எங்க தெரு பிள்ளையாரு

எங்க தெரு பிள்ளையாரு

காளியப்பன் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது அந்த தெருவில் இருந்த பிள்ளையார் கோவில் ஜே.ஜே. என்றிருந்தது. காலையில் கும்பாபிசேகம் இருப்பதால் இரவு மக்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு பக்கம் அன்னதானமும் நடந்து கொண்டிருந்தது.
நடந்தபடியே கன்னத்தில் போட்டு கொண்டாலும் அவன் மனதுக்குள் ஆயிரம் வருத்தங்கள் ஓடி கொண்டிருந்தது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் பிள்ளையார் இதோ இந்த தெரு முக்கு மரத்தடியில்தான் இருந்தார். போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோருக்கும் பிள்ளையார் ஆசி வழங்கி கொண்டிருப்பார். ஸ்கூலுக்கு கிளம்பும் குழந்தைகள் முதல் இவனைப்போல அன்னாடங்காய்ச்சிகள் வரைக்கும் பிள்ளையார் ஒரு மருந்தாகத்தான் இருந்தார்.
பள்ளிக்கு போகும் குழந்தை பரீட்சைக்கு பிள்ளையாரை உதவிக்கு கூப்பிடுவது போல இவன் இன்னைக்கு யாராவது என்னைய வேலைக்கு கூப்பிட சொல்லு பிள்ளையாரே என்று வேண்டியபடித்தான் செல்வான்.
சில நேரங்களில் வேலை இல்லாதபோது இவனே அவருக்கு தண்ணீர் ஊற்றியும் அழகு பார்த்திருக்கிறான். அந்த காலம் எல்லாம் இன்று எங்கோ போய் விட்டது. இவனை போல அன்னாடம் ஐம்பது பைசாவுக்கும், ஒரு ரூபாயுக்கும் கற்பூரம் வாங்கி அவருக்கு கொளுத்தி காண்பித்துக்கொண்டிருந்ததெல்லாம் போய் இன்று அவர் இருக்கும் இருப்பென்ன? இவனெல்லாம் இன்று அருகில் கூட போக முடியாது.
வேண்டுமானால் சாமி கும்பிட கோயிலுக்குள் போகலாம். அதுவும் அவர் பின் புறமாக தனியாகத்தான் அமர்ந்திருப்பார். “மூலப்பிள்ளையார்” பேரு மட்டும் அவருக்கு மாறியிருந்தது. அங்கு பெரிய இடத்து பெண்கள் வரிசையாய் நின்றபடி குடம் குடமாக தண்ணீர் ஊற்றி அலங்கரித்து கொண்டிருப்பார்கள்.
கற்பூரம் ஊதுபத்தி இது எதுவும் கொண்டு போக கூடாது. “அங்கங்கு “கற்பூரம் ஏற்றாதீர்கள்” என்னும் போர்டு தொங்கி கொண்டிருக்கும். அதை விட அதை கண்கானிக்க இரண்டு மூணு பேர் சுற்றி கொண்டே இருப்பார்கள்.
எப்படி இவ்வளவு பெரிய ஆளானார் பிள்ளையார்? மனதுக்குள் அவனுள் எழுந்தது கேள்வி..!
பிள்ளையார் இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி தெரு முனையில ஒரு திட்டுல உட்கார்ந்திருக்கறப்ப, எல்லாரும் அவரை பார்த்துட்டுத்தான் போவாங்க. எங்க இருந்து பார்த்தாலும் அவர் உருவம் மேட்டுல இருந்ததுனால எல்லாருக்கு தெரிஞ்சது.
அவருக்கு கோயில் கட்டணும்னு ஆரம்பிச்சாங்க, அதுல இரண்டு கூட்டம் உருவாச்சு, அவங்க இவங்களை குறை சொல்லவும், இவங்க அவங்களை குறை சொல்லவும், எப்படியோ, அடிச்சு பிடிச்சு சமாதானமாகி ஒரு கட்டடத்தை கட்டி முடிச்சு வெளியில இருக்கற பிள்ளையார மூல பிள்ளையாருன்னு சொல்லி, அவரை கட்டிட பின் வெளியிலயே வச்சுட்டு புதுசா ஒரு பிள்ளையார செலவு பண்ணி கொண்டு வந்து, கட்டிடத்துக்குள்ள வச்சுட்டாங்க.
வீதியில இருந்த பிள்ளையாரையாவது வெளியிலேயே விட்டுருக்கலாம், அதைய விட்டுட்டா போறவன் வர்றவன் எல்லாம் அவரையே கும்பிட்டுட்டு அப்படியே கம்பி நீட்டிட்டா? அவரையும், இங்க கொண்டு வந்து புது பிள்ளையார் கட்டிடத்தையும் சுத்தி காம்பவுண்ட் போட்டு ஒரு கேட்டையும் போட்டு எந்த பிள்ளையார கும்பிடணும்னாலும் இந்த கேட்டுக்குள்ள் வந்துதான் போக முடியும்னு பண்ணிட்டாங்க.
அப்புறம் என்ன? கட்டிடம், காம்பவுண்டோட வந்தாச்சு, இனி அதை நிர்வகிக்கறது யாரு?, அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி, அரசியல் பிரபலங்களை கொண்டு வந்தாங்க. ஆளுற கட்சி பிரபலம் சொல்றது அங்க ஓங்கி கேக்கும், அதனால மத்தவங்க ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அடுத்து வர்ற ஆளும் கட்சி ஆன பின்னால, இவங்க கை ஓங்கி அவங்க ஒதுங்க ஆரம்பிச்சாங்க.
மாறி மாறி கோயில் நிர்வாகம் தள்ளாடி நடக்க, அப்புறம் என்ன நினைச்சாங்களோ கட்சிகாரங்களும் அதுல இருந்து ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதனால கொஞ்ச நாளைக்கு கோயிலை யாரும் கண்டுக்காம இருந்தாங்க.
திடீருன்னு தனியார் ஒருத்தரு அதை செலவு பண்ணி புதுப்பிச்சாரு. அப்ப கூட காளியப்பன் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் சொன்னான், சும்மா செலவு பண்ணி கட்டிடத்தை பெரிசு பண்னறதை விட அந்த செலவுல தினம் தீபம் எரியறதுக்கும், பிரசாதம் ஏதாவது கொடுக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணலாமுன்னு. யாரும் கண்டுக்கலை. இவனெல்லாம் யோசனை சொல்றதான்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏன்னா இப்ப கோயிலை கவனிக்கறதெல்லாம் இவனுக்கு பின்னாடி இங்க குடிவந்த பணக்காரங்க. அவங்க இலட்சக்கணக்குல செலவு பண்ணி கோயில கட்டி இப்ப பிரமாண்டமாயிடுச்சு.
ஆனா பக்தர்கள் வருகை குறைஞ்சுட்டுத்தான் இருந்துச்சு, எல்லாரும் இரண்டு தெரு தள்ளி ரோட்டு ஓரமா இருக்கற பிள்ளையார் பக்கமும், சிவன் கோயில் பக்கமும் போக ஆரம்பிச்சுட்டாங்க. ஏன்னா அங்க செலவு ரொம்ப கம்மி, நாம நினைச்ச மாதிரி பிள்ளையாரை தொட்டு அலங்காரம் பண்ணலாம். இங்க கட்டிடத்துக்குள்ள இருக்கற பிள்ளையாரு இரண்டு பேருன்னாலும் அவங்களை கவனிக்க அர்ச்சகர் தனியா வந்தாச்சு, அது மட்டுமில்லை, கோயில் கட்டிடத்துக்குள்ள ஏராளமான சாமி சிலைகளை கொண்டு வந்து வச்சுட்டாங்க. இப்படி இருந்தாலும் நாலஞ்சு வருசமா ஒருத்தரும் கண்டுக்காம இருந்தாங்க. அர்ச்சகர் மட்டும், காலையிலயும், மாலையிலயும் பூஜை பண்ணிட்டு போறாரு, அது கூட அவருக்கு அதுனால பிரயோசனமும், ஒரு முகவரியும் கிடைக்கறதுனால.
யாருக்காவது இடம் வாங்கணுனாலும், இல்லை வீடு வாடகை வீடு கிடைக்கனு மின்னாலும் கோயில்ல பூசை பண்ணறவரை கேளுன்னு சொல்லி அனுப்பறாங்க, அவருதான் இடம் வாங்க விற்க ஏஜண்ட், அப்ப இந்த மாதிரி பொது கோயில்ல அவருக்கு ஒரு உத்தியோகம் இருந்தா நல்லதுதானே. இப்படியாத்தான் போயிட்டிருந்துச்சு.
