ஆரம்பிப்போம் மனதிற்குள் நினைத்து கொண்டு, நால்வரையும் அழைத்து கொண்டு பாதை தொடங்கும் ஊரின் தொடக்கத்தில் இருபுறமும் இருந்த புதர்களை வெட்டி எடுக்க சொன்னேன்.
நால்வரும், அந்த பாதை முழுக்க அடர்ந்திருந்த புதர்களை பார்த்தவ்ரகள் அதற்குள் சென்று உட்கார்ந்து கொண்டனர்.
நான் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்று கொண்டு வந்திருந்த, அருவாள், கத்தி, கவ்வை கம்பு, இவைகளை கையில் எடுத்து கொண்டு இங்கு வந்த போது ஒருவரையும் காணவில்லை.எங்கு போனாங்கள்? “மாடா’ மாடா” உரக்க சப்தமிட்டேன்.
“வருது” சப்தம் அந்த அடர்ந்த புதருக்குள் இருந்து கேட்டது.
நேரமாச்சு, சத்தமாய் சொன்னேன். இந்த வேலை எல்லாம் காலை ஏழு மணிக்குள் ஆரம்பித்து மாலை நாலு மணிக்குள் முடித்து, ஐந்து அல்லது ஐந்தரைக்குள் தங்குமிடம் வந்து விடவேண்டும். இல்லையென்றால் ஐந்து மணிக்குள் இருட்டு சூழ்ந்து விடும். யானை கூட்டங்களூம், புலி, சிறுத்தை நடமாட்டமும் ஆரம்பித்து விடும். அதை விட அடர்ந்த மரங்களில் இருக்கும் குரங்கு கூட்டங்கள் நம்மை வேலைய செய்ய விடாது. தனியாக யாரும் இயற்கை உபாதை கழிக்க கூட ஒதுங்க முடியாது. அதனால்தான் இந்த வேலைக்கு இவர்களை கூட்டி வந்தது.
புதரில் இருந்து வெளியே வந்த நால்வரும் ஒரு நிலையில்லாமல் இருப்பதாக பட்டது.” மப்பு ஏத்திகிட்டானுங்க, மனம் நினைத்தது. என்றாலும் அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல், “இந்தா அறுவாளுங்க” கொடுத்தேன்
ஆளுக்கொன்றாய் எடுத்தவர்கள் மளமளவென ஒவ்வொரு புதருக்குள் நுழைந்து வெட்ட ஆரம்பித்தனர். இனி வேலை அதுபாட்டுக்கு போகும் நான் மெல்ல அந்த பாதையின் ஓரமாய் இருந்த கல்லின் மீது உட்கார்ந்து கொண்டேன்.
இன்னும் ஒரு ‘செமஸ்டர்’ பாக்கி இருக்கிறது, அதை முடித்து கோயமுத்தூருக் குள்ளயே வேறு வேலை தேட வேண்டும், அதுவரை இந்த மாதிரி காட்டுக்குள்ளேயே இருக்கணும், இப்படி ஒவ்வொரு ‘செமஸ்டர்’ லீவுலயும் வேலை செஞ்சு சம்பாரிச்சு வீட்டுக்கு கொடுத்தாலும் பத்தமாட்டேங்குது, என்ன பண்ணறது? அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்கு போய் கோயமுத்தூருக்கு அனுப்பிச்சு நம்மளை படிக்க வைக்கிறது ன்னா? அதுவும் மாசமானா இரண்டாயிரம் ரூபா உருட்டி பிரட்டி அனுப்பிச்சிடறாங்களே..!
கையில் இருந்த பழைய வாட்சில் மணி பார்க்க மதியம் ஒன்றை காட்டியது. கிட்டத்தட்ட நடை தூரம் இருபக்க புதர்களை வெட்டி சுத்தம் செய்தபடி போய்க் கொண்டிருந்தார்கள் நால்வரும்.
அவர்களிடம் எதுவும் பேச்சு வச்சுக்க கூடாது, அவனுகளுக்கா பசிச்சா சட்டுனு அருவாளை தூக்கி போட்டுட்டு வந்துடுவானுங்க. அப்ப சாப்பாடு தயாரா இருக்கணும் இல்லையின்னா அவ்வளவுதான், கிளம்பிடுவானுங்க, மனதுக்குள் யோசனை வர நானே போயி தங்குமிடத்தில் ஆக்கி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து விடலாம் என்று வேகமாக நடந்தேன்.
எப்படியோ இரண்டு முறை தடுமாறி கொண்டு வந்து சேர்த்த சாப்பாடு, குழம்பு அப்படியே பாத்திரத்தோடுதான், கொண்டு வந்திருந்தேன். அலுமினியதட்டும் நாங்கைந்து கொண்டு வந்திருந்தேன். அனைத்தையும் பாதை ஓரத்தில் வைத்த நொடி நால்வருக்கும் எப்படித்தான் தெரிந்ததோ, ஒரு சேர வந்து விட்டார்கள்.
அவனவனுக்கு தேவையானதை அள்ளிப் போட்டு குழம்பையும் ஊற்றி கொண்டவர்கள், மளமளவென சாப்பிட ஆரம்பித்து விட்டரகள்.
அரை மணி நேரத்துக்குள் அவர்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உள்பக்க புதருக்குள் போய் உட்கார்ந்து அவர்களின் காட்டு மொழியில் உரக்க பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஏதாவது மிச்சம் வச்சிருக்கான்களா? பார்க்க சுத்தமாக துடைத்து வைத்திருந்தது.
என்ன செய்வது? நான் போயி சாப்பிட்டுட்டு வாறேன் சத்தமாய் சொல்லி விட்டு எல்லா பாத்திரங்களையும் கையில் எடுத்து கொண்டு தங்குமிடம் வந்தேன்.
அம்மாவும், அப்பாவும் பார்த்தார்கள் என்றால், ஏன் ஸ்கூலுக்கு போயிட்டிருக்கும் தங்கை பார்த்தாலும் கூட ஓடி வந்து எல்லாவற்றையும் வாங்கி கொண்டு போய் விடுவாள். அம்மா ஏண்டா உன்னை வளத்தறது எச்சபாத்திரம் தூக்கறதுக்கா? என்று கத்துவாள். வீட்டில் என்னை ‘தாங்கு தாங்கு’ என்று தாங்கும் அவர்களை நினைத்தவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
மணி நாலரையை தொட்ட போது, போதும் என்று அவர்களை அழைத்தேன். “இரு இன்னும் கொஞ்சம்” அவர்கள் பதில் சொல்லியபடியே புதர்களை வெட்டி வீசி கொண்டிருந்தார்கள். எனக்கு வேலை வேகமாக நடக்கிறது என்று தோன்றினாலும், அவர்கள் வெட்டி போட்டதை எடுத்து ஓரம் கட்டி சுத்தம் செய்வதற்கு நாள் கணக்கில் ஆகுமே என்னும் கவலைதான் வந்தது. அது மட்டுமல்ல, பாதை முழுக்க முள்ளும் புதருமாய் கிடப்பதை அங்கு வந்து சென்று கொண்டிருக்கும் அதிகாரிகள் விரும்பமாட்டார்கள். மற்றபடி மாநில போக்குவரத்து பஸ் ஒன்று நாளொன்றுக்கு நான்கைந்து முறை வந்து போகிறது. அந்த பஸ்களின் ஓட்டுநர் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த போது “நல்ல வேலை செஞ்சீங்க” என்று பாராட்டி விட்டு போனார். ஆனால் பின்னலேயே ஜீப்பில் வந்த இஞ்சீனியர் என்னை கையை சொடக்கி அழைத்து நாளைக்கு நான் வரும்போது “ரோட்டுல ஒரு குப்பை” இருக்க கூடாது” மிரட்டுவது போல சொல்லி சென்றார்.
இரவு அவர்களையே சமைத்து சாப்பிட சொல்லி விட்டு அரிசி பருப்பு, வேண்டியதை எல்லாம் அங்கிருந்த மளிகை கடையில் வாங்கி கொடுத்து விட்டேன். நாளை காலையில் நாலுபேறுக்கும் சாப்பாடு குழம்பு ஆக்கி நீங்களே கொண்டு போயிடணும், கறாராக சொல்லி விட்டேன்.
