சேவக்கட்டு

சேவக்கட்டு

டேய் இங்க உக்காந்து இருக்கறவணுங்களுக்கு எவனுக்காவது சேவ வேணு மின்னா உள்ள வந்து வாங்கிட்டு போங்கடா”
சட்டென எழுந்த ரங்கன் “ஐயா என்ர கட்டு சேவ” இரண்டை போலீசு எடுத்தாந்துட்டாங்க,
அவனை உறுத்து பார்த்த ஏட்டையா எதுடே அந்த செவலையும் கருப்புமாடா?
ஆமாங்கய்யா, இரண்டும் நல்ல விடைங்க,, ஒண்ணொண்ணும் மூணு கிலோ போகுமுங்க.
சரி,உள்ள வா..
சட்டென அவன் கையை பிடித்து நிறுத்தினான் சுப்பன், ரங்கா, எனக்கொண்ணும் சரியா படலை, வா போனா போகுதுன்னு பொயிடலாம்.
சுப்பனின் கையை உதறினான், ஏண்டா பேமானி போலீஸ்காரனுவங்களுக்கு போட்டு கொடுத்துட்டு இப்ப நல்லவனாட்டம் பேசாதடா
சுப்பனுக்கு கோபம் வந்தது, என்றாலும் அடக்கி கொண்டு, ரங்கா நான் சொல்றதை கேளு, நம்மோட வெளீய உக்காந்திருந்த மாரண்ணன், சொக்கன் எல்லாம் சேவ போனா போகுதுன்னு கிளம்பி போயிட்டாங்க, வேணா கிளம்பிடலாம்.
ரங்கனை விட்டு தள்ளிப்போய் நின்று கொண்டான் சுப்பன். இவன் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான், போலீஸ்காரனுக்கு சேவகட்டு இங்க நடக்குதுன்னு, நாமதான் போட்டு கொடுத்தோமுன்னு நினைக்கறவங்கிட்ட என்ன சொல்ல முடியும்? நாம் கிளம்பலாம், மனதுக்குள் நினைத்தவன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினான்.
இந்த முறை சுப்பனுக்கு கட்டுக்கு சேவலை தயார் செய்ய முடியவில்லை, நாலு மாசத்துக்கு முன்னால பக்கத்து ஊர் பாண்டியிடம் நல்ல விடக்குஞ்சு கேட்டிருந்தான், அவன் கொடுப்பதாக சொல்லி விட்டு அவங்க ஊர் பாலாண்டிக்கு கொடுத்து விட்டான். இவனுக்கு எரிச்சல், உங்க ஊர்க்காரனுங்களை விட்டு கொடுக்கமாட்டீங்களே..!
அதுக்கில்லை மாப்பிள்ளை, அவனுக்கு மூணாயிரம் கடன் தரணும், குஞ்சுக்கு கடனை கழிச்சுக்கறேன்னு சொன்னான், கடனை முடிச்சுட்டேன்.
இந்த முறை கட்டுக்கு ரங்கனுடன் சும்மாதான் வந்திருந்தான். அவன் பக்கத்து தெருக்காரன், சுப்பன் கட்டுக்கு சேவல் கொண்டு வரவில்லை என்றதும், என் கூட வா என்று இழுத்து வந்தான்.
புளியந்தோப்பு ஓரமாய் கட்டு ஆரம்பித்தார்கள். காதும் காதும் வைத்தது மாதிரி அம்பது அறுபது பேர் மட்டும்தான். ஆட்டம் ஆரம்பிக்க, சும்மா இரண்டு பக்கமும் சேவலை பிடித்து வைத்து மோதுவது போல போக்கு காட்டுவார்கள். பந்தயம் சூடு பிடித்து நல்ல தொகை வரும்போல தெரியவும் கட்டை அவிழ்த்து மோதலுக்கு தயாராக்கி விடுவார்கள்.
தோத்தவன் சேவலை எடுத்து நகர்ந்து போய்விடுவான், ஜெயித்தவனுக்கு பங்கு தொகை ஏறும், அடுத்த கட்டுக்குக்கு கூட மோத விடுவான்.
சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் சூடு பறந்து கொண்டிருக்க, சுற்றி வந்த போலீசை கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.
அடுத்த பத்தாவது நிமிடம் ஆறேழு கட்டு சேவல்கள், போலீஸ்காரர்கள் கையில் மாட்டிக்கொண்டவர்களை பிடித்து சேவல்களை அவர்கள் கையாலே பிடித்தபடி வர சொல்லி, வண்டியில் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேசன் வந்து சேர்ந்து விட்டது.
அந்த களேபரத்தில் தப்பித்து ஓடியவர்கள் கிடைத்த சேவலை எடுத்து அணைத்து பிடித்தபடி ஓடி மறைந்து போனார்கள்.
கிட்டத்தட்ட காலை பத்துமணிக்கு ஸ்டேசனின் வாசலில் வந்து உட்கார்ந்தவர்கள், மாலை ஆறு மணி ஆகியிருந்தது. சேவ இனி கிடைக்காது என்று உணர்ந்தது போல காத்திருந்த நான்கு பேர் நழுவி விட்டார்கள். சுப்பனும் கிளம்பியிருப்பான், பாவம் ரங்கன், இரண்டு சேவலை கொண்டு வந்திருந்தான், இரண்டுமே பிடிபட்டு விட்டது. அவனுக்காக இவ்வளவு நேரம் கூட இருந்தான்.
போலீஸ்காரர் ஒருவர் வெளியே வந்து எவனுக்கு சேவ வேணுமின்னா உள்ள வந்து வாங்கிட்டு போ’ என்று சத்தமாய் சொல்லும்போதே இவன் மனதுக்குள் ‘கருக்’ என்றது. ரங்கனிடம் சொல்லி பார்த்தான், வேண்டாம், போயிடலாம், சேவ போனா போகுது என்று. அவன் இவனையே குற்றம் சாட்டி பேசவும் சரி நமக்கென்ன கிளம்பி விட்டான்.
இரண்டு மூன்று நாட்களாக ரங்கனை பார்க்கமுடியவில்லை, அன்று பார்த்தபோது பயந்து விட்டான், நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தான். எங்கே தன்னிடம் சண்டைக்கு வருவானோ என்று பயந்து போனவனிடம் ரங்கனே வலிய வந்து பேசினான்.
“நீ சொன்ன மாதிரி சேவ போனா போகுதுன்னு வந்துருக்கணும், சேவலை வாங்கிக்கன்னு சொல்லி உள்ளே கூட்டிட்டு போய் “மாத்தி தள்ளிட்டானுங்க” இனிமே சேவ கட்டுக்கு போவியாடான்னு கேட்டு பின்னிட்டாங்க.
“சேவலுக்கு சேவலும் போயி, அடிவாங்குனதுதான் மிச்சம்” ம்..என்ன செய்ய அலுத்தபடி நொண்டிக் கொண்டு நகர்ந்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jun-23, 11:31 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 56

மேலே