வள்ளுவம் வாழ்வதெங் கே - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பாக்கள்
பொய்யுடனே பித்தலாட்டம் பொங்கும் லஞ்சமொடு
மெய்யின்றி ஆட்சிசெய்ய மேல்விரும்பிச் – செய்கின்ற
எள்ளளவும் உண்மையற்ற தேர்தல் பிரசாரம்..
வள்ளுவம் வாழ்வதெங் கே? 1
கூடா ஒழுக்கம், புலால்மறுத்தல், கொல்லாமை
கோடிமுறை சொன்னாலும் கூத்தனே – ஏடாநீ..
எள்ளுவர் என்றெண்ணா(து) அவ்வளவும் செய்கின்றாய்!
வள்ளுவம் வாழ்வதெங் கே? 2
அறிவுடைமை, சிற்றினம் சேராமை என்றே
நிறையுடை மாந்தரை பற்றி – அறன்சொல்லி
கிள்ளையெனச் சொன்னாலும் கள்குடி செய்தாலே
வள்ளுவம் வாழ்வதெங் கே? 3
தொலைக்காட்சி, வெள்ளித் திரைக்காட்சி ஆடை
அலங்காரம், குத்தாட்டம் கூத்து – இலைமறை
பள்ளியறைக் காட்சிகளும் தூ!தூ! அசிங்கமெனில்
வள்ளுவம் வாழ்வதெங் கே? 4