செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர் – நாலடியார் 394

நேரிசை வெண்பா

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து 394

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால் நிறைத்த நீரைத் தனது மெல்லிய விரலால் முறையே எடுத்தெறிந்து கொண்டு அழுது, தன் கையே தலையணையாகப் படுக்கையின் மேல் ஒருக்கணித்துக் கிடந்து மெலிந்துபோன தன் விரல்களினால், பிரிந்த நாளைக் கணக்கிட்டுக் காலத்தில் இல்லஞ் சேராத நமது குற்றத்தை நினைத்து இந்நேரம் நம் துணைவி வருந்துமோ?

கருத்து:

பிரிவு அருளிரக்கத்தை உண்டாக்கும்.

விளக்கம்:

செல்சுடர் அன்மொழித் தொகையாய் மாலைப் போதாயிற்று,

கண்ணிறை நீர், இடையிட்டுத் துளி கொள்ளலால், ‘ஊழ் தெறியா' என்றார்.

‘சுடர் நோக்கிக் கிடந்து தெரியா விம்மி நாள்வைத்து எண்ணுங் கொல்' என்று கொள்க; இது வினை முற்றி மீளுந் தலைமகன் இரங்கித் தன்னுள் கூறியது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-23, 7:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே