நிலையில்லா வாழ்வு ஒரு நீர்க்குமிழி

வெள்ளை தாளில் உற்றிய
கருப்பு மையால் நிறம் மாறிய
கருமை நிறைந்த இரவுநேரம்
நெஞ்சில் புதைந்த நினைவுகள்
விடாது எழுகின்ற அலைகளாய்
இதயச் சுவற்றில் மோதிட
உறங்காத மனமுடன் உடலும்
இணைய விழித்த நிலையில்
விட்டத்தை பார்க்க விரைவுச்
செய்திகளாக வரிசைப்படி
மனதில் எதிரொலித்தன !

பால்யப் பருவம் பள்ளிப் பருவம்
களிப்புடன் கழிந்த
கல்லூரிப் பருவம்
இனிய இளமைக்காலம்
அலுப்பின்றி பணியாற்றிய
அலுவலகங்களின் நினைவுத்
தொகுப்பாக பலவற்றில்
முக்கிய செய்திகளாக
முரசு கொட்டியது !

வாழ்ந்து மறைந்த முகங்கள்
சந்தித்த சகலவித மனிதர்கள்
அறிவுரை கூறிய ஆன்றோர்
போதித்த பற்பல சான்றோர்
தூரத்தில் இருந்த ரசித்த
ஊரார் போற்றிய தலைவர்கள்
மனதில் அழியாத சுவடுகளான
நிலைத்த அனுபவங்கள் என
நீங்காத நினைவுகள் !

பார்த்து அறிந்தவை
பாடமாகி
பெரியோர் வாழ்க்கை
பாதையாகி
அனுபவங்களால் பெற்றவை
வழிகாட்டியாகி
கானல் நீர் எதுவென்றும்
கடல் நீர் எதுவென்றும்
அறிந்திட முடிந்த
ஆற்றலுடன்
முடிந்துவிட்ட காலத்தை
அசைபோட்டு
முடியவுள்ள நொடியை
நினைத்து நடைபோடும் நான்
சாமானிய மக்களில்
மிகவும் சாமானியன் !

மறையும் வரை
என் மனம் நினைத்திடும் !
மரணித்த பின்
மண்ணே மறைத்துவிடும் !
புதைக்கப்பட்ட பின்னால்
வெட்டி எடுக்க நானென்ன
கீழடி அகழாய்வா ?
எரிக்கப்பட்டதும்
என் உடலென்ன
வைரம் பதித்த
தங்கத் தகடுகாகுமா ?

நிலையில்லா வாழ்வு ஒரு
நீர்க்குமிழி தான் !

எழுதியவர் : பழனி குமார் (25-Jun-23, 7:42 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 154

மேலே