சின்ன சின்ன கவிதைகள்
மோசமான சாலைகளில் பயணித்த லாரியின் டியூப்
புதிய சாலை போடும் கூலியின் கால்களில்.
------------------------------------------------------
பிறக்கும் போதே
பொட்டு வைத்தபடி பிறக்கிறது பூவரசம்பூ.
------------------------------------------------------
ஆட்கள் நகர்வதற்காக அல்லாமல் வருவதற்காக ஹார்ன் அடிக்கிறார்கள்
ஐஸ் வண்டிக்காரர்கள்.
------------------------------------------------------
காய்கள் பழுக்கின்ற
அதே மரத்தில்தான்
பழுக்கின்றன இலைகளும்..
------------------------------------------------------
மலைப் பாதையில் செல்லும்போது காலில் தட்டுப்படும் கூழாங்கற்கள் நகரும் மலைகள்.
------------------------------------------------------
இரவுக்கும் இரவுக்கும் இடையே ஒரேயொரு பகல்
பகலுக்கும் பகலுக்கும் இடையே எத்தனை தூங்காத இரவுகள்!
------------------------------------------------------
விதையில்லாமல் வேர் தோன்றுகிறது
பார்வை இல்லாதவர்களின் காதல்!!
------------------------------------------------------
வீட்டுக்குள் பணம்
திருடனுக்குக் காட்டிக்கொடுக்கிறது
காம்பௌண்ட் சுவரில் பீங்கான்.
------------------------------------------------------
சாணி தெளித்த
முற்றத்தில் எல்லாம்
செரிக்காத பிளாஸ்டிக்..
------------------------------------------------------
நீண்ட காலம் கழித்துச்
சொந்த ஊருக்குத் திரும்புகையில்
டிக்கெட் வாங்காமலேயே பயணிக்கின்றன
நம் ஞாபகங்கள்.
------------------------------------------------------
எல்லா ஜன்னல்களும் வானத்தைக் காட்டுவதில்லை.
சில ஜன்னல்கள் எதிர்வீட்டு ஜன்னலை மட்டுமே காட்டுகின்றன..