பாரித் தவனை நலிந்து தொழில் கோடல் மூரி உழுது விடல் - பழமொழி நானூறு 389
நேரிசை வெண்பா
மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!
பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்
மூரி உழுது விடல். 389
- பழமொழி நானூறு
பொருளுரை:
கொடிபோன்ற இடையை உடையாய்! சோம்பலுடையானை ஒருசெயலைச் செய்ய ஏவின், அவனைச் செய்ய ஏவிய அச்செயல் முடியாத விதமாக முயற்சி செய்வான் சோம்பலுடையான்! சோம்பலாற் பெருத்தவனைத் துன்புறுத்திக் காரியத்தைக் கொள்ளுதல் கிழ எருதினைக் கொண்டு நிலத்தை உழுது பயன்கோடல் ஒக்கும்.
கருத்து:
சோம்பலுடையானைக் கொண்டு ஒரு காரியம் செய்வித்தலாகாது; நலிந்து செய்விப்பினும் அதனால் பயன் உண்டாகாது.
விளக்கம்:
'முடியாதவாறே முயலும்' என்றது அச்செயலுக்கு மாறுபட்டு வேறொன்றைச் செய்வானல்லன்; அங்ஙனஞ் செய்யினும் ஒருவகையில் முயற்சி உடையான் என்றே கூறலாம்.
அங்ஙனஞ் செய்யாது தன்னால் அத்தொழில் முடியாதவாறு மேலும் மேலும் சோம்பலைத் தேடிக்கொள்ளுதலில் முயற்சி செய்வான் என்பதைக் கருதி, கிழவெருதினைக் கொண்டு உழுவான் தக்க காலத்தில் உழமுடியாமையால் விளையுளை இழத்தல்போல, சோம்பலில் மிக்காரை வருத்தியாவது காரியம் செய்விப்போமாயினும், காரியம் தாம் விரும்பிய காலத்தில் முடிவுறாமையால் பயன்பெறுதல் இல்லையாம்.
'மூரி உழுதுவிடல்' என்பது பழமொழி.