இரவு அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு ஓட்டலில் நான்கு தோசை சாப்பிட்டவன், எங்க வேலைக்கு “நாளைக்கு இரண்டு ஆம்பளை ஆளுங்க கிடைக்குமா? என்று கேட்டேன். ஒரு ஆம்பளை ஆளும், பொம்பளை ஆளும் இருக்கு, கூப்பிட்டு போறீங்களா? ஓட்டல் வைத்திருந்த மலையாள சேட்டன் கேட்டார்.
இந்த வேலைக்கு பொம்பளை ஆளை கூப்பிட்டுகிட்டு, அதுவும் போக, போக, காட்டு பகுதியாயிடுமே, அப்புறம் ஆம்பளைங்க நாலு பேருக்கு நடுவுல ஒரு பொம்பளை ஆளை மட்டும் வச்சு வேலை வாங்க குடியுமா? இப்படி ஒரு எண்ணமும் வந்தது.
என் எண்ணத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ, அவங்க இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டிதான், காட்டுக்குள்ள வேலை செஞ்சவங்கதான், தைரியமா கூப்பிட்டுட்டு போங்க.
அரை மனதோடு சரி சொல்லி விட்டேன்.
காலை வந்தவர்களுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருந்தது. காலை ஏழு மணிக்கு வந்தவர்கள், மள மளவென பாதையோரமாய் குவிந்து கிடந்த முள் புதர்களை கவ்வை குச்சி கொண்டு ஓரமாய் தள்ளி போட்டு கொண்டு சென்றார்கள். அந்த பெண் அதன் பின் ரோட்டை கூட்டியும் விட்டாள். ரோடு சிமிண்டால் போடப்பட்டிருந்ததால் கூட்டுவதற்கு சிரமமாக இல்லை.
ஆனால் வேறொரு தலைவலி வந்து விட்டது. பெண் பிள்ளை இருப்பதால் பத்து மணிக்கு டீ போட்டு தரவேண்டும் என்று சொல்லி விட்டார்கள், மற்றவர்கள். அது மட்டுமல்ல, இனி போகப்போக காடு அடர்த்தியாகிவிடும், அதனால் ஒவ்வொரு முறையும் தங்குமிடத்திற்கு வந்து போக முடியாது, அதனால் எல்லா ஆட்களுக்கும் சமையல் அந்த காட்டுக்குள்ளே யே ஆக்கி கொள்ளலாம் என்னும் யோசனையும் வற்புறுத்தி சொல்லி விட்டார்கள்.
இவர்கள் இருவரை சேர்த்தற்கே முதலாளி என்ன சொல்வாரோ என்னும் பயத்தில் டீ போட்டு தரவும் சமைக்கவும் அந்த பெண்ணை பயன்படுத்தினால் அவர் என்ன சொல்லி திட்டுவாரோ என்னும் பயமும் வந்தது. இருந்தாலும் இது சரியான யோசனையாகத்தான் பட்டது. நானும் ஒவ்வொரு முறையும் காட்டு வழியாக தனியாக நடந்து வந்து கடையில் சாப்பிட்டு போக வேண்டியதில்லை, வேலை பாட்டுக்கு தடங்கலில்லாமல் நடக்கும், சமையல் ஆனவுடன் அவர்கள் வந்தால் போதும்.
இந்த யோசனையினால் இன்னும் வேகமாக வேலை நடந்தாலும் காட்டுப் பகுதிக்குள் சமையல் செய்யும்போது பார்த்து பார்த்து சமைக்க வேண்டி இருந்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் உப்பின் வாசத்துக்கு யானைகள் வந்து விடலாம் என்னும் பயம், அடுத்து குரங்குகள் சாப்பிடும்போது நிறைய வந்து சுற்றி நின்று கொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. காடர்கள் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, பயந்தது நானும் அந்த பெண்மணியும்தான். அவளின் கணவன் கூட தைரியமாகத்தான் இருந்தான்.
