பெண்ணே பேராற்றல்

மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திருக்க வேண்டுமாம்...
மாதவம் செய்து பிறந்ததெல்லாம்
மானபங்கப்பட்டு அழிந்திடத் தானா?
பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தாராம்
புவி பேணும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்
மானம் மட்டுமே பெண்மை என்றர்
எங்களை அடக்கிடத்தானா?
திரௌபதிக்கு ஆடை கொடுத்துக்
காத்தாராம் கண்ணன்..
இன்று இவள் ஆடையை அவிழ்க்கையில்
ஒரு கண்ணன் கூட அங்கில்லையா ?
கூறிய,கூறும் கட்டுக்கதைகளை எல்லாம்
கேட்டு வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்ததெல்லாம் போதும்...
கட்டிப்போடும் மடமை கொண்ட
சில கலாச்சாரக் கருத்துக்களை
காப்பாற்றிய காலமெல்லாம் போதும்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய் நின்று
நடை, உடை,பாவனை என்று
பழித்து பயமுறுத்தியது போதும்...
பாதுகாக்கும் ஆண் இனம்
என்ற பகல் கனவும் போதும்...
ஜாதிச் சண்டை ,மதச் சண்டை,
நாட்டுச் சண்டை , ஓட்டுச் சண்டை
என காரணம் நூறு சொல்லி
உன்னை இரையாக்க வரும் அனைவரையும்
தீயாய் நின்று எரித்து விடு
பெண்ணியம் என்ற பேராற்றலால்🔥

எழுதியவர் : தமிழ் தாரணி (24-Jul-23, 11:13 am)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 3371

மேலே