கலிப்பா - நான்கு வகை
மார்கழியின் பனிமழையில் மதிமுகத்தாள் முகங்காட்டிக்
கார்பருவ எழிற்கோலம் கனிவுடனே அலங்கரிக்க
ஊர்முழுதும் மகிழ்ச்சியினை உலகிற்குப் பறைசாற்ற
பார்மிசையில் பருவமகள் பரவசமாய் குடியிருந்தாள்.
இதனாற்றான்
மார்கழிப் பனியில் மங்கை கோலம்
ஊர்தனில் மகிழ்ச்சியை உலகில்
சொல்லுதல் மரபு ; சோகம் தீர்க்குமே!
(நேரிசை ஆசிரியச் சுரிதகம்)
கலிப்பா நான்கு வகையாகும். அவை ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, வெண்கலிப்பா என்பன.
இப்பாடல் கலிப்பாவின் வகையான "கொச்சகக் கலிப்பா" ஆகும்.
கொச்சகம் என்பது கொச்சை (சிறப்பிழந்த) என்று பொருள்படும். ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புகளுள் சில பெற்றும், கூடியும், மயங்கியும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் வருவதால் கொச்சகக் கலிப்பா எனப்பெற்றது.
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை,
தரவு கொச்சகக் கலிப்பா,
தரவிணைக் கொச்சகக் கலிப்பா,
சிஃற்றாழிசைக் கொச்சகக் கலிப்பா,
பஃற்றாழிசைக் கலிப்பா,
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டது "தரவு கொச்சகக் கலிப்பா " ஆகும்.
பொது இலக்கணம்
★ நான்கடி கொண்டதாய்,
★ நான்கடிகளும் ஒரே எதுகையைக் பெற்று,
★ அடிதோறும் பொழிப்பு மோனை பெற்று,
★ தரவோடு இணைந்த பொருள் கொண்ட "தனிச்சொல்" பெற்று,
ஆசிரியச் சுரிதகத்தைப் பெற்று,
(வெண்பா சுரிதகமும் வரலாம்.
ஆனால் பயிற்சியில் ஆசிரியச் சுரிதகமே கொள்க)
★கலித்தளையைப் பெற்று (காய்முன் நிரை)
நேரீற்றுக் காய்ச்சீர் ஒன்றிரண்டு
வரலாம்.
கலித்தளையான் வருவது துள்ளலோசையுடன் சிறக்கும்.
★ஆசிரியச் சுரிதகம் ஆசிரியப் பாவின் இலக்கணம் பெற்றும், வருவது
"தரவு கொச்சகக் கலிப்பா" எனப்படும்.
திருமதி சரஸ்வதி பாஸ்கரன் (16-Dec-15, 8:28 am) பதிந்தது.