ஐந்து நாட்கள் ஓடியிருந்தது. அன்று மழை பிடித்து கொண்டது. சரியான மழை, மரங்கள் அடர்ந்து அந்த சிமிண்ட பாதை மட்டுமே வெற்றிடமாக இருக்க, நாங்கள் தெப்பமாக நனைந்தபடியே அந்த பாதையிலேயே நின்று கொண்டிருந்தோம். அன்று அடுப்பு பற்ற வைக்க முடியாமல் பட்டினியும் கிடக்க வேண்டியிருந்தது. அதை விட புதரை வெட்டிக்கொண்டிருந்த நால்வரும் எங்கோ சென்று விட்டு வரும்போது போதை தலைக்கேற வந்திருந்தனர். அவர்களுடன் இந்த பெண்ணின் கணவனும் போய்விட்டு வந்தவனும் போதை தலைக்கேறி வந்தான்
எனக்கு பெருத்த பயமாகிவிட்டது. பெண் ஒருத்தியாகவும், மற்றவர்கள் தன்னை மறந்த நிலையில் அந்த காட்டுக்குள், அதுவும் கொட்டும் மழையில் நின்று கொண்டே, நான் வேண்டுமென்றே கடுமையாக இருப்பவன் போல் பெரிய கம்பு ஒன்றை கையில் எடுத்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தேன். உண்மையில் மனதுக்குள் பயம் தலை விரித்தாடியது.
திடீரென்று பேச்சுக்குரல் கேட்க, அந்த நிமிசம் எனக்கு வந்த நிம்மதி, மானாம்பள்ளி எஸ்டேட்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் மழையில் நனைந்து கொண்டே ஷேக்கல் முடி செல்லும் வழியில் இறங்கி மானாம்பள்ளி பிரிவில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணை அவர்களுடன் போய் எஸ்டேட்டு பஸ் ஸ்டாப்பிங் பக்கம் நில்லு, நாங்க வரும்போது கூட்டிக்கறோம் என்று சொல்லி அனுப்பியபின்தான் எனக்கு ஒரு நிம்மதி வந்தது.
இரவு தங்கும் விடுதிக்குள் திடீரென நால்வரில் இருவர் அடித்து கொள்ள கூட இருந்த இரண்டு பேர் ஆளுக்கொரு பக்கம் நின்றபடி அவர்கள் மொழியில் சண்டையிட்டபடி இருந்தனர். மறு நாள் காலையில் அந்த குடியிருப்பின் மேற்பார்வை அதிகாரி என்னை வரச்சொல்லி காய்ச்சி எடுத்தார்.
சின்னப்பயலா இருக்கே, உன்னைய நம்பி உங்க முதலாளி எப்படி இவனுங்களை பார்க்கறதுக்கு அனுப்பிச்சாரு. உடனே உங்க முதலாளிய வரச்சொல்லி தகவல் அனுப்பு. அப்பொழுதெல்லாம் “செல்போன்” என்றொன்று கிடையாது. மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று எங்கள் ஊர் மின்வாரிய அலுவலகத்துக்கு போன் செய்து சொல்ல வேண்டும். அவர்கள் செய்தியை முதலாளிக்கு அனுப்பி, அதன் பின்தான் அவர் வரமுடியும்.
அதிர்ஷ்டவசமாக அவர் அன்று மாலை பஸ்ஸில் வந்து கொண்டிருந்தவர், நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் டிரைவரை நிறுத்த சொல்லி இறங்கி கொண்டார்.
முதலாளியை பார்த்தவுடன் நால்வரும் அப்படியே அமைதியாகி வேலை செய்து கொண்டிருக்க, புதிதாக இருந்த இருவரையும் இவர்கள் எப்படி? கேட்க, நான் நிலைமையை சொன்னேன். முகம் திருப்தியானதாக தெரியவில்லை.
இன்னும் எவ்வளவு தூரம் வேலை நடக்க வேண்டும்? மனதுக்குள் கணக்கு போட்டவர், இதுவரை வந்துள்ள தூரத்தையும், நடந்திருக்கும் வேலையையும் கணக்கு போட்டார். ஆள் கூலி, சமையல் செலவு, பஸ் செலவு, எல்லாவற்றையும் கணக்கு போட்டார். இதற்கும் இவருக்கு படிப்பு வாசனை சுத்தமாக கிடையாது. ஆனால் இந்த மாதிரி கணக்கு போடுவதில் கில்லாடி.
ஏதோ கொஞ்சம் திருப்தியாகியிருப்பார் போலிருக்கிறது, முகம் கொஞ்சம் சகஜமானது, சரி வேலை எல்லாம்..?
நான் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.
அதெல்லாம் பார்த்துக்கலாம் சொன்னதோடு சரி, அதே பஸ் ஊர் சென்று திரும்ப வால்பறை நோக்கி வரும்போது கையில் இரு நூறு ரூபாயை திணித்து விட்டு பஸ் ஏறி விட்டார். வால்பாறை போய் அங்கிருந்து பஸ் பிடித்து போய் விடுவதாக சொல்லி சென்று விட்டார்.
மாலை நாங்கள் தங்குமிடம் சென்றபோது அக்கம்பக்கம் உள்ளவர்கள் முணுமுணுத்ததோடு சரி, நல்ல வேளை என்று நினைத்து கொண்டவன், “கொஞ்சம் சண்டை போடாம இருங்கப்பா” சொல்லி விட்டு நான் மட்டும் சாப்பிட ஓட்டலை நோக்கி நடந்தேன்.
இரண்டு மூன்று நாட்களில் ஓட்டல் கடை முதலாளி மலையாள சேட்டன்” எனக்கு நல்ல அறிமுகமாகிவிட்டார். இன்னைக்கு இராத்திரி இங்க வரமுடியுமா? என்று கேட்டார்.
எதுக்கு சேட்டா?
பின்னாடி ஆத்துல வலை போட்டிருக்கோம், இது கமுக்கமா செய்யற வேலை, போலாமா?
எனக்கும் சின்ன வயதில் இருந்தே ஆற்றுடன் பழக்கமிருப்பதால் ‘சரி சேட்டா’ என்று சொல்லி விட்டேன்.
இரவு பத்து மணி அளவில் சேட்டனும், ஒரு இளைஞனும் என்னை கூட்டி போனார்கள். அவர்கள் இதுலதான் போகணும் என்று ஒரு கட்டுமரத்தை காட்டியபோது மிரண்டு பயந்துவிட்டேன். அது மூன்று கட்டைகளை வைத்து கட்டி இருந்தது. அதில் ஏறி நின்று கொள்ள வேண்டும். ஐயோ இப்படி எல்லாம் போய் பழக்கமில்லை என்று சொல்ல முடியாமல், பயத்துடன் வீறாய்பாய் தலையாட்டினேன்.
அந்த கட்டுமரத்தில் ஏறி நிற்கும்போது கால்கள் நடுங்கியது, அந்த இளைஞனை கெட்டியாக பிடித்து கொண்டேன். ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும், போக போக சரியாயிடும்.
சேட்டன் தன் கையில் இருந்த கோலால் மெல்ல தண்ணீருக்குள் நுழைத்து கட்டுமரத்தை உள் பக்கமாக செலுத்தினார். அந்த இருளில் தண்ணீரின் சத்தம் சலக் சலக் என்று கேட்க அப்படியே நடு ஆறு வரை சென்றது.
ஆற்றின் வேகம் அதிகம் இருப்பதாக தெரிந்தது, கட்டுமரமும் அதனுடனே இழுத்து போவதும் தெரிந்தது. கடவுளே எப்படி இதை ஒதுக்கி கரை போய் சேர்வோம் என்னும் பயமும் வந்து கொண்டே இருந்தது.
அவர்கள் ஏதோ அடையாளம் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது, அந்த இடத்தை அடைந்ததும் அந்த இளைஞன் குனிந்து ஏதோ ஒன்றை இழுக்க நீளமான வலை ஒன்று அவனுடனே வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதை இழுத்து அப்படியே கொத்து போல தூக்கி கட்டுமரத்தில் போட்டார்கள்.
