புரியாத உலகம்

புதிராகி போனது புரியாத இவ்வுலகம்
தெரியாமல் பிறந்தோமென அறியாமல்
தவிக்கும் ஜீவன்கள் இன்று அதிகம் !
கற்றவன் கடைகோடியில் நிற்கிறான்
பெற்றவர் பேராவலில் பெருமூச்சு !
ஆரம்பப் பள்ளியின் வாசலை மிதியாதார்
மாளிகையில் வாழ்கிறார் கோடியில் புரள்கிறார் !

சாதியால் சச்சரவும் காதலால் மோதலும்
பழிதீர்க்கும் படலமும் தினம் அரங்கேற்றம் !
குடும்பத்தில் குழப்பம் அதிரடி திருப்பம்
கணவனை மனைவி, அண்ணனை தம்பி,
தந்தையை மகன் படுகொலை பாதகங்கள்
நாளும் காணும் முக்கிய செய்திகள் !

அரசியலை அலசினால் பித்தன் ஆவோம்
அரிச்சுவடி அறியாது ஆத்திச்சூடி கூறுவது !
மதமும் மொழியும் வெறியுடன் திரிவதால்
மதம் பிடித்தோர் மனிதம் இழக்கின்றனர் !
சித்தாந்த ரீதியில் சிதறும் நெஞ்சங்கள்
சிறிதேனும் சிந்தித்தால் அமைதி நிலவும் !


பழனி குமார்
26.06.2023

எழுதியவர் : பழனி குமார் (26-Jun-23, 2:53 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : puriyaatha ulakam
பார்வை : 192

மேலே