கணினித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள்

முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையம், அலைபேசி ஆகியவை தகவல் தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருள்களைத் தமிழ்மொழிக்கென உருவாக்கியுள்ளன. கணினித்தமிழின் வளர்நிலைக்கு அடித்தளமாக விளங்குகின்ற மென்பொருள்கள் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்தல், தமிழ் இயக்க முறைமைகள், அதற்கான தட்டச்சு இயக்க முறைகள், விசைப்பலகைகள், எழுதிகள், எழுத்துரு மாற்றிகள் போன்ற பல்வேறு நிலைகளில் கணினியில் தமிழ்ப்பயன்பாட்டை வலுப்படுத்துவதாக அமைகின்றன. கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை வலுப்படுத்தும் பயன்பாட்டு மென்பெருள்களால் தமிழ் மொழி அடையும் வளர்ச்சியைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சி
கணினித்தமிழ் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் இணையத்தில் பயன்பாடு வந்த பின்புதான் மென்பொருள்களின் தேவையும் அதிகரித்தது, தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்தது.
“தமிழின் எதிர்கால வளர்ச்சிக்குக் கணினித்தமிழ் மென்பொருள்கள் எப்படியெல்லலாம் சாத்தியமாகக் கூடும் என்று சிந்தித்துப் பார்த்தால் தளம் விரிந்து கொண்டே செல்கிறது. இன்றைக்கு இணையத்தில் இருக்கக்கூடிய வலைதளங்களும், குழுமங்களும் தனிப்பக்கங்களுமே இதற்கு சாட்சியாக நிற்கின்றன. இணையக் குழுக்கள் ஆரோக்கியமான விவாதங்களைத் தமிழிலேயே மேற்கொள்வதற்கு இத்தமிழ் மென்பொருள்கள் பேருதவியாகச் செயல்படுகின்றன. காலத்தைத் தாண்டியிருப்பதே ஒருவகையில் தமிழ் வளர்ச்சி மென்பொருளின் பயன் என்று தான் சொல்ல வேண்டும்.”1
கணினித்தமிழின் வளர்ச்சியை, தமிழின் இலக்கிய வளர்ச்சி, தன்னிறைவை நோக்கிய வளர்ச்சி என்று இருவகையான கண்ணோட்டத்தில் பார்ப்பது இன்றியமையாதது. இலக்கிய வளர்ச்சிக்காக ஏராளமான இணைய தளங்களும் இணைய வார, மாத இதழ்களும், இணைய குழுக்களும் இருக்கின்றன. தமிழிலேயே படைப்புகளைத் தட்டச்சு செய்து கணினி மூலமாகவே நெடிப்பொழுதில் படைப்புகளை அனுப்பவும் இயலுவதால், படைப்பாளிக்கும் படிப்போருக்கும் பதிப்பாளருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்துவிட்டது.
இணையத்தில் பதியப்படும் பதிவுகளுக்கு விமர்சனங்கள் அதிகமாகிவிட்டன. படைப்புகளின் பயண தூரம் அதிகமாகிவிட்டது. ஒரு படைப்பு இணையத்தில் வெளியாகும்போது வெவேறு நாட்டைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் அடுத்த நொடியிலேயே கருத்துக்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது.
இணையத்தில் மட்டுமே இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இன்றைக்கு உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று வலைப்பூக்களை அமைத்துக்கொண்டு தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள். இணையத்தில் எழுத்தாளர்களை உருவாக்கவும், வசகர்கள் அதை வாசிக்கவும் தமிழ் மென்பொருள்கள் உதவுகின்றன.
தமிழ் மென்பொருள்களின் தேவை
இன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தகவல் களஞ்சியமாக இருப்பது இணையத்தமிழ் நாளிதழ்கள் ஆகும். இலட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாளிதழ்களை கணினியில் வாசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்குக் கணினித்தமிழ் ஒரு கொடையாகும். காலையில் வெளிநாட்டிற்குக் கிளம்பி, எங்கோ மொழி புரியாத விமாநிலையத்தில் அதிகாலையில் காத்திருக்கும் போது அவர்களால் தமிழ் செய்தித்தாளைப் படிக்க முடிகிறது. பறந்து கொண்டே இருக்கும் அவர்களுடைய ஒரு தோழனாகவே இணையத் தமிழ் இருக்கிறது.
பேஜ்மேக்கர் போன்ற மென்பொருட்களெல்லாம் ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன. தமிழ் மென்பொருள் வந்த பின்பு பேஜ்மேக்கர் தமிழ் நூல்கள் வடிவமைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இன்றைக்கு நகரம் சார்ந்த எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் கணினியைத்தான் பயன்படுத்துகிறார்கள். கணினித்தமிழ் பல வசதிகளை வஞ்சகமில்லாமல் செய்து தருகிறது. பிழைத் திருத்தவோ, படிகள் எடுக்கவோ தேவை இல்லை.
“இதழ்கள் நடத்த வசதியில்லாத ஆர்வமுள்ளவர்கள் குறைந்த செலவில் இணையப் பத்திரிக்கை ஆரம்பிக்க முடியும். இணையப் பத்திரிக்கையில் பிழையுடன் ஒரு தகவல் வெளியானால் அதன் திருத்தம் வெளியிட அடுத்த இதழ் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது இன்னொரு படைப்பைச் சேர்க்க விரும்பினால் எப்பேது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு தமிழ்நாட்டுப் பத்திரிக்கை ஒன்று நடத்தும் திடீர்க் கவிதைப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இணையத்தில் வாயிலாகக் கலந்து கொண்டு பரிசு பெற முடிகிறது என்றால் அதற்குத் தமிழ் இணையமும் காரணமாக முடியும்.”2 தமிழ் மென்பொருள்கள் வளர வளரத் தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. ஒருங்குறியீடு வந்தபின் அது மிகவும் எளிதாகிவிட்டது.
தமிழில் குறியீட்டு முறை (Tamil Coding Methods)
கணினியானது ஆங்கிலத்தில் இயங்கி வந்த காலத்தில் ஆங்கிலம் அறியாத தமிழர்களால் கணினியை இயக்க முடியவில்லை. தகவல்களை உள்ளீடு செய்வதும், அதன் முடிவுகளை வெளியீடு செய்து பெறுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த நிலையை மாற்றித் தமிழிலும் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு எழுத்துருக்கும் எண்கள் கணினிக்குள் இருக்கின்றன. இத்தகைய எண்களைத் திரையில் எழுத்தாகக் காண்பிப்பதுதான் எழுத்துரு (Font) ஆகும். “கணினி விசைப்பலகையில் உள்ள எல்லா விசைகளுக்குமான மதிப்புகளும் குறியேற்றம் வாயிலாகக் கணினிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. விசைப்பலகையின் வாயிலாகத் தட்டச்சு செய்யும் போது அந்த விசைக்கான மதிப்பு உள்ளீடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு எழுத்துருவில் அந்த எண்ணுக்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள எழுத்து அல்லது வரிவடிவம் வெளியீடாகத் திரையில் பெறப்படுகிறது.”3
பின்னர் வந்த ஆஸ்கியின் (Americal Standard Code for Information Interchange-ASCII) 8 பிட் குறியோற்றத்தில் 256 இடங்கள் கிடைத்தன. இதில் கூடுதலாக கிடைத்த 128 இடங்களில் தமிழ் எழுத்துக்களை இட்டு அதனை ஒருங்குறியீட்டுக் குறி என்ற குறியேற்றமாகப் பயன்படுத்தி வந்தனர். இது அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டு முறையாகும். தமிழ் உட்பட இந்தி மொழிகள் ஒவ்வொன்றையும் 129 இடங்களுக்குள் அடுக்கி அந்தந்த மொழிகளைக் கணினிக்குள் உள்ளிடும் வகையில் எழுத்துக்களை உருவாக்கினார்.
ஆஸ்கி, இஸ்கி, டிஸ்கி போன்ற குறியேற்றங்களைத் தட்டச்சு செய்ய எழுத்துருக்கள் உருவமைக்கப்பட்டன. தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்யும் முறையில், ஒலி பெயர்ப்பு முறையில் இருந்து வந்தது. இவ்வகையில் அமைந்த பாமினி, அமுதம், சுரபி போன்ற எழுத்துருக்கள் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்தன. இவ்வகையான எழுத்துருக்களைத் தட்டச்சு செய்யும் முறையில் குறியேற்றம் ஒன்றாகவே இருந்தது. இதனால் வெவ்வேறு தட்டச்சு முறைகளைக் கொண்டு ஒரே குறியேற்றத்ததில் ஒரே எழுத்துருவில் தட்டச்சு செய்ய முடிந்தது.