நானே பயத்தில் நின்று கொண்டிருக்க, நல்ல எடையுடன் வலைப்பை ஒன்று கட்டு மரத்தின் மீது வந்து விழுகவும், அதில் இருந்த மீன்கள் துள்ளுவதால், கட்டை அங்கும் இங்கும் ஆட்டம் காண ஆரம்பித்தது. மனசு முழுக்க பயத்துடன், கால் நடுக்கத்தை கட்டுப்படுத்தி மீன்கள் துள்ளுவதை பார்த்து மனதை திருப்பினேன். அந்த மீன்கள் இருளுக்குள் மின்னலாய் தெரிந்தது.
கட்டுமரத்தை தண்ணீர் ஓட்டத்துடனே கொண்டு போய் கரையோரமாக நகர்த்தி சரியாக ஒரு மரபொந்துக்குள் கொண்டு போய் நிறுத்தினார்கள். அப்பாடி தப்பிச்சேன் மனதில் நினைத்து கொண்டு தரையில் குதித்து மேலே வந்தேன்.
அவர்கள் வலையை பிரித்து மீன்களை ஒரு சாக்குபைக்குள் வைத்து இடது புற தோளில் ஆளுக்கு பாதியாய் வைத்து துக்கியபடி, கட்டுமரத்தை வலது தோளில் வைத்து இருவர் வேகமாக நடந்தார்கள். நான் அந்த வலையை சுருட்டி தண்ணீருடன், தோளின் மீது போட்டு கொண்டேன். மீன்வாசம் எங்கள் மூவரை சுற்றி வீச வேக வேகமாக நடந்து வந்து சேர்ந்தோம்.
இரவு படுக்க போகும்போது நள்ளிரவு தாண்டி விட்டது. என் உடம்பில் இருந்து மீன் வாசம் அடித்து கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட இங்கிருந்து பார்த்தால் வால்பாறையில் இருந்து ஷேக்கல்முடி, வந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அப்படியானால் இன்னும் ஒரு கிலோ மீட்டருக்கு கொஞ்சம் அதிகமாக பாதையின் புதர் வெட்டும் வேலை இருக்கலாம் என கணக்கு போட்டேன். முடிந்தவரை நாளை முடித்து விடலாம். மாலையிலேயே இந்த நால்வரையும் ஊருக்கு பஸ் ஏற்றி விடவேண்டும். இல்லையென்றால் மறு நாள் விடிந்தால் அன்றைய நாள் சம்பளம் தரவேண்டும். அதற்கு முதலாளியிடம் நான் பதில் சொல்ல வேண்டும்.
நால்வரையும் நாலு மணி வாக்கில் ஊருக்குள் வரும் பஸ் திரும்ப சென்றபோது அவர்களை பஸ் ஏற்றி அனுப்பி விட்டேன். நால்வருக்கும் போக விருப்பமில்லை, நான் சமாதானப்படுத்தி முதலாளியை நாளைக்காலையில போய் பார்த்து கணக்கை முடிச்சுங்குங்க, சொல்லி அனுப்பி வைத்தேன்.
மிச்ச வேலைகளை கணவன் மனைவியை வைத்து பாதையை சுத்தம் செய்ய வைத்தேன். அவர்களுடன் அடுத்த பஸ் ஏழரைக்கு வந்த போது ஏற்றிக்கொண்டு ஊருக்குள் வந்து சேர்ந்தேன்.
கையில் இருந்த பணத்தில் அவர்கள் கணக்கு வழக்கை முடித்து நாங்கள் கொண்டு வந்திருந்த சமையல் பாத்திரங்களை அவர்களிடமே கொடுத்து எடுத்து போக சொல்லி விட்டேன்.
காலை எழும்போது இன்றைக்கு எனக்கு வேலை ஒன்றும் இல்லை என்பது மனதுக்கு சந்தோசத்தை தந்தாலும் நேரம் ஆக ஆக போர் அடித்தது. எவ்வளவு நேரம்தான் ஓட்டல் கடையிலேயே உட்கார்ந்திருப்பது. சரி இஞ்சீனியர் ஆபிஸ் போய் பார்ப்போம் என்று மெல்ல கிளம்பி வந்தேன்.
என்னப்பா வேலை எல்லாம் முடிஞ்சுதா? அதிசயமாய் கொஞ்சம் சிரித்தார் இஞ்சீனியர். உங்க முதலாளி வந்துடுவாரா? இல்லை நீயே தானா? இல்லீங்க, வேலை முடிச்சுட்டு கிளம்பி போனவங்க அவர் வீட்டுக்கு போய் சொல்லியிருப்பாங்க, இந்நேரம் கிளம்பி வந்து கிட்டிருப்பாரு.
அலுவலகத்திலேயே காத்திருந்தேன். நாலு மணி பஸ்ஸில் சொன்னது போலவே முதலாளி வந்து விட்டார். என்னப்பா முடிஞ்சுதா? சார் இருக்காரா? என்னிடம் கேட்டாரா இல்லை அலுவலகத்துக்குள் இருந்து வந்தவரிடம் கேட்டாரா? தெரியவில்லை. சர சரவென உள்ளே போனார்.
உள்ளே இஞ்சீனியர் சத்தமாய் இவரிடம் பேசுவது கேட்டது. என்னயா சின்ன பையனை விட்டு வேலை செய்ய வச்சிருக்க? நான் கையெழுத்து போட முடியாது, அங்கங்க சொட்டையா விட்டுட்டு வெட்டியிருக்கானுங்க, என்னென்னமோ சொல்லிக்கொண்டிருந்தார். பதிலுக்கு இல்லைங்க, சரிங்க, ஆகட்டுங்க இவர் பணிவுடன் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டு கொண்டுதான் இருந்தது.
முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தவர், நீ ஊருக்கு கிளம்பிக்கோ, எனக்கு இஞ்சீனியர் கூட “வேலை செஞ்ச சைட்ட” பார்த்துட்டு நாளைக்கு காலையில வந்துடறேன். இரவு எல்லோரையும் கவனிப்பார் என்று எனக்கு தோன்றியது.
சரி என்று தலையாட்டியவன் தங்குமிடம் வந்து நான் காயவைத்திருந்த சட்டை பேண்ட் எல்லாவற்றையும் சுருட்டி எடுத்து பைக்குள் போட்டு அடுத்த பஸ்ஸை பிடிக்க வந்தேன்.
வழியில் ஓட்டலில் “சேட்டனிடம்” நான் கிளம்புவதாக சொன்னேன். சேட்டனுக்கு என்ன தோன்றியதோ, பஸ் வர்றதுக்கு இன்னும் நேரமிருக்கு, கொஞ்சம் உக்காரு, டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார். கூடவே அந்த கடையின் பிரபல உணவான கொழாபுட்டும், சுண்டல் குழம்பு தீர்ந்துடுச்சு, வைத்து இரண்டு நாள் ஆன மீன் குழம்பு, சுண்ட வைத்திருந்தார், அதையும் கிண்ணத்தில் மீனுடன் போட்டு கொண்டு வந்தார். அது வித்தியாசமான ருசியாகத்தான் இருந்தது.
நான் வேலை செய்ததற்கான ஊதியம் முதலாளியிடம் ஒழுங்காக வாங்க முடியவில்லை. அவர் ‘தங்குனது’, ‘சாப்பிட்டது’, ‘பஸ் செலவு’ எல்லாவற்றையும் கூட்டி கழித்து கணக்கை சுருக்கி, போனால் போகுது என்று நூறு ரூபாயை கொடுத்து கணக்கை முடித்து கொண்டார்.
எனக்கு அவர் செய்கை கோபத்தை வரவழைத்தாலும் இந்த அனுபவம், சேட்டனின் மீன் குழம்பு, இரவில் கட்டுமர சவாரி இவைகள் ஞாபகார்த்த சின்னங்களாக இதோ நாற்பது வருடங்கள் கடந்து விட்டது. அவை மட்டும் இன்னும் பசுமையாக நினைவுகளில் இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Jun-23, 11:21 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 143

மேலே