துக்கிணியூண்டு கொத்தமல்லி

துக்கிணியூண்டு கொத்தமல்லி
எம்புட்டு ஆச்சு புள்ளை?
முக்கா கிலோ தக்காளி அரைகிலோ வெங்காயம், கத்தரி கால் கிலோ அரூபது ரூபாய் ஆச்சு.
என்னாடி..! உங்காத்தாளை மிஞ்சுவே போலிருக்கு, வெங்காயம் எம்புட்டு?
வெங்காயம் நாப்பது, தக்காளி பத்து, கத்தரி கால் கிலோ பத்து, அறுபது ஆச்சு அக்கா.
என்னாடி வெங்காயம் கிலோவே நாப்பதுக்கு விக்குது, நீ “முக்கா கிலோவுக்கு” நாப்பது போட்டிருக்க..
அக்கவோ நீ இந்த மூட்டையில இருந்து எடுத்திருந்தா முக்கா கிலோ முப்பத்து அஞ்சுக்கு கொடுத்திருப்பேன், நீ எடுத்த மூட்டை கிலோ அம்பத்து அஞ்சு வருது, நம்ம பக்கத்து வூட்டு அக்காவாச்சுன்னு நாப்பதுக்கு போட்டிருக்கேன், “நாயமா பார்த்த கூட மூணொ ரூபா” கேட்டிருக்கோனும்.
ஏய் அப்பா என்னா வாய் பேசற, நான் பாக்க மூக்கை ஒழுக்கிட்டு உங்க ஆத்தா கூட சந்தைக்கு வந்த புள்ளை, ஏய் பார்த்து விலைய குறைச்சு போடுறீ, உங்க ஆத்தா இருந்தா கம்மி பண்ணிருக்கும்.
என்னக்கா இப்படி சொல்லீட்ட, ஆத்தா வந்தவுடனே நீ குறைச்சு கேட்டு வாங்கிக்க, இப்ப கொஞ்சம் ஒத்தி நில்லுக்கா, வாங்க.. வாங்க… தக்காளி வெங்காயம்..
உங்கிட்ட வாய் கொடுத்தா அவ்வளவுதாண்டி முணங்கியவாறு, பரிமளா காசை சுருக்கு முடிச்சிலிருந்து எடுத்து நோட்டுக்களை பிரித்து கொடுத்தாள்.
பணத்தை வாங்கி டப்பாவில் போட்டவள் பரிமளாவின் வெங்காயம் போட்டிருந்த பையை எடுத்து கையில் கொடுத்தாள்.
அடியே கொத்துமல்லி கொஞ்சம் போடேண்டீ..
அக்காவ் கொத்துமல்லி நானூறு விக்குது, வர்றவங்களுக்கு இத்தினிக்கூண்டு கிள்ளி போட்டாலே எனக்கு பண்ணையம் காலி.. சொல்லியபடி அடுத்த கஸ்டமரை பார்த்து வாங்கக்கா வெங்காயம்…கிலோ ஆரம்பித்து விட்டாள்.
சரியான எளவெடுத்த புள்ளை, முணங்கியபடி பரிமளம் அங்கிருந்து நகரந்து சந்தையை விட்டு வெளியில் வரவும், எதிரில் ராசம்மாவை பார்த்தாள்.
ராசம்மாக்கா உன் புள்ளை உன்னைய விட மிஞ்சுவா, தினுக்கூண்டு கொத்தமல்லி கேட்டேன், அசையமாட்டேனுட்டா, சரியான கொடுக்கா புளியா பெத்து வச்சிருக்கே.
ராசம்மாளுக்கு பரிமளத்தின் ஆதங்கம் புரிந்துதான் இருந்தது, இவ ஏன் இப்படி பண்ணுறா? துணிக்கூடு கொத்துமல்லி கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவா, நீ போ நான் சாயங்காலம் வூட்டாண்டை வந்து கொடுக்கறேன்.
அதெல்லாம் வேண்டாம், நாளைக்கு உன் பொண்ணு இதை சொல்லி காட்டுவா, ஏதோ என் வயித்தெறிச்சலை உங்கிட்டே சொல்லி ஆத்திகிட்டேன் அம்புட்டுதான், ம்..நான் வாறேன், காய் பையை தலையில் சுமந்தவாறு அங்கிருந்து நடந்தாள்.
அவள் போவதையே பார்த்து கொண்டிருந்த ராசம்மாளுக்கு மகளின் மேல் கோபம் கோபமாக வந்தது, நமக்கு எல்லாத்துக்கும் துணையா இருக்கறது பரிமளா அக்காதான். அவ மட்டும் இல்லையின்னா இந்த சந்தையில இடம் பிடிச்சு, இத்தனை வருசமா நம்மானால காலத்த ஓட்ட முடியுமா? எல்லாம் இந்த தட்டுவானியினால வந்தது. ஸ்கூலு விட்டு வந்துட்டாளே அரை மணி நேரம் ஒதுங்கிட்டு வருவோமுன்னு போனா இப்படி பண்ணி வச்சிருக்காளே.
அம்மா வருவதை பார்த்ததும் மாசிலாமணி தன் குரலை இன்னும் உயர்த்தி வாங்க தக்காளி, வெங்காயம்..
அவள் ஸ்கூல் யூனிபார்மோடு இப்படி சந்தையில் கூவ வைத்து விட்டேனே என்னும் கவலை திடீரென மனதுக்குள் வந்து விட்டதால் கோபத்துடன் வந்தவளுக்கு மகளை பார்க்க பார்க்க வயிறு பற்றியெரிந்தது.
படிக்கிற புள்ளைய இப்படி யூனிபார்ம் போட்டுகிட்டு சந்தையில காய் கடையில கூவ வச்சுட்டனே, எல்லாம் இவ அப்பனால வந்தது, கணவன் மேல் கோபம் வந்தாலும் உயிரோடு இல்லாதவன் மேல் கோபப்பட்டு என்ன பிரயோசனம்?
“லாரி லோடு” ஏத்தற வேலைக்கு போக வேண்டாம் போகவேண்டாம், இங்க எங்கனயாச்சும், மார்க்கெட்டுல வேலைய பாருன்னு தலையா அடிச்சும் என்ன பிரயோசனம்? நாளுக்கு கூலி நானூறு ரூபாய் கிடைக்குதுன்னு போயித்தான் தீருவேன்னு அடம் பிடிச்சு போனான். கடைசியில அந்த லாரியே அவன் மேல எறுனதுதான் மிச்சம்.
மாசிலாமணி மூணாப்பு படிச்சுகிட்டிருந்தாளா அப்ப.! ஏ..நான் தான் ஒண்ணுமில்லாம போயிட்டேன், நம்ம புள்ளையவாவது நல்லா படிக்க வக்கோணும்னு ஆசையா சொல்லிகிட்டிருப்பானே.. கடைசியில இப்படி சந்தையில வந்து கூவிகிட்டிருக்காளே..
அம்மாவ்.. மகளின் உற்சாக குரல் அவளது எண்ணங்களை கலைக்க, சட்டென நினைவுக்கு வந்தவள் ஏண்டி பரிமளா அக்கா வந்துச்சே, துக்கிணியூண்டு கொத்தமல்லிய கொடுத்தா என்ன? குறைஞ்சா போயிடுவே, இன்னும் கொஞ்ச நேரத்துல அழுகி போயிடும்.
அம்மாவ் பரிமளா அக்காவ வழியில பார்த்தியாக்கும், சரி இங்கன பாரு நீ வர்றதுக்குள்ள எம்புட்டு வித்துட்டேன்னு, மகள் பெருமையாய் காட்ட சாக்கில் தனித்தனியா கொட்டப்பட்டிருந்த காய்கள் எல்லாம் விற்றிருந்தது தெரிந்தது. பரவாயில்லையே, சாமார்த்திக்காரிதான், ஒரு மணி நேரத்துல வித்துட்டாளே, இன்னைக்கு வட்டி முருகேசனுக்கு முழுப்பணத்தையும் கொடுத்துடலாம், நம்பிக்கை வர மனதுக்குள் மகளை பற்றிய நம்பிக்கை பெருக்கெடுத்தாலும் வேண்டுமென்றே முகத்தை கடுகடுப்பாக்கி கொண்டது போல அதெல்லாம் கிடக்கட்டும், சீக்கிரம் வூடு போய் சேரு, இருட்டிகிட்டு வருது, மகளை விரட்டினாள்.
போயி நேர உலைய வச்சிடு, காப்பித்தண்ணி போட்டு வச்சுட்டு விளக்கை ஏத்தி விடு, நான் முருகேசு அண்ணன் வந்துட்டாண்ணா பணத்தை கொடுத்துட்டு வந்து சேர்ந்துடறேன்.
“சரிம்மாவ்” மாசிலாமணி ஓரு பக்கம் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தன் ஸ்கூல் பையை எடுத்து தோளில் போட்டபடி ‘வெள்ளன வந்துடு’, குடுகுடுவென சந்தையை விட்டு வெளியே வந்தவள் தன் குடிசையை நோக்கி ஓடினாள்.
‘வெள்ளன வந்துடு’ என்று வழக்கமாய் மாசிலாமணி சொன்னாலும் அம்மா வூடு வந்து சேர இரவு எட்டு மணி ஆகிவிடும் என்பது மாசிலாமணிக்கும் தெரிந்திருக்கத்தான் செய்தது. அவளால் என்ன செய்ய முடியும்? காலையில் அம்மாவோட வந்து சந்தையில் உட்கார்ந்து அப்படியே ஸ்கூலுக்கு போய் விடுவாள். சாயங்காலம் ஸ்கூல் முடிந்து நேராக சந்தைக்கு வந்து அம்மாவை ஒரு மணி நேரம் விடுவித்து இவள் சந்தையை பார்த்து கொள்வாள்.
அம்மா தினம் தினம் வட்டிக்கு முருகேசனிடம் பணம் வாங்கி காலையில் மகளை சந்தையில் உட்கார வைத்து விட்டு அடித்து பிடித்து மொத்த மார்க்கெட்டுக்கு ஓடுவாள். அப்பொழுதுதான் லாரியில் வந்து இறங்கியிருக்கும் காய்கறிகளை வாங்கிப்போட்டு தள்ளுவண்டி ஒன்றை பிடித்து சந்தைக்கு கொண்டு வந்து விடுவாள்.
அம்மா வந்த பின்னால்தான் மாசிலாமணி ஸ்கூலுக்கு கிளம்புவாள். வரும் போதே, மகளுக்கும் அவளுக்கும் நாலு இட்டிலி வாங்கி பார்சல் பண்ணி கொண்டு வந்து விடுவாள். இருவரும் அதை பங்கிட்டு சாப்பிட்டுவிட்டு மாசிலாமணி ஸ்கூலுக்கு ஓடுவாள்.
சாயங்காலம் சந்தையில் மீண்டும் அம்மாவை உட்காரவைத்து விட்டு மகள் போய் உலை வைத்து சாதம் வடித்து வைத்து விடுவாள். ராசம்மாள் அதற்கு பின்னால் குடிசைக்கு போய் அவசரத்துக்கு குழம்பு, ரசம் எதையாவது ஒன்றை செய்து சாப்பிட்டு படுத்து விடுவார்கள். பக்கத்தில் பரிமளா இருப்பதால் மாசிலாமணியை பற்றிய கவலை ராசம்மாளுக்கு இருக்காது. சமயங்களில் பரிமளாவே குழம்போ ரசமோ கொடுத்து விடுவாள்.
வாழ்க்கை இப்படி அடித்து பிடித்தபடி ஓடுகிறதே என்னும் கவலை ராசம்மாளுக்கு வந்தாலும், மாசிலாமணி அதை எல்லாம் கண்டு கொள்ளாதவளாய் சந்தோசமாய் இதோ “ஏழாப்பு” வரைக்கும் அவள் வகுப்பில் “முதல் ரேங்” வாங்கியபடி வந்து கொண்டு தானிருக்கிறாள். ‘கணவன்’ இப்படி நிர்கதியாய் விட்டு விட்டு போய்விட்டான் என்னும் கவலை ராசம்மாளுக்கு வரும் போதெல்லாம் மகள் அருகில் வந்து “அம்மாவ் நாந்தான் ஸ்கூல்ல் பஸ்ட் ரேங்கு” ஹெட்மாஸ்டரு சாக்லெட்டெல்லாம் கொடுத்தாரு, பெருமையாய் சொல்லும் போது கவலை காணாமல் போய் விடுகிறது. மகளை எப்படியாவது நல்லா படிக்கவைக்க வேணும் என்னும் உறுதி மட்டும் வந்து நிற்கும்.
“அக்கோவ்” குரல் கேட்கவும் எட்டி பார்த்த பரிமளா ஸ்கூல் பையுடன்
மாசிலாமணி நின்று கொண்டு இருந்தாள். என்னாடி உங்கம்மா சந்தைக்கு வந்திடுச்சா?
வந்திடுச்சு, வூட்டுக்கு போய் சோறாக்க சொல்லியிருக்கு, இந்தா நீ கேட்ட ‘கொத்துமல்லி’ தலை. தன் ஸ்கூல் பையிலிருந்து எடுத்து கொடுத்தாள்.
அடி மகளே இதை எதுக்குடி எடுத்துட்டு வந்தே? உங்கம்மா கொடுத்துட்டிச்சா?
இல்லெ நானே நீ அங்கிட்டு போகவும் எடுத்து வச்சுட்டேன், உனக்கோசரம்.
ஏண்டி அதை அப்பவே என் கையில கொடுத்தா என்னவாம், என்னா கணக்கு பேசினே இத்துனூண்டா இருந்துட்டு, பேசிக்கொண்டே கொத்தமல்லியை கையில் வாங்கி கொண்டாள்.
‘ஆமாங்கா’ எங்கம்மா பாவம் ‘நிதம்’ வட்டிக்கு பணம் வாங்கி காயை வாங்கி விக்க சந்தையில போடுது. அதையவே தினம் கட்ட முடியாம முருகேசண்ணன் கிட்டே தவணை சொல்லிக்கிட்டிருக்குது. அங்கன வச்சு கொத்துமல்லிய கிள்ளி உனக்கு கொடுத்தா எல்லாத்துக்கும் கொடுக்கணும், பத்து ரூபாயுக்கு எதையாவது வாங்கிட்டு கொத்தமல்லி கொடுன்னு நிப்பாங்க,வியாபாரம் கெடும். அம்மா வரதுக்குல்ல எல்லா காயும் விக்கோணும்னு கூவிக்கிட்டிருந்தேன்.
பரிமளா விக்கித்து நின்றாள் சின்ன பெண் “தன் அம்மாவின் கஷ்டத்தை எந்தளவுக்கு புரிந்து பெரிய மனுஷியாய் பேசுகிறாள்” அவளை உச்சி முகர வேண்டும் என்று நினைத்தாலும், ‘வேண்டாம் அவளை கொஞ்சி’ குழந்தையாக்கி விடவேண்டாம், மனசை கட்டுப்படுத்தி கொண்டு இருடி காப்பி போட்டு ஊத்தி வச்சுகிட்டிருந்தேன், ஒரு நிமிசம் உள்ளே வா..
அக்கோவ் வேணாம், நேரமாச்சு, நான் போயி தண்ணி காய வக்கோணும்.
சும்மா இருடி எப்ப பார்த்தாலும் “பெரிய மனிசியாட்டம்” பேசிகிட்டு, அதற்கு மேல் தாங்க முடியவில்லை, அவளை இழுத்து அணைத்து சித்த நில்லுடி வேகமாய் உள்ளே போனாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Jun-23, 3:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 148

மேலே