1 மினர்வா

“A short story is a sprint, a novel is a marathon. Sprinters have seconds to get from here to there and then they are finished.

Marathoners have to carefully pace themselves so that they don't run out of energy (or in the case of the novelist-- ideas) because they have so far to run.

To mix the metaphor, writing a short story is like having a short intense affair, whereas writing a novel is like a long rich marriage”

Jonathan Carroll

********************

மாலை ஐந்து மணி.

வெப்பநிலை முப்பத்தி இரண்டு டிகிரி செல்சியஸ்.

மதுரை.

ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை.

தனி அறை. சில பழங்கள். மருத்துவமனைக்கே உரிய நறுமணம் கலந்து கூடவே மட்கிய வாடையும். அதில் மரண மூச்சின் சப்தம் கூட கேட்கும்.

ட்ரேயில் சில மாத்திரைகள். அதற்கு கீழே எனக்கு தேவையான சில புத்தகங்கள்.

என் எதிரில் பூர்ணிமா.

பூர்ணிமாவை பற்றி ஏதேனும் நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? அவள் திறன் மிக்க தீவிர வாசகி என்ற அளவிலேனும்.

வாய்ப்பு கிடைத்தால் அவ்வப்போது இணையங்களில் சில செயலிகளில் அவள் எழுதுவதும் உண்டு.

இப்போதும் அவளைப்பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய அடுத்த கேள்வி இதுதான்…

எப்பொழுது உங்களுக்கு மழையானது நிலத்தில் சடசடத்தால் பிடிக்கும்?

எனக்கு, நான் எதையாவது ஒன்றை ஆர்வமாக யோசிக்கும்போது அல்லது ஏதேனும் ஒன்று என்னை தீவிரமாக யோசிக்க வைக்கும்போது மழை வந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவேன்.

அப்படி ஒரு மழை வருவதற்கு முன்னால் மினர்வா நாவலை நீங்கள் படித்தது உண்டா? என்று பூர்ணிமா போத்தி கபேவில் வைத்து என்னிடம் கேட்டாள்.

இடம் திருவனந்தபுரம், தம்பானூர் பேருந்து நிலையம் அருகில். அங்கே கூட்டம் அதிகம் இல்லை. மேலும் அன்றைக்கு சாலைக்கடையில் கடை வைத்திருக்கும் எழுத்தாளர் ஆ. மாதவனை நான் சந்திக்க முடியாது என்ற நிலையில் பேசுவதற்கு அங்கே வரவைக்கப்பட்டவள்தான் இவள்.

பூர்ணிமா என்னிடம் இந்த கேள்வியை கேட்டபோது என் யோசித்து நினைவில் தெரிந்தவரை அப்படி ஒரு நாவலை படித்தது இல்லை என்றேன்.

ஏன் இன்னும் படிக்கவில்லை? அதில் என் மாமா கோபிநாத் பற்றிய நிறைய குறிப்புகள் கூட வருமே என்றாள்.

யார் உன் மாமா என்று நான் பதிலுக்கு கேட்டபோதுதான் அன்றைக்கு அந்த மழையானது அமைதியாக பெய்தது.

⬇️➡️➡️➡️➡️➡️⬇️

சட்டென்று யூகிக்க முடியாத திருப்பங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை நான் அறவே நம்பவில்லை. எனினும், அது ஏதோ ஒரு திருப்பத்தை திடீரென உருவாக்கி தன்னளவில் அமைதியாக நம்மை கண்காணிக்க தொடங்குகிறது.

திருப்பம் என்பது வாய்ப்பா அல்லது சவாலா என்பதை கணிக்க முடியாமல் நாம் திகைக்கும்போது நம்மை சுற்றி வளைத்து படர்ந்திருக்கும் காலத்தின் மீது இனம் புரியாத அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் உருவாகும்.

அதே நேரத்தில்தான் ஒருவிதமான ஆவலும் தேடலும் இயல்பாக உருவாகி வாழ்க்கைப்பயணத்தில் நாம் முன் செல்வதற்கு தேவையான அழுத்தமும் தைரியத்தையும் கொடுக்கிறது.

உங்களுக்கு அப்படியெல்லாம் வாய்ப்பு சவால் என்று உங்கள் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதை பூர்ணிமா என்னிடம் திரும்பவும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொன்னபோது…

நான் மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் என் உடல்நிலை மோசமடைந்து வந்ததால் சேர்க்கப்பட்டு இருந்தேன்.

