அரிது
அரிது....!
20 / 06 / 2023
நம் வாழ்வில் நம் கனவு என்ன? வாழற வரைக்கும் சுகமாய்...சந்தோஷமாய் வாழ வேண்டும். உடல் ரீதியாகவும்...மன ரீதியாகவும் ஒரு கஷ்டமும் படக்கூடாது. செத்தாலும் பட்டென போய்விட வேண்டும். யாருக்கும் ஒரு தொந்தரவும் கொடுக்கக்கூடாது.நேரே சொர்கத்துக்குத்தான் போக வேண்டும். நரகமது வாழ்விலும் இருக்க கூடாது. மரணத்திலும் இருக்க கூடாது என்று நினைத்து கொண்டு அதற்காக நாம் வாழும்வரை சில நன்மைகளும் செய்கிறோம். பல தீமைகளும் செய்கிறோம்.தெரிந்தும் செய்கிறோம்...தெரியாமலும் செய்கிறோம்.நாம் மனிதனாய் பிறந்ததே ஒரு அதிசயம்தான். நம் பிறப்பே நமக்கு கிடைத்த பரிசுதான். அரிதான ஒன்றுதான். பழம்பெரும்பாடல் ஒன்று என்னை வசீகரித்தது....வசப்படுத்தியது.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே...
ஒளவையின் வாக்கு.
நினைத்துப் பார்க்கிறேன். மானிடராய் பிறத்தல் அரிது என்று சொல்லவில்லையே.... மானிடர் ஆதல் அரிது என்று சொல்லிவிட்டாளே...! அதன் சூட்சுமம் என்ன என்று என்னை நானே வருத்திக்கொண்டு யோசித்து...யோசித்து எனக்குத் தோன்றியதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லோரும் பிறந்ததுதான் இருக்கிறோம். ஆறறிவு படைத்த நமக்கும் ஐந்தறிவு படைத்த மிருகத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டுமல்லவா? அந்த வித்தியாசம் இல்லையென்றால் நாம் மானிடர் என்று சொல்வதிலோ இல்லை பெருமை கொள்வதிலோ அர்த்தம் இல்லையல்லவா? பிறப்பால் நீ மனிதனாய் பிறந்திருக்கலாம். வெறும் மனிதனாய் பிறந்து வளரும்போதும்... வாழும்போதும் நீ மானிடர் ஆக வேண்டும். அப்படி அற்ப மனிதன் மானிடர் ஆதல் கஷ்டம்...அரிது. அதற்கு நீ பல பயிற்சிகள்...தியாகங்கள்..செய்ய வேண்டும். அப்படி செய்தவர்கள்தான் தெய்வங்களாய் வணங்கப்படுகிறார்கள்.
அடுத்த வரியில்தான் பிறப்பை பற்றி சொல்கிறாள் ஒளவை. அப்படியே நீ மானிடராய் ஆவதற்கு கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? இதற்கு பல காரண காரியங்கள் இருக்கின்றன. இறைவன் மேல் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவன் உன்னை படைக்கும் போது அப்படி ஒரு குறையும் இல்லாமல் படைக்க வேண்டும். அப்படி அவன் படைப்பதற்கு முன் நம் ஏழேழு ஜென்ம பாவ புண்ணிய கணக்குகளை சரி பார்த்து...அதற்கு பரிசாகவோ இல்லை தண்டனையாகவோதான் அப்படி குறையோடையோ இல்லை குறை இன்றியோ படைக்கிறான் என்று வேதங்களும்..உபநிடங்களும் சொல்கின்றன. சரி தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள், இயற்கையை வணங்குபவர்கள், பகுத்தறிவு...விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள் இவை எல்லாம் இயற்கையாய்..ரசாயன மாற்றங்களால்...இயற்கை குறைபாடுகளால் ஏற்படுகின்றன என்று வாதிடுகிறார்கள். இது எல்லாம் அவரர்களுக்கு கொடுத்துவைத்தது என்னவோ அதுதான். எல்லாம் அவரவர் விதி...தலை எழுத்து என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஒரு வாதத்திற்கு எடுத்து கொள்ளலாம்...இறையோ.... இயற்கையோ, விதியோ... மதியோ ஒன்று மட்டும் நிச்சயம் 'A STRONG MIND IN A STRONG BODY '. இன்றைய தலை முறைக்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். 'இளமையில் கல்' என்பது போல் இளைமையாய் இருக்கும் போதே நன்றாக சாப்பிட்டு உடலை ..உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் தலைமுறைக்கும் பரம்பரைக்கு நீங்கள் செய்யும் ஒரு முக்கியமான கடமை என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் இவ்விதமான குறைபாடுடைய பிறப்புகளை ஓரளவிற்கு குறைக்க முடியும்.
சரியப்பா கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறந்து விட்டோம். அவ்வகை குறைகளோடு பிறந்தவர்களின் சதவீதம், மொத்த மக்கள் தொகையில் ஒரு துளிதான். மற்றவர் அனைவரும் சிறு குறையோடோ இல்லை குறையின்றியோதான் பிறந்திருக்கிறோம். ஒளவை சொல்கிறாள் அப்படி பிறப்பதே அரிது. அதைவிட அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது. ஞானம் பிறப்பிலேயே வருவது. அது மரபணுவிலேயே விதைக்கப்படுவது. அதை மேலும் செம்மைப் படுத்த கல்வி அவசியம். 'கண்டதை தின்பவன் குண்டானாவான். கண்டதை படிப்பவன் மேதையாவான்'. ஞானம்...அதை விடுங்கள். அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் கல்வி ...நம் கைக்குள்..நம் சக்திக்குள் உள்ளது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்.ஏனோதானோவென்று படிக்கிறோம். எதுவும் புரியும்படியோ..இல்லை புரிந்து கொள்ள முனைப்பு எதுவுமின்றி படிக்கின்றோம். கடமைக்குப் படிக்கிறோம். அதனால்தான் படித்தல் அரிது என்று சொல்லவில்லை நயத்தல் அரிது என்று சொல்கிறாள். நயத்தல்.....விரும்பி படித்தல். ஈடுபாடோடு படித்தல். அர்ப்பணிப்போடு படித்தல். அப்படி படித்தால்தான் ஞானம் மேம்படும். உன் பின்னே ஒரு ஒளிவட்டம் வெளிப்படும். நீ போற்றப்படுவாய். ஆனால் அதை அடைவது அரிது...அரிது...என்கிறாள்.
அப்படியே நயந்து கல்வியையும் ஞானத்தையும் பெற்று விட்டால் போதுமா? அதன் பயன்...தானமும் தவமும். தானமும் தவமும் செய்தல் அரிது என்று குத்திக் காட்டுகிறாள். பெற்ற கல்வியாலும் ஞானத்தினாலும் சம்பாதித்த அறிவையும், பொருட்ச்செல்வத்தையும் மற்றவர்க்கு பகிர்தல் அரிது. தான் பெற்ற கல்வி அறிவை இளையவர்க்கு பகிர்தலும் ஒரு தர்மம்தானே..! இதை எத்தனை பேர் செய்கிறோம். அப்படி செய்திருந்தால் நம் தொன்மையான சித்த வைத்தியம்... ஆயுர்வேதம் எல்லாம் மறைந்து போயிருக்குமா? கல்வி அறிவை பகிரப்பகிர வளருமே தவிர... முழுமை ஆகுமே தவிர ஒரு போதும் குறையாது. அட்சய பாத்திரம் போல் பொங்கிப் பெருகுமே தவிர அடங்கிப் போகாது. செல்வத்தை சேர்க்கும்வரை கொஞ்சம் கொஞ்சம் தயாள குணம் இருக்கும். அதிகம் சேர்ந்துவிட்டலோ ஒரு பைசா தானம் செய்யக்கூட மனசு வராது. " கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதுக்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்." வைரமுத்துவின் வைர வரிகள். பின் அந்த செல்வத்திற்கு அடிமை ஆகி...வேலைக்காரனாய்த்தான் இருக்க முடியும்.
தவம் செய்வது....கடந்து போன யுகங்களில் தவம் செய்வதென்றால் தாடி மீசை ஜடா முடியுடன், காட்டினில் எறும்போ...பாம்போ புத்து கட்டும்வரை வாயடக்கி...மனத்தடக்கி...காற்றை மட்டுமே சுவாசித்து, உட்கொண்டு...அன்ன ஆகாரமின்றி.... தாகம், மோகம் அறுத்து... குடிக்க நீருமின்றி படுக்க பாயுமின்றி உலக பிரஞை ஒட்டுமில்லாமல் வருட கணக்கில் கண் திறக்காது... துயில் கொள்ளாது செய்ததுதான் தவம். ஆனால் இந்த யுகத்தில் இது சாத்தியப்படுமா? வள்ளுவன் ஆதரவுக்கு வருகிறான். சம்சாரத்தை விட்டு...சம்பாத்தியத்தை விட்டு...காட்டுக்கு போய் ஜடாமுடியுடன்..அன்ன ஆகாரமின்றி உடல் வருத்தி நீ தவம் இருக்க வேண்டாம். உன் வாழ்வை நீ நீயாகவே இருந்து அனுபவித்து நீயும் உன்னை நம்பி இருக்கும் மனைவியையும்...உன்னால் உயிர் பெற்ற பிள்ளைகளுக்காய்... உறவாய் உண்மையாய்.... உனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்தாலே போதும் கடந்த யுகத்தில் தவசுக்களும் மாமுனிகளும் கஷ்டப்பட்டு பெற்ற தவ பலன்களை, சுலபமாய் நீ பெற்றிடலாமென்று. அந்த யுகத்தில் அத்தனை கடுந்தவம் செய்தால்தான் இறையடி சேரமுடியும். ஆத்ம பலனும் அடைய முடியும். ஆனால் இந்த கலியுகத்திலோ...நீ உண்மையாய் இருந்து விட்டால் போதும் இறைவன் உன்னைத்தேடி ஓடி வருவான். சத்தியமே....!
இப்படி வாழ்ந்துவிட்டால் ஒவ்வொரு மனித உயிரும் வேண்டும்.... விரும்பும், செத்தால் சுவர்க்கம் போகணும் என்கின்ற ஆசை... கனவு சுலபமாய் நிறைவேறி விடுமே. ஆனால் அது அத்தனை சுலபமா என்ன? இயேசு பிரான் " ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பி" என்று சுலபமாய் சொல்லி போய்விட்டார். புத்தர் பிரானோ "உன்னைப் போல் பிறரையும் நேசி. கலப்படம் இல்லாமல் எல்லா உயிரையும் அன்பு செய்....ஆசையை துற..." என்று போதித்து விட்டார்.அதை நடைமுறையில் பின்பற்றுவது சாத்தயமா? சாத்தியப்பட்டால் சொர்க்க வாசல் உனக்கு திறக்கும். ஆண்டவன் வந்து அரவணைப்பானே. முடியுமா? முடியாதா? தெரியாது. வாழப்போவதோ கொஞ்ச நாள். நீர்குமிழியாய் மறையப்போகும் ....அரிதாய் பெற்ற இந்த வாழ்வின் முழு பயனை அடைய முயற்சியாவது செய்யலாமே.

