பரிசழிந் தாரோடு தேவரும் ஆற்றல் இலர் - பழமொழி நானூறு 350

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண்
சொல்ஆடு வாரையும் அஞ்சற்பாற்று - எல்அருவி
பா’ய்’வரை நாட! பரிசழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர். 350

- பழமொழி நானூறு

பொருளுரை:

விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே! பண்பு இல்லாதவர்களோடு தேவர்களும் ஒருசொல் கூறுதற்குக்கூட வலிமை யில்லாதவர்களாய் முடிவர்.

ஆகையால், நூல்களைக் கல்லாதும், கற்றாரிடம் கேளாதும் அறிஞர்களது அவையிடைச் சிலசொல் சொல்லுதல் உடையாரையும் இவரோடு வாதாடின் நாம் தோற்போம் என்றெண்ணி அஞ்சும் தகுதியை உடையது.

கருத்து:

கற்றார் கல்லாரோடு வாதாடுதல் கூடாது.

விளக்கம்: பரிசு – பண்பு, அஃதாவது நற்பண்பு. தேவரும் கயவரும் தம்மை நியமிப்பாரின்றி விரும்பியவாறு செய்தொழுகுதலின் ஒப்பாராயினும், நன்மை தீமை அறியாராகிய கயவரின் அறிவாராகிய தேவர் இழிந்தவராதலின், கயவரோடு ஒருசொல் கூறுதற்குக்கூட ஆற்றல் இல்லாது போயினர். சொல்லாடுவாரையும் என்ற உம்மையால் கல்லாரையும், கேளாரையும் காண்டற்கும் அஞ்ச வேண்டும் என்பது பெறப்பட்டது.

'பரிசழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்' -இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-23, 2:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே