கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் - நாலடியார் 395
நேரிசை வெண்பா
(‘ண்’ ‘ன்’ மெல்லின எதுகை) (’க்’ ‘ட்’ வல்லின எதுகை)
கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்ற(து) அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக்(கு) அறிந்து 395
- காமநுதலியல், நாலடியார்
பொருளுரை:
கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு ஆ! நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை;
ஆனால், அவ்வாறு பின்சென்றும் குத்துதற்கு முனைந்தும் அவளது ஒள்ளிய புருவம் வளைந்த வில்லின் வளைவென்று அறிந்து குத்தாதாயிற்று.
கருத்து:
நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும்.
விளக்கம்:
தலைவியின் விழியால் அழிவுற்று மயங்கினனாதலின் இங்ஙனம் விழி நினைந்து நலம் பாராட்டினான். ஊக்கியெழுதல்: ஒரு சொல். எறிகலா வென்பது செய்யுளின்ப நோக்கி ஒற்று மிக்கது; இது, தலைமகன் தன் தலைவியின் நலத்தைப் பாங்கற்கு வியந்து கூறியது!