பின்னர் ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் விளைவாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் செய்யப்பெற்றது. இவ்வகையில் உருவாக்கப்பெற்ற. TAM, TAB ஆகிய இரண்டு தரப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு ஏற்று அவற்றை அரசுத் தரப்பாடாக வெளியிட்டது. கணினியின் முக்கிய அமைப்பு தளமான விண்டோஸில் தமிழைப் பயன்படுத்துவதை இருவகையாகப் பரித்தனர்.
1. டாம் (TAM – Tamilnadu Monolingual)
2. டாப் (TAB – Tamilnadu Bilingual)
ஒருங்குறியீடு
உலக அமைப்பாகிய ஒருங்குறி குழுமத்தின் முயற்சியால் 16 நுண்மி நீளமுள்ள பன்மொழிக் குறியீட்டு முறை தோன்றியது. “ஆஸ்கி எழுத்துரு முறை திட்டத்தில் விசை இடத்திற்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமு ஒவ்வொரு எழுத்துருக்களைப் புகுத்தி எழுத்துரு வடிவமைப்புமுறையிலும், எழுத்து வரிசை முறையிலும் சிக்கல்களை ஏற்படுத்தின. இதைத் தவிர்க்க உலக அளவில் உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவாக உருவாக்கப்பட்ட எழுத்துருவே யுனிக்கோட் ஆகும்.”4
தமிழ் எழுத்துருக்கள்
கணினியில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய எழுத்துருக்கள் பயன்படுகின்றன. எழுத்துருக்களைக் கணினியில் உள்ளீடு செய்தால் தான் எந்தவொரு மொழியையும் கணினியில் தட்டச்சு செய்ய இயலும். அனைத்து மொழியைச் சார்ந்த எழுத்துருக்களும் தயாரிக்கப்பட்டுக் கணினியில் தட்டச்சு செய்யப்படுகின்றன,
1980 – 1985 வரையிலான காலகட்டம் கணினியின் தமிழ் எழுத்துருவாக்கக் காலம் ஆகும். கணினி கொண்டு அச்சிடும் முறையில் தமிழில் பல அழகிய எழுத்துருக்கள் குறியீட்டு முறையில் உருவாக்கப்பட்டன. விண்டோஸ் இயக்க அமைப்பின் அடிப்படையிலான எழுத்துரு முறையில் தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்கி விட்டால், அவற்றைக் கொண்டு எந்தவித கூடுதல் பயிற்சியும் இன்றி தமிழில் அச்சிட முடியும்.
ஐ.வி.ஒய். சிஸ்டம்ஸ் என்ற டெல்லி நிறுவனம் தமிழ் எழுத்துருக்களை உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறனைச் (WYSWG – What Your See is What You Get) சிறப்புடன் செயல்படுத்த ஆப்பில் மாக்கின்டோஸ் கணினியில், ‘கலைஞர்’ தமிழ் வடிவத்தை வெளியிட்டது. இதுவே உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தொழில்நுட்பத்தில் தமிழில் வெளியிடப்பட்ட முதல எழுத்துருவாகும்.
தேவையின் அடிப்படையில் இன்று அணங்கு, தமிழ்லேசர், சரஸ்வதி, அமுதம், மயிலை, ட்ரு டமில், அணியிழை, கிருஷ்ணமூர்த்தி போன்ற எழுத்துருக்கள் பயன்படத்தப்பட்டுவருகின்றன.
தமிழ் விசைப்பலகைகள்
கணினியில் தமிழ் உருவான தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கணினி விசைப்பலகைகளை
1. உரோமன் எழுத்து விசைப்பலகை
2. தட்டச்சு வகை விசைப்பலகை
3. ஒலியியல் வகை விசைப்பலகை என்று மூன்று வகைப்படுத்தலாம்.
