கட்டுகள்
கட்டுகள்
*********
கட்டுகிறக் கட்டெலாம் கட்டன்று மஞ்சலிட்டுக்
கட்டுமொரு கட்டொன்றே கட்டு
*
இக்கட்டுக் கென்றே இடுங்கட்டு கால்கட்டு
அக்கட்'டில் வாழ்க்கை' அறம்
*
கட்டுமொரு கட்டுதனில் கட்டுண்டு விட்டார்க்கு
கட்டுதற் காயிரம் கட்டு
*
கூடுகட்டிச் சின்னக் குருவி இணைதல்போல்
வீடுகட்டிக் கொண்டில்வாழ் வீறு
*
ஒருகட்டுக் கட்டி உயர்வாதல் நன்று
இருகட்டென் றென்றும் இடர்
*
கடன்பட்டுக் கல்யாணங் கட்டுவ தென்று
உடன்பட்டுக் கொள்ளல் உதறு
*
கட்டுக்கட் டாய்தினம் கட்டிவைத் தாருயிர்
கட்டிவைக் காதிந்தக் காசு
*
கட்டுப் பணங்கட்டி கட்சிக் கொடிகட்டும்
திட்டம் வகுத்தார்க்கே தெம்பு
*
கதிரறுத்துக் கட்டும் கவின்மிகுக் கட்டில்
முதிரின்பம் கொட்டும் முரசு
*
கட்டத் துணியின்றி கந்தல் அணிவாரும்
பட்டுத் துணிநெய்வார் பார்
*
மெய்யன் நடராஜ்