காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப் பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ - பழமொழி நானூறு 351
இன்னிசை வெண்பா
கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
ஊரறியா மூரியோ இல். 351
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஊரில் வாழ்பவர்களால் அறியப்படாத பொலி காளை இல்லை, அதுபோல,உண்மை ஞானம் உடையார் வாயால் சொல்லும் நற்குணம் உடைய சொற்களை மனத்துட் கொள்ளாது. அஞ்ஞானத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு தீய செயல்களைச் செய்தொழுகுவோரை அவரது பேரினை அறியாதவர்களாகிய அறிவிலிகள் யாவர் உலகத்துளர்! யாவரும் இல்லை.
கருத்து:
கயவர் எல்லோராலும் அறியப்படுவர்.
விளக்கம்:
மூரி என்றமையால் பேதைகளும் தம்மை அடக்குபவர்களும், விடுபவர்களுமின்றித் தம் விருப்பம் போல் நடப்பார்கள் என்பது பெறப்படும்.
அறிவுடையோரைப் பேதைகள் என்றது மூரி போல்வாரின் பேதைமையைக் குறித்தல் வேண்டி. உலகத்தில் எங்கும் சென்று தமது தொழில்களை ஆற்றித் தமது புகழைப் பரவச் செய்திருத்தலான் யாருளர் என்றார். இவரும் ஒருவகையால் உலகத்தாரால் அறியப்படுவார் என்பது.
'ஊர் அறியா மூரியோ இல்' என்பது பழமொழி.