1.உரோமன் எழுத்து விசைப்பலகை
தமிழைக் கணினியில் பயன்படுத்த முயன்ற அனைவரும் முதலில் கையாண்ட உள்ளீட்டு முறை உரோமன் விசைப்பலகையாகும். தமிழுக்கு இணையான உரோமன் எழுத்துகள் எழுத்துப்பெயர்ப்பு முறையில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை முறையைக் கையாள்வதற்கு ஆங்கில அறிவும், நிறைந்த பயிற்சியும் தேவை. “இவ்வகை விசைப்பலகைகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘திருக்குறள்’ பகுப்பாய்விலும், கனடால் உள்ள திரு.கே.சீனிவாசன் தனது ‘ஆதவின்’ என்னும் சொல் தொகுப்பிலும், மலேசியாவில் உள்ள முத்தொழிலன் தனது முரசு சொல்தொகுப்பிலும் பயன்படுத்தியுள்ளனர்.”5
2. தட்டச்சு வகை விசைப்பலகைகள்
தட்டச்சு வகை விசைப்பலகைகள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சு பயிற்சி பெற்றவர்கள் எளிமையாக பயன்படுத்த முடியும். இதில் இரண்டு வகைகள் உள்ளன.
1. மரபு வகை
2. மயிலை மரபு வகை
3.ஒலியியல் வகை விசைப்பலகைகள்
மொழியின் அடிப்படையில் உயிர், மெய் எழுத்துகள் இணைவதால் உயிர்மெய் கூட்டெழுத்துகள் உருவாகின்றன. இந்த அடிப்படையில் தத்துவ அமைப்பில் வடிவமைக்கப்பட்டதே ஒலியியல் வகை விசைப்பலகையாகும். 1980இல் மத்திய அரசு நிறுவனம் சி-டாக் விடிவமைத்த ஒலியியல் விசைப்பலகை முறை அனைத்து இந்திய மொழிகளுக்கும் பயன்படும் பொது விசைப்பலகையாக இஸ்கி குறியீட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இவையில்லாமல் மேலும் சில விசைப்பலகை முறைகள் உருவாக்கப்பட்டன. அவை கணியன், அறந்தை, தமிழ் 99 ஆகியனவாகும்.
தமிழ்மொழி பயன்பாட்டிற்கு உதவும் மென்பொருள்கள் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில் மென்பொருள்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அத்தகைய தமிழ் மென்பொருள்களை ஏழு வகையாகக் வகைப்படுத்தலாம். அவை
1. தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்
2. எழுத்துரு குறியீட்டு மென்பொருள்கள்
3. பிழை திருத்தி மென்பொருள்கள்
4. சந்திப்பிழை திருத்தி மென்பொருள்கள்
5. ஒளியுறு எழுத்துக்குறி – உணர்வு மென்பொருள்கள்
6. உரையிலிருந்து பேச்சு – மாற்றி மென்பொருள்கள்
7. இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள்
தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்
கணினியில் தமிழ் மொழி வாயிலாக செய்திகளை, இலக்கியங்களை அல்லது படைப்புகளை நூலாக உருவாக்குவதற்கு மென்பொருள்கள் பயன்படுகின்றன. இதுவரை பலவகையான தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் மென்பொருள் கருவிகள், கம்பன் எழுத்தோலை, முரசு சொல்லினம், தமிழ் எழுத்தாணி, தமிழ் தட்டச்சுச்துணைவன், கதம்பம் மென்பொருள்கள், வானவில், மயிலை, இளங்கோ, அழகி, என்.எச்.எம் ரைட்டர், மென்தமிழ், முரசு அஞ்சல், விசைத்தமிழ் 2008, குறள் தமிழ் மென்பொருள்கள், கம்பன் தமிழ் மென்பொருள், இ-கலப்பை, ஒருங்குறி, மின்னல் சாஃப்வேர், கீமேன், ஸ்ரீ-லிப்பி, தமிழ்நாடு அரசு மென்பொருள், சக்தி ஆபீஸ், நளினம், சுரதா போன்ற தமிழ் மென்பொருள்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியுள்ளன. மேற்குறிப்பிட்டவற்றுள் சில மென்பொருள்கள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பயனார்களும் பயன்படுத்தக்கூடிய அளவில் வளர்ச்சி நிலையை எட்டியுள்ளன.
1985 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சார்ந்த கு.கல்யாண சுந்தரம் உருவமைத்த ‘மயிலை’ என்னும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் விசைப்பலகையில் ஆங்கில எழுத்தாகிய a-வை தட்டினால் ‘அ’ என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைப்போன்று ta-த, tho-தொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன. மேலும் இவருடன் முத்தெழிலனும் இணைந்து மயிலை, இணைமதி, தமிழ் ஃபிக்ஸ் போன்ற எழுத்துருவையும் உருவாக்கிச் செயல்படுத்தினார்.
பிழைத்திருத்தி மென்பொருள்கள்
பிழைத்திருத்தி மென்பொருள் என்பது தமிழ் மொழியில் தட்டச்சு செய்யும் பொழுது ஏற்படும் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் ஆகியவற்றைத் திருத்தக்கூடியது ஆகும். தட்டச்சு மென்பொருள்களில் இவ்வசதிகள் அமைய வாய்ப்பில்லை தட்டச்சு மென்பொருளில் வளர்ச்சி நிலையிலிருந்து சொற்செயலி என்ற மென்பொருள் வடிவமைக்கப்பட்டது.
சொற்செயலி மென்பொருள் தட்டச்சு மென்பொருளில் ஒரு தனிவடிவம் பெற்று உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கவிகள் நிறுவனம் ‘பதமி 2000’ என்றும் ஆப்பிள் சாஃட் நிறுவனம் ‘சுரபி 2000’ என்றும் காட்கிராஃப்ட் டிஜிட்டல் நிறுவனம் இளங்கோ ‘தமிழ் 2000’ என்றும் சாஃப்ட்வில் நிறுவனம் ‘அமுதம் 2000’ என்றும் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து ‘பொன்மொழி’, ‘கலைஞர் 99’ சக்தி ‘ஆபீஸ் 2005’ போன்ற மென்பொருள்களும், பனேசியா நிறுவனம் 2006ஆம் ஆண்டு சொற்செயலிகளையும் உருவாக்கின.
கணினித்தமிழ் மென்பொருள் நிறுவனம் மூலம் கபிலன் 2007 காலகட்டத்தில் வரியுருமா என்ற பெயரில் ‘மாற்றா’, ‘பார்க்கா’, கடிதா’, ‘வடிவா’, ‘ஒருவா’ போன்ற பெயர்களில் தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வழங்கியிருந்தார். Learfun Systems நிறுவனத்தின் மூலம் வெ.கிருஷ்ணமூர்த்தி மென்பொருள்களை உருவாக்கி வழங்கியிருந்தார்.
“கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்கு உதவும் மென்பொருள் தமிழ் சொற்பிழை திருத்தி என்பதாகும். தட்டச்சு செய்யும் போது ஒரு சொல்லை அடித்தவுடன் அவற்றில் ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுவதும் அவற்றிற்குச் சரியான பரிந்துரைகளைக் கொடுப்பதும் சொற்பிழை திருத்தியின் பணியாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் போது தவறு என்று சொல்லாது. எப்பொழுது இடைவெளி இடுகிறோமோ அப்பொழுது உடனே அதுவரை தட்டச்சு செய்த எழுத்துக்களை மொத்தமாகச் சேர்ந்து அந்த சொல் அகராதியில் இருக்கின்றன என்று சோதித்துப் பார்க்கும். சரியான இருந்தால் விட்டுவிடும். அகராதியில் இல்லாத சொல்லாக இருப்பின் அதேபோன்று ஒரு சில எழுத்துக்கள் மாறியும் சில எழுத்துக்கள் இடம் மாறியும் இருக்கின்ற சொற்களைப் பரிந்துரைகளாகக் கொடுக்கும்.”6
உரையிலிருந்து பேச்சு மாற்றி மென்பொருள்கள்
தட்டச்சு செய்யப்பட்ட செய்தியைப் படிக்கும் மென்பொருளுக்கு உரையிலிருந்து ‘உரைமாற்றி மென்பொருள்’ என்று பெயர். மாற்றுத்திறனாளிகள் என்று கருதப்படும் பார்வையற்றோர் கணினியைப் பயன்டுத்துவதற்கு இதுவே வழியாக அமைகின்றது. தமிழுக்காக இத்தகைய எழுத்து – பேச்சு மாற்றி மென்பொருள்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. ஆங்கில மொழியைப் படிப்பதற்காக NVDA e-speak உருவாக்கப்பட்ட மென்பொருள் தமிழ்மொழியை ஆங்கிலத்தைப் போன்றே படிக்ககின்றது. இவற்றில் இந்த மென்பொருள் ஒருங்குறியில் அமைந்த தமிழை ஏற்ற இறக்கங்களுடன் நல்லதொரு உச்சரிப்புடன் தொடக்க நிலையில் பயன்படுத்துவதற்கு ஏற்பப் படிக்கிறது. கண்பார்வை குறைபாடுடையவர்களுக்கும் பிறருக்கும் தொடக்க நிலையில் நல்லதொரு பயனுள்ள மென்பொருளாக இது திகழ்கின்றது.
இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள்
இயந்திர மொழிபெயர்ப்பு என்பது ஒருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கணினியின் மூலம் மொழிபெயர்ப்பு செய்வதாகும். இதற்கு கணினி மென்பொருள்கள் உதவுகின்றன.
“ஒரு மொழியின் குறியீடுகளைக் கணினியின் செயல்முறைக்கு ஏற்ற வடிவத்தில் மாற்ற அவற்றை ஒரு கணினியின் செயல்முறைக்கு உட்படுத்தி அவற்றில் பெறுமொழி நிகரன்கள் பெறுவதே கணினி மொழிபெயர்ப்பு என்பர்”7
ஒரு செய்தியை ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்க்கும் மென்பொருளுக்கு இயந்திர மொழிபெயர்ப்பு என்று பெயர். பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்யும் வகையில் இரண்டு மொழிகளை மட்டுமாவது கையாளும் மென்பொருள்கூட இன்னும் வெளிவரவில்லை.
Google Translater என்ற இணையவழி மொழிபெயர்ப்பு மென்பொருள் தொடக்க நிலையில் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இது தமிழ்த் தொடரியல் இலக்கண முறையில் செயல்படுமாறு உருவாக்கப்படவில்லை. சொல்லுக்கு ஏற்ப அதன் விகுதிகளைப் பெற்றுள்ளது. உலக மொழிகளுள் 80 மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றென்றுக்கு மாற்றும் வகையில் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை நிலையில் இதனைப் பயன்படுத்தலாமே தவிர முழுமையாகச் சரியாக மொழிபெயர்ப்புக்கு இதனைப் பயன்படுத்த முடியாது.
“மூலமொழியில் பிரதியானது எவ்வாறு வெளியாகியுள்ளதோ, அதைப்போலவே பெறுமொழியிலும் வடிவத்திற்கு முக்கியத்துவம் தந்து சொல்லுதலுக்கு மொழிபெயர்ப்பானது பெரும்பாலும் கருத்து ரீதியில் தோல்வியடைய வாய்ப்புண்டு.”8
தமிழ் இயக்க முறைமைகள் மென்பொருள்கள்
கணினியின் முக்கியத்துவத்தை முதன்முதலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமே உணர்ந்தது எனக் கூறலாம். உலகம் முழுவதும் 90 % அதிகமான கணினிகளில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமையே செயல்படுகிறது. இந்நிறுவனம் தனது விண்டோஸ் இயக்க முறைமையில் தமிழ், இந்தி இன்றும் பிற மொழிகளையும் இடம்பெறச் செய்தது கணினியில் ஆவணங்களைத் தமிழில் உருவாக்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது.
“கோப்புகளின் பெயர்கள் மற்றும் கணினியில் அனைத்துவகைத் தகவல்களையும் தமிழிலேயே கையாள முடியும். மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களையும் மிக இயல்பாகத் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள இடமளித்தது. இதனைத் தொடர்ந்து விண்டோஸில் மைக்ரோசாஃப்ட் ஆபிசில் தமிழ் மட்டுமே அறிந்த பயனாளர் பயன்படுத்த முடியும் என்பது கணினித்தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும். அடுத்து வந்த விண்டோஸ் எக்ஸ்பியில் பதினொரு இந்திய மொழிகள் இடம்பெற்றன. விண்டோஸைத் தொடர்ந்து லினக்ஸிலும் தமிழ் இடம்பெறத் தொடங்கியது. பல்வேறு லினக்ஸ் பதிப்புகளில் தமிழ் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. கணினித்தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.”9
இதன் மூலம் இயக்க முறைமைகளில் தமிழ் மொழி இடம்பெற்றிருப்பதை அறிய முடிகிறது. இன்று பிறமொழிகளைப் பேலவே தமிழ் மொழியில் மென்பொருள்கள் உருவாக்க முடியும். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பிழையின்றி கணினியில் எழுத முடியும். அதற்கான பிழை திருத்தங்களும், மொழிபெயர்ப்புகளும், அகராதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மற்றும் இங்கிருந்து அயல்நாட்டில் இருக்கும் தமிழ்வாழ் அயல்நாட்டவருக்குத் தமிழ் மொழியினைக் கணினியின் வாயிலாக கற்றுக் கொடுக்க முடியும். ஆகவே இயக்கமுறை மென்பொருள்களின் வாயிலாக தத்தம் மொழியைக் கொண்டு கணினியில் வேண்டிய தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும் என்ற நிலை இன்று எட்டப்பட்டுள்ளது.