எனக்கு எந்த திருப்பமும் நேரவில்லை. கானல் நீரை துரத்தி கொண்டிருக்கும் அவலமான மனதை நம்பி அந்த மனம் போனபோக்கில் வாழ்ந்து வந்ததன் விளைவுதான் இந்த மருத்துவமனையில் அடைத்து போட்டு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

ஸ்ட்ரெஸ் என்று மருத்துவ அறிக்கையில் பிள்ளையார் சுழி போட்டு கீழே வண்ண வண்ண மாத்திரைகளை அட்டவணை இட்டு தூக்கத்திலேயே வைத்திருந்தனர்.

மனிதர்களை விட்டு மனதளவில் விலகி வெளிவந்த பின்புதான் உண்மையான ஆறுதலை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் பழைய புத்துணர்ச்சியை நான் முற்றிலும் இழந்து இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் உங்களுக்கு பூர்ணிமாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

நான் முன்பு எழுதி கட்டுரை தொடராக வந்த அவளுடன் பேசும்போது கட்டுரைகளை வேர்ட்ப்ரஸில் படித்திருந்த பூர்ணிமா அந்த அனுபவம் குறித்து எனக்கு மெயில்கள் அனுப்ப தொடங்கினாள்.

சின்ன சின்ன உரைகள், விவாதங்கள் என்பது தாண்டி நேர்பழக்கத்துக்கு வரும்போது எங்களுக்குள் உள்ள பழக்கமானது எட்டு மாதங்களுக்கு மேலாகவும் முடிவடைந்து இருந்தது.

பூர்ணிமா கேரளத்தில் பிறந்த தமிழ் பெண்.

திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செல்லும் வழியில் இருக்கும் இடவை என்னும் கடலோர கிராமத்தில்தான் பூர்ணிமாவின் சிறுவயதுகள் கழிந்து இருக்கிறது. அங்குள்ள பள்ளியில்தான் பத்து வகுப்புகள் முடித்து இருக்கிறாள்.

திருவனந்தபுரத்தில் ஒரு புகழ் பெற்ற கலை கல்லூரியில் சேர்ந்து ஃபைன் ஆர்ட்ஸ் கோர்ஸில் படித்து இருக்கிறாள்.

பின் கலைப்பொருட்கள் செய்து அதை ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் சந்தையில் விற்கும் ஒரு நிறுவனத்தில் வேலையில் இணைந்து இருக்கிறாள்.

வேலையின் பொருட்டு மதுரை வந்து தோழியருடன் ஹாஸ்டலில் தங்கி மூன்று வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து இருக்கிறாள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நான் சிலமுறை திருவனந்தபுரத்தில் அவளை சந்தித்தது உண்டு.

தமிழ்நாடு பிடித்துபோக தன் வாழ்வை இங்கேயே தொடர விரும்பி தனியே வீடு எடுத்து தங்கி விட்டாள்.

மதுரையில் இருந்தவள் பின் எங்கள் ஊருக்கே வீடு எடுத்து வந்து விட்டாள்.

அவளுக்கு துணையாக இருப்பது இசை மற்றும் வாசிப்பு மட்டுமே என்றாள். கூட அவள் துணைக்கென்று இரண்டு சற்று வளர்ந்த லாப்ரடார் நாய்கள் இருந்தன.

எங்கள் பழக்கம் என்பது ஐந்து வருடங்களை கடந்தும் செல்கிறது. இடையில் ஒரு வருடம் அவள் ஜெய்ப்பூர் சென்று கைவினை தொழிலாளர்கள் பற்றிய மூன்று குறும்படங்களை தன் தோழி மாதங்கியுடன் இணைந்து இயக்கியும் இருந்தாள்.

அந்த காலகட்டத்தில் என் உடல்நிலை இன்னும் மோசமாக மாறி வருவதை உணர்ந்தேன். அதை அவளுக்கும் நான் தெரிவித்து இருந்தேன். அங்கிருந்து அவள் கிளம்பி வந்து விட்டாள்.

நிறைய குழப்பங்களும் நிறைய கேள்விகளும் உறவில் விழுந்த விரிசல்களும், உறவை வைத்து துரோகம் செய்தவர்களின் நினைவுகள் எல்லாம் புண்களாக மாறி எனது உள் உறுப்புகளை மிக மோசமாக பாதித்து இருந்தன என்று நினைத்தேன். அதை அவளிடமும் சொன்னேன்.

ஆனால் ஸ்பரி…. அலோபதியானது இவற்றுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்திருக்கிறது என்றாள் கசப்பான புன்னகையுடன்…

நானும் புன்னகைத்தேன். அது மட்டுமே என்னால் முடிந்தது.

எழுதியவர் : ஸ்பரிசன் (12-Aug-23, 6:58 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 34

மேலே