இலக்கியம் கொடுத்த தீர்ப்பு
இலக்கியம் கொடுத்த தீர்ப்பு
(இப்படி நடக்குமா என்று நினைக்காதீர்கள் நடந்திருக்கிறது தமிழ்நாட்டில் )
நீதி மன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க போகும் நீதிபதிக்காக காத்திருந்தது.
தீர்ப்பு தனக்கு சாதகமாகத்தான் வரும் என்னும் நம்பிக்கையில் காத்திருந்தார் கண்ணன்.
தீர்ப்பு தனக்கு எதிராகத்தான் வரும் என்றாலும் எப்படி வரும் என்னும் எதிர்பார்ப்பில் பரமேஸ்வரன்.
“கண்ணன் அவர்கள் பரமேஸ்வரன் அவர்களுக்கு ரூபாய் இருபதாயிரம் கடன் கொடுத்திருந்தது உண்மைதான் என்பது நிருபணமாகிவிட்டதால், அந்த பணத்தை குறிப்பிட்ட கால தவணைக்குள் அவரிடம் திருப்பி தராமல் காலாம் தாழ்த்தியதாலும், மேற்கொண்டு அந்த பணத்துக்கு உரிய வட்டி தொகையும் அளிக்க மறுத்ததாலும் குற்றம் சாட்டப்பட்டவர், வழக்கை நடத்தியவருக்கு முழு அசல்தொகை, அதற்குண்டான வட்டி தொகை, அது போக, அவர் வழக்கு நடத்த செலவான தொகை ரூபாய் பத்தாயிரம், வழக்கில் தவறு செய்ததற்கான அபராத தொகையாக நீதிமன்றத்துக்கு ரூபாய் ஐந்தாயிரம் ஆக மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் இந்த மன்றத்தில் கட்டவேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
தவறினால் ஆறு மாத கடுங்காவல் தண்டணை வழங்கப்படும் என்று இந்த நீதி மன்றம் எச்சரிக்கிறது. இதற்கு கால தவனையாக மூன்று நாட்கள் மட்டும் அளிக்கப்படுகிறது. தவறினால் தண்டனையை ஏற்றுக்கொள்ள நேரிடும்
பரமேஸ்வரனுக்கு இந்த தீர்ப்பு சிரிப்பைத்தான் வரவழைத்தது. இத்தனை பணம் இருந்தால் அவர் ஏன் கொடுக்காமல் இழுத்தடிக்கப்போகிறார். பணத்தை கண்ணனுக்கு விட்டெறிந்திருக்க மாட்டாரா?
கண்ணனும், பரமேஸ்வரனும் சிநேகிதமாயிருந்த காலத்தை நினைத்து பார்க்கிறார். இருவரும் அந்த நகரில் இருக்கும் அங்காடி தெருவில் இருந்த கடைகளில் வேலை பார்த்து வந்தவர்கள். பரமேஸ்வரன் பாத்திரக்கடையிலும், கண்ணன் துணிக்கடையிலும் வேலை பார்த்தவர்கள். தினமும் கடைக்குள் நுழையும் முன்னர் பத்து நிமிடம் பேசி பொழுதை கழிக்க ஆரம்பித்தவர்கள், காலம் போன போக்கில் இருபது வருடங்களாக நட்புடன் தான் இருந்தார்கள்.
திடீரென பரமேஸ்வரன் வேலை செய்த கடை முதலாளி கடை நஷ்டத்தில் ஓடுவதாக சொல்லி வேறொருவருக்கு விற்று விட்டார். வாங்கியவர் செலவை குறைக்கும் நோக்கில் நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டது என்று சொல்லி பரமேஸ்வரனுக்கு கல்தா கொடுத்தனுப்பி விட்டார்.
அப்பொழுதுதான் இரண்டு குழந்தைகள் ஒன்று ஆறிலும், எட்டிலும் படித்து கொண்டிருக்க, திடீரென வேலை போய் விட்டதால் என்ன செய்வது என்று திகிலடித்து போய்விட்டார் பரமேஸ்வரன்.
வேலைக்கு போய்க்கொண்டிருந்த காலங்களிலேயே பரமேஸ்வரன் தன் சம்பளத்தில் ஒரு பங்கை இலக்கிய கூட்டங்களுக்கும், பத்திரிக்கை, நூல்கள் வாங்கி போடவும் செலவு செய்து கொண்டிருப்பார். இரவு முழுக்க எழுதிக்கொண்டே இருப்பார். அவர் மனைவி சத்தம் போட்டு தூங்க சொன்ன பின்னால் “இதா முடிச்சிடறேன்” சொல்லிவிட்டு அரைமணி ஒரு மணி நேரமாவது எழுதி முடித்து விட்டே படுக்க போவார். மணி அப்பொழுது இரண்டு மணிக்கு மேல் ஆகியிருக்கும்.
ஒரு வேலை..! சம்பளம் என்னவோ பெரிய தொகை அல்ல, என்றாலும் அது கொடுத்த ஒரு சமூக பாதுகாப்பு, வீட்டு வாடகை, மாதாந்திர செலவு,இலக்கிய ஈடுபாடு எல்லாவற்றிற்கும் அவருக்கு துணையாக இருந்தது. அந்த வேலையே போன பின்னால்..!
எங்கு போனாலும் வயதை காரணம் காட்டி தவிர்த்தார்கள். இல்லாவிட்டால் அவருக்கு பொருத்தமில்லாத பணியை கொடுத்து அவராகவே கழண்டு கொள்ளும் அளவிற்கு நெருக்கடி கொடுத்தார்கள். அப்படியும் சமாளித்து வேலைக்கு செல்லத்தான் முயற்சி செய்வார். ஆனால் விதி, சதியாக அவரை அங்கிருந்து விரட்டி விடும்.
இவர் அவ்வப்பொழுது எழுதி அனுப்பிய கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பத்திரிக்கைகள் அனுப்பி வைக்கும் சிறு தொகை கொஞ்சம் பலனளிக்கும், என்றாலும் நிரந்தர வருமானம் இல்லாமல்..! அது மட்டுமல்லாமல் இப்பொழுதெல்லாம் எழுத உட்கார முடிவதே இல்லை, எப்படி எழுத முடியும்? குடும்ப வறுமை, குழந்தைகளின் பசி, கணவன் மனைவி இருவரும் என்னதான் பசியை மறைத்து கொண்டாலும் அது முடியாமல் ஒரு கட்டத்தில் எழுதியவைகளை தெரிந்த பதிப்பகத்தாரிடம் கொண்டு போய் கொடுத்து கிடைத்த தொகையை வாங்கி வீட்டு செலவுகளில் மூழ்கடித்து விட்டார்.
அப்பொழுது கண்ணனிடம் வாங்கிய கடன் பதினைந்தாயிரம், பாவம் கண்ணனும் அங்கு இங்கு சேமித்து வைத்திருந்ததை இவரின் கஷ்டம் பார்த்து கொஞ்சமாய் வட்டி போட்டு இவருக்கு கொடுத்தார். மாச வட்டி கொடுத்திருந்தாலும் சமாதானமாயிருந் திருப்பார் கண்ணன். பரமேஸ்வரனால் சுத்தமாக கொடுக்க முடியவில்லை, ஒரு வருடம், இரண்டு வருடம் வரை காத்திருந்த கண்ணன் வேறு வழியின்றி நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அதுவும் “அந்தா, இந்தா”, என்று வாய்தா வாங்கி கடைசியில் தீர்ப்பில் வந்து முடிந்து விட்டது.
பரமேஸ்வரனுக்கு கண்ணன் மேல் கோபம் வரவில்லை. பாவம் அவன் என்ன செய்வான்? என்னை போல அவனும் சாதாரண மனிதன் தான். அவனுக்கும் எத்தனை செலவுகள் இருக்கும்? உறவுகளே தனக்கு உதவிக்கு வராதபோது இவன் வந்து உதவி எத்தனையோ செய்து, இந்த பணமும் கொடுத்திருக்கிறான். நம்முடைய போறாத காலம் அவனிடம் பணம் பெற்று அவனை இந்தளவுக்கு சிரமபடுத்தி விட்டோம்.
இப்பொழுது கூட அவரால் பணம் கொடுக்க முடியாது. சிறை தண்டனையை ஏற்று கொள்ளத்தான் மனம் விரும்பியது. நேரத்துக்கு உணவு, அவர்களே உடையும் கொடுத்து விடுவார்கள், நிம்மதிதானே, ஆனால் குடும்பம்..? அதுதான் அவருக்கு பெரிய மன சுமையாக இருந்தது. தான் சுயநலமாய் சிறைக்கு போய்விட்டால், அவர்கள் நிலைமை..?
மறு நாள் மாலை வீட்டில் என்ன செய்வது என்னும் மன நிலையில் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தார். அப்பொழுது பரமேஸ்..குரல் பழகியது போலிருக்க, அங்கிருந்தே வாசலை பார்த்தார். வண்டிகள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஒற்றை வாசல் கொண்ட காம்பவுண்டுக்குள் சிறு சிறு அறைகளாக தடுக்கப்பட்டு வரிசையாய் அமைந்திருக்கும் வீடுகள். மொத்தம் ஏழு வீடுகள், இவரது வீடு கடைசியில் இருந்தது.
இவர் வீடு கடைசியில் இருந்ததால் அங்கிருந்து வாசல் வழியாக பார்க்கும்போது பாதையில் நின்றிருந்தவர் யாரென தெரியவில்லை.இருந்தும் குரல் கேட்டது போல இருக்க எழுந்து அந்த வாசலுக்கு வந்தார்.
கண்ணன் நின்று கொண்டிருந்தார். என்னை மன்னிச்சுக்கோ பரமேஸ், எனக்கும் ரொம்ப பண முடை, வேற வழியில்லாமத்தான் உன் மேல கேசை போட்டேன். நான் வரட்டுமா? ரொம்ப நன்றி..சொல்லி விட்டு அவர் வேகமாக அங்கிருந்து நடந்து விட்டார்.
இது என்ன? வழக்கு கொடுத்தவன் மன்னிப்பு கேட்டுட்டு நன்றின்னு சொல்லிட்டு போறான், திகைப்பாய் இருக்க, அவனை பின் தொடர்ந்து போய் கேட்கலாமா? நினைத்தவர் நினைத்து கொண்டேதான் நின்றாரே தவிர அசையவே இல்லை.
மறு நாள் காலை இவர் பேரை சொல்லி யாரோ அழைக்க இவர் வெளியே வந்து பார்த்தார். ஜட்ஜ் ஐயா ஆபிசுல இருந்து வர்றேன், உங்க பேரு பரமேஸ்வரனா?
ஓ..சிறைக்கு செல்ல அழைப்பு வந்து விட்டது, மனம் நடுக்கத்திற்கு செல்ல ஐயா உள்ள போயி சொல்லிட்டு…
அதுக்கெல்லாம் நேரமில்லை, இப்படியே கிளம்புங்க, வந்த ஆள் அவசரப்படுத்தி அவரை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்தவன் வண்டியை முறுக்கினான்.
கடவுளே ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி வீட்டுல சொல்லாம வந்துட்டமே, மனம் முழுக்க துக்கமாக வண்டி எங்கே போகிறது என்று கூட கவனிக்காமல் உட்கார்ந்திருந்தார்.
ஒரு பெரிய பங்களாவின் முன்னால் நின்றது இவர்கள் சென்ற வண்டி, பரமேஸ்வரனை இறக்கி விட்டு விட்டு அவர் உள்ளே போங்க, ஐயா காத்துகிட்டிருக்காரு, சொல்லி விட்டு வண்டியை எடுத்து பறந்து விட்டான்.
யார் ஐயா? எதுக்கு காத்திருக்காரு? பயத்துடன் அந்த பங்களா காம்பவுண்ட் கேட் அருகே போனார்.
வாங்க, கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி அவரை எதிர்பார்த்து காத்திருந்தவன் போல் பங்களாவை நோக்கி அழைத்து சென்றார். பங்களா வாசல் தாண்டி வலது புறத்தில் இருந்த புல் சமவெளியில் இருவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, ஒரு நாற்காலி காலியாக இருந்தது. கூட்டி சென்ற செக்யூரிட்டி அவரை அவர்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தினான்.
அருகே போன பின்புதான் உட்கார்ந்திருந்தவரில் ஒருவரை அடையாளம் தெரிந்தது இவர் அன்னைக்கு தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் ஐயா இல்ல..!
வாங்க, உட்காருங்க, ஜட்ஜ் அழைக்க, இவருக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது, வேண்டாங்க நிக்கறேன், தயங்கினார்.
மேலும் அவரை தொல்லை படுத்த விரும்பாத ஜட்ஜ், பக்கத்தில் இருந்தவரிடம் இவருதான் அந்த பரமேஸ்வரன், இவருக்குத்தான் உங்க கம்பெனியில வேலை போட்டு கொடுக்கணும்னு சொன்னேன்.
ஓ..நீங்க சொன்ன பரமேஸ்வரன் இவர்தானா? சரி நாளைக்கே வந்து கம்பெனியில சேர்ந்துக்க சொல்லுங்க, கணக்கு வழக்கு எல்லாம் பார்ப்பாரு இல்லையா?
பரமேஸ்வரனுக்கு நடப்பது எதுவும் புரியாவிட்டாலும், தனக்கு இவர் வேலை கொடுக்க போகிறவர் என்பது புரிந்ததால் தலையை ஆட்டினார்.
இந்தாங்க, இந்த கம்பெனி தெரியுமில்லையா? ஒரு கார்டை அவர் கையில் கொடுத்தார். வாங்கி பார்த்த பரமேஸ்வரனுக்கு அது எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும், ‘தெரியாது’ என்று சொன்னால் நன்றாயிருக்காது என்பதால் ‘தெரியும்’ என்பது போல் தலையாட்டினார்.
நாளைக்கு காலையில சரியா எட்டரைக்கு வாசல்ல வந்திடுங்க, மத்ததை கம்பெனிகாரங்க பார்த்துக்கிடுவாங்க.
ரொம்ப நன்றிங்க இருவரையும் பார்த்து கும்பிடு போட்டவர் அடுத்து என்ன செய்வது என்னும் திகைப்பில் நின்றார். அதற்குள் பணியாள் மூன்று தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து கொடுக்க ஜட்ஜ் ஒன்றை எடுத்து இவர் கையில் கொடுத்து சாப்பிடுங்க..
ஐயா..வேணாங்க தயங்கினவுடன், ஜட்ஜ் எழுந்து அருகில் வந்து கொடுக்க வேறு வழியில்லாமல் வாங்கி அதை குடித்தார்.
பரமேஸ்வரன் பங்களா கேட்டுக்கு அருகே நடந்து வரவும் அவரை அழைத்து வந்தவன் வண்டியோடு காத்திருந்தான். என்ன நடக்குது இவருக்கு? ஒன்றும் புரியாமல் வந்தது போல இப்பொழுதும் வண்டியில் ஏற இவர் வீட்டை நோக்கி வண்டி விரைந்தது.
பரவாயில்லை சார், நீங்க இலக்கியத்துக்கு வெளிப்படையா ஒண்ணும் செய்யாதது மாதிரி தெரிஞ்சாலும், இப்படி ஏதாவது செய்துகிட்டேதான் இருக்கறீங்க, ஜட்ஜை பார்த்து அருகிலிருந்தவர் சொல்ல..
ஜட்ஜ் மெல்ல சிரித்தபடி ஆமா அன்னைக்கு இவருக்கு தீர்ப்பை சொல்லிட்டு சாயங்காலம் என்னைய புத்தகம் வெளியிட சொல்லியிருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அந்த பப்ளிஷர் நல்லா தெரிஞ்சவர். அந்த புத்தகத்தை ரிலீஸ் பண்னறதுக்கு நான் எழுந்து தயாரானபோதுதான் அந்த வெளியீட்டாளர் வந்து எழுத்தாளருக்கு நான் கொடுத்த தீர்ப்பை சொன்னாரு.
எனக்கு அதிர்ச்சியாயிடுச்சு, அவரா இந்த புத்தகத்தை எழுதுனவரு, வீட்டுக்கு வந்து வழக்கு போட்டவருக்கு பணத்தை நானே அனுப்பிச்சு செட்டில்மெண்ட் பண்ணிட்டு கோர்ட்டுக்கு கட்ட வேண்டியதையும் கட்டசொல்லி ஏற்பாடு பண்ணிட்டேன். அதுக்கப்புறம்தான் விசாரிச்சு பார்க்க இவருக்கு வேலை போனதை சொன்னாங்க, அதுதான் உங்களை காலையில வர சொல்லி தொந்தரவு கொடுத்துட்டேன்.
இப்படி சொல்லாதீங்க, நாம இரண்டு பேரும் இலக்கியத்தை விரும்பறவங்க, நீங்க ஒரு எழுத்தாளனுக்கு இப்படி உதவி செய்யும்போது நான் ஏதாவது செய்யறது என் கடமையில்லையா..! இரண்டு பேரும் நம்ம வேலையில சரியா இருந்தாலும் இப்படி ஒண்ணு இரண்டு உதவி செய்யறதுல என்ன தப்பு இருக்கு?