மன்று அஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல் - பழமொழி நானூறு 388

நேரிசை வெண்பா

செய்த கொடுமை யுடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம் யாதொன்றும் இல். 388

- பழமொழி நானூறு

பொருளுரை:

நீதிமான்கள் பலரும் திரண்டு இருந்த அவையினைக் கண்டு அஞ்சி உண்மையைக் கூறுகின்றவர்களுக்குச் செய்கின்றது யாதொன்றுமில்லை யாதலால், செய்த தீமையை உடையவன், பிறர் கேட்டவிடத்துக் கூறினால் வரும் அச்சம் தன்னை வந்தடைய அத்துன்பத்தால் கூறுவானல்லன்.

கருத்து:

கீழ்மக்கள் உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சி நியாய சபையிலன்றி உண்மையைக் கூற மாட்டார்கள்.

விளக்கம்:

தனித்துக் கூறின் தண்டஞ் செய்வாராதலான் மன்றிலன்றிக் கூறுதலிலர்.
மரித்தல் - ஒன்றுசேர்தல். சாதி - கூட்டம்; ஒன்று சேர்ந்து குழுமியிருந்த நீதிமான்கள்.

'மன்று அஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-23, 5:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே