உங்களுக்காக ஒரு கடிதம் 38
அன்பு நண்பர்களே தொடருவோம்.
பள்ளியில் படிக்கும்போது 600 / 600 வாங்கி ஸ்டேட் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட் வாங்கியவர்களும், ஒரு குறிக்கோளோடு.... பெரிய கனவுகளோடு உள்ளே நுழைந்தவர்களும் இங்குவந்து மறுபடியும் அதே மார்க்குக்காக...புரியுதோ புரியலையோ... தெரிந்ததோ தெரியலையோ அவர்களுக்காகவோ இல்லை பெற்றவர்களுக்காகவோ..இல்லை இந்த சமுதாயத்துக்காகவோ இல்லை…. நான்கு பேர்களுக்காக அதான் இரண்டு இன்டெர்னல்ஸ்.. இரண்டு எக்ஸ்டெர்னல்ஸ் எக்ஸாமினர்களைத்தான் சொல்கிறேன்...அவர்களுக்காக அவர்களுக்காக மட்டும் படித்து...அவர்கள் கேட்கும் இரண்டு மூணு கேள்விகளுக்கு பதில் சொல்லி... பாஸாகி.... டாக்டராகி வெளியில் வரும் வந்துவிட்ட இளம் டாக்டருகளுக்காக இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்களை குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எத்தனை எத்தனை போராட்டங்கள்... ஒவ்வொரு படியிலும்...பலப்பல தடங்கல் தாண்டி வெற்றிபெற்ற உங்களை பாராட்டுகிறேன். சரி... போனதெல்லாம் போகட்டும். இதுவரை நீங்கள் மாணவர்களாக இருந்தீர்கள். அந்த பருவத்திற்கே உண்டான குறும்புகள்...கொண்டாட்டங்கள்... சோம்பேறித்தனங்கள் கொண்டாடினீர்கள். குதூகலித்தீர்கள். நட்பாய்...நட்புக்காய், காதலாய்...காதலுக்காய் நேரத்தை செலவிட்டது போதும். அந்த நிலையை தாண்டி அடுத்த நிலைக்கு அடி எடுத்து வைக்கிறீர்கள். உங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியை தொட்டு தொடரப் போகிறீர்கள். அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். ஸ்பூன் பீடிங் எல்லாம் முடிந்துவிட்டது. உங்களுக்காக நீங்களே... சுயமாய் முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கனவோ...இல்லை உங்கள் பெற்றோரின் கனவோ, உங்கள் விருப்போ...இல்லை வெறுப்போ.. இங்கு முக்கியமில்லை. இனி நீங்கள் சமுதாயத்தின்...சமுதாயத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களில் உறுதியான தூணாய் இருக்கப்போகிறீர்கள். பிள்ளைப்பருவம் முடிந்துவிட்டது. விளையாடியது போதும். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்டர்ன்ஷிப்....இந்த ஒரு வருடம். உன் வாழ்வின் மிக...மிக... முக்கியமான ஒரு கட்டம். உங்கள் எதிர்கால வாழ்விற்கு போடப்போகும் வலுவான அஸ்த்திவாரம்... அடித்தளம்... இந்த ஒரு வருடம்தான். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஒவ்வொரு மருத்துவர் வாழ்விலும் ஒரே ஒரு முறை பூக்கும் பாரிஜாத பூதான் இந்த இன்டர்ன்ஷிப். அதன் பிறகு நம் இறப்பு வரை இந்த பூ மலராது. அதாவது என்னவென்றால் இதுவரை பேப்பரிலும்... புத்தகங்களிலும் படித்து வந்த கோட்பாடுகளை...நடைமுறையில் பரிசோத்தித்துப் பார்க்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம்தான் இந்த ஒரு வருடம். அதுவும் பரிசோதனை தாவரங்கள் மீதோ...இல்லை பரிசோதனை மிருகங்கள் மீதோ இல்லை. உயிரும் சதையுமாய்...உணர்வும் உடலுமாய் உயிரோடு இருக்கும் நம் சக மனிதன் மீது செய்யப்போகிறோம். அப்போ எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். எவ்வளவு பொறுப்புடன் நடக்க வேண்டும்.
பொறுப்பு....அது நீங்களே தன்னார்வத்தோடும்...மனம் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மீது திணித்ததுபோல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்களுக்கு சுமையாகவும்...மன உளைச்சலாகவும் இருக்குமே தவிர...சந்தோஷமாக இருக்காது. +2 பாஸ் செய்தவுடன் நீங்கள் சொன்னதை நினைத்து பாருங்கள். உங்கள் சபதத்தை எண்ணிப் பாருங்கள். " நான் டாக்டராகி ஏழை எளியவர்களுக்கு இலவசமாய் மருத்துவம் பார்ப்பேன். கிராமங்களுக்கு சென்று தொண்டாற்றுவேன்". அப்படி... இப்படி என்று சொன்னதெல்லாம் காற்றோடு போய்விட்டதா என்ன? அப்படியென்றால் நீங்கள் எல்லாம் வாய்ச்சொல்லில் வீரர்கள்தானா? நீங்கள் விளையாடப்போவது உயிர்களோடு...
தொடரும்.