இப்ப திடீருன்னு மறுபடியும் கும்பாபிசேகம் பண்ணனும்னு ஒரு கூட்டம் கிளம்பியாச்சு.
கும்பாபிசேகம் அமர்க்களமாய் நடந்தாலும் காளியப்பன் அந்த பக்கம் போவதையே நிறுத்தி இருந்தான். யாகம் வளர்த்தறதும், நாதம் வாசிக்கறதும், சுத்தி சுத்தி அன்னதானம் நடத்தறதும் அடேயப்பா..கிட்டத்தட்ட பணம் தண்ணீராய் செலவாகறதை பார்த்துகிட்டும் கேள்விப்பட்டும் அமைதியாய் இருக்கவேண்டியிருந்தது காளியப்பனுக்கு.
எல்லாம் ஓய்ஞ்சு இரண்டு மாசாம் கழிஞ்ச பின்னால, மறுபடி பிள்ளையாரு தனிமையா, காலையில அரை மணி நேர பூஜை, சாயங்காலம் அரை மணி நேர பூஜை, அதுவும் அர்ச்சகருக்கு வேற வேலை இருந்தா அடைச்சுத்தான் கிடக்கும். கட்டிடம் வேற பிரமாண்டமா இருக்கறதால காளியப்பனுக்கு அவ்வளவு பெரிய இடத்துல பிள்ளையாரு தனியா இருக்காறேன்னும் கவலை வந்து அரிக்கும்
பிள்ளையாரு சாதாரணமா இருந்தவரைக்கும் எல்லாருக்குமாய் இருந்தாரு, இப்ப பெரிய சொத்துக்காரரு ஆயிட்டாரு, அவருக்கு வெள்ளிக்கவசம் என்ன? அவரு பக்கத்துல இருக்கற மத்த சாமிங்களுக்கும் வெள்ளிக்கவசம் என்ன? இருக்கறதுக்கு கட்டிடம் வேற பிரமாண்டமா.
வெத்து உடம்புல பட்டை பட்டையா திருநீறை பூசிட்டு மரத்து நிழல்ல ஹாயா உட்கார்ந்துட்டு சாதி மதம் பார்க்காம அவரை மரியாதையா பார்த்துட்டு போயிகிட்டு இருந்த தெரு மக்கள், ம்…எல்லாம் மாறித்தான் போச்சு, மனதுக்குள் வருத்தப்பட்டு கொண்டான் காளியப்பன்.
ஆனாலும் காளியப்பன் கும்பாபிசேகமும், மண்டல் பூஜைகளும் முடிந்து காலம் ஓடிய பின்னால், அவரை பார்க்க அந்த பிரமாண்ட கோயிலுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறான். அன்னைக்கு திண்டுல பார்த்த அதே பிள்ளையாரு அதே நிலையில உக்காந்துட்டு, எப்பவும் மாதிரி தனியா வெளியிலதான் இருக்கறாரு, ஆனா பெரிய கோயில் பிரகாரத்துல, புது கோயில் கட்டிடத்துக்கு பின்னாலதான் உக்காந்துகிட்டிருக்காரு, அவரையும் சுத்தி பெரிய மதில் சுவரு. எங்க அவரு வெளி உலக மக்களுக்கு போற போக்குல ஆசிர்வாதத்தை கொடுத்திட்டாருன்னா?
அவருக்கு ஒரே ஒரு வசதி இருக்கு. இன்னும் யாரு வேணா ஊத்தற தண்ணிய தலையில வாங்கிட்டு, அவங்க கையால அலங்காரம் பண்ணிக்கலாம். ஆனா என்ன? இவனை மாதிரி ஆளுங்க இனி ஊத்தறது சிரமம். பெரிய பெரிய பங்களாவாசிகளோட நண்டு சிண்டுகள்ள இருந்து அவங்க வீட்டு பொம்பளைங்க வரைக்கும் வரிசை கட்டி நிக்கறப்போ, இவனுக்கோ இவங்க ஆளுங்களுக்கோ…?
உள்ள இருக்கற பிள்ளையாரு அர்ச்சகரை எதிர்பார்த்து காத்துகிட்டுதான் இருக்காரு, ஏனா அவர் வந்துதான தலையில தண்ணி ஊத்தணும்.
இவன் அவரை மட்டும் போய் பார்க்கும் போது எப்படி இருக்கிறாய்? என்று அவனிடம் கேட்பது போல இவனுக்கு தோன்றி கொண்டேயிருக்கும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Aug-23, 10:23 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 77

மேலே