தமிழில் வெளிவந்துள்ள பயன்பாட்டு மென்பொருள்கள்
 சென்னையில் உள்ள வள்ளி மென்பொருள் நிறுவனத்தினர் 2000ஆம் ஆண்டு ‘கதம்பம்’ என்னும் தமிழ் பயன்பாட்டு மென்பொருளை வெளியிட்டனர்.
 சென்னையில் உள்ள பனேசியா என்ற மென்பொருள் நிறுவனம் இதுவரை பதினொன்று இலவச தமிழ் மென்பொருள்களை ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழுடன் வெளியிட்டது.
 பெங்களூரைச் சேர்ந்த ‘சாஃப்ட்வேர் ரிசர்ச் குரூப்’ என்ற நிறுவனம் ‘டாஸ்’ இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ‘பாரதி தமிழ் சொற்செயலி’யை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த முதல் தமிழ் சொற்செயலி இதுவாகும்.
 சென்னையிலுள்ள ‘சாஃப்ட்வீயூ’ நிறுவனம் ‘அமுதம்’ என்ற மென்பொருளை தயாரித்து வெளியிட்டது. தமிழ்நாடு அரசால் தரப்பட்டுள்ள தமிழ் 99 விசைப்பலகை அச்சுமுறையை இம்மென்பொருள் கொண்டுள்ளது.
 இயக்க முறைமையின் ஆணைகள், பட்டியல்கள் ஆகியன தமிழில் தெரியும் பொருட்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் ‘இதம் 2000’ என்பதாகும்.
 2005ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் மொழி வளர்ச்சித்துறையும், தமிழ்நாடு அரசும் இணைந்து ‘தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டனர். இதில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் மென்பொருள்களும், 250 தமிழ் எழுத்துருக்களும், விசைப்பலகை இயக்கிகளும் அடங்கியுள்ளன.
 மும்பை சி.கே. டேக்னாலஜி நிறுவனத்தால் நவம்பர் 2010ஆம் ஆண்டு ‘சக்தி ஆபீஸ்’ என்னும் மென்பொருள் வெளியிடப்பட்டது. மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ளதைப்போன்று அனைத்தும் ஆனால் தமிழில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும்.
 இவற்றைப்போன்று ‘எழுத்தாணி’, ‘தமிழ் தட்டச்சுத் துணைவன்’ போன்ற மென்பொருள்களும் வெளிவந்து இன்றளவும் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.


முடிவுரை
கணினித்தமிழின் வளர்நிலைக்கு அடித்தளமாக அமைகின்ற மென்பொருள்கள் கணினியில் தமிழ் உள்ளீடு, இயக்க முறைகளில் தமிழ் இடம், தமிழ்த் தட்டச்சுமுறைகள், குறியீட்டுமுறைகள், எழுதிகள் மற்றும் எழுத்துருமாற்றிகளின் பயன்பாடு, மொழிபெயர்ப்பு ஆகிய கணினிசார் பயன்பாட்டிற்கு துணைசெய்வதாக அமைந்துள்ளன. கணினியில் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள் ஏழு நிலைகளில் அமைந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது. தமிழ் எழுத்துக்களைக் கணினியில் பொருத்துதல், இயக்க முறைகளைக் கணினியில் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வனவாகப் பயன்பாட்டு மென்பொருள்கள் அமைந்துள்ளன. தமிழ் அறிந்தவர்கள் மட்டும் இன்றி அறியாதவர்கள் கூட தமிழ்ச்சொற்செயலிகளைப் பயன்படுத்தும் வகையில் இதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. இது அறிவியல் தமிழில் கணினித்தமிழ் வளர்ச்சிநிலையினை எட்டியுள்ள நிலையினை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

எழுதியவர் : முனைவர் த.சங்கரன் (20-Sep-23, 10:44 pm)
சேர்த்தது : முனைவர் த,சங்கரன்
பார்வை : 139

புதிய படைப்புகள்

மேலே