புதுமை முழநட்பிற் சாணுட்கு நன்று - பழமொழி நானூறு 386

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு, ‘ந்’ எதுகை)

தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா தொழுகித்தாம்
ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்
பழைமைகந் தாகப் பரியார் புதுமை
முழநட்பிற் சாணுட்கு நன்று. 386

- பழமொழி நானூறு

பொருளுரை:

இவரிடத்து வேற்றுமையின்றிப் பூண்ட நட்பினை உடையோம் என்று கருதி ஆராயாது தீயனவற்றைச் செய்து தம்மிடத்து இயல்பாக இருந்த சிறிய அன்பும் இல்லாதவர்களாகி ஒழுகுபவர்களது பழைமையையே பற்றுக் கோடாகக் கொண்டு புதிய நட்பினை நீக்கார் அறிவுடையோர்;

தீயன செய்யும் நட்பு முழம் இருத்தலை விட அஞ்சத்தகும் நட்பு சாண் இருத்தலே நல்லது.

கருத்து:

தீயன செய்யும் பழைய நட்பைவிட அஞ்சத்தகும் புதியநட்பே நல்லது.

விளக்கம்:

'ஊர்ந்த பரிவு' என்பது மிகக் குறைந்த அன்பு என்பதை விளக்கிற்று. அதுவும் அவர் செயலன்று; அன்பின் செயல் என்பார் ஊர்தலை அன்பின் செயலாகக் கூறினார். புதிய நட்பினர் தீயன செய்வாரோ வென்ற அச்சம் இருத்தலால் முன்னரே அறிந்து காக்கப்படும். பழைய நட்பினரிடத்தில் அத்தகைய ஐயமின்மையால் காக்கப்படாதாயிற்று.

ஆகவே பழைய நட்பினர் செய்யும் தீமை அறிந்து காக்கப்படாமை யானும், புதிய நட்பினர் தீமையறிந்து காக்கப்படுதலினாலும், புதிய நட்பே 'நன்று' என்று கூறப்பட்டது. முழம், சாண் என்பன காலத்தின் தூரத்தை உணர்த்துவன, பழைமை, புதுமை என்பனவற்றை உணர்த்தின. தீர்ந்தேம் - தாம் வேறு, அவர் வேறு என்ற வேற்றுமையினின்றும் நீங்கினேம்.

'முழ நட்பிற் சாணுட்கு நன்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-23, 9:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே