ஆழி ஆன அரக்கனைத் துகைத்தது, சோபனம் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)

ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்! 17

- மீட்சிப் படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருளுரை:

பேதமை என்னும் அணிகலன் உடையாளே! மிக்க மங்களம் உண்டாகட்டும்;
தரித்த அணிகலன்களை உடையாளே! வாழ்வாயாக;

மேன்மை மிக்கவனாகிய இராமபிரான் என்கிற முகபடாம் அணிந்த யானை தீமைக்கு வரம்பாகிய இராவண ராக்கதனை அழித்தொழித்தது; (இனி உனக்கு) மங்களம் உண்டாகட்டும்! .

சோபனம் என்பது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தும் சொல்; அது பன்முறை வந்து மங்கல வாழ்த்தாக ஆயிற்று!

எழுதியவர் : கம்பர் (20-Aug-23, 10:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே