நான் அவனில்லை

நான் அவனில்லை

தன் மனைவியை கொன்றவர் இவர்தான் என்று நிருபிக்கபட்டுள்ளதால் இவருக்கு “பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை” விதிக்கப்படுகிறது. தீர்ப்பு வாசிக்கப்பட்டு நீதிபதி எழுந்து சென்ற பின்பும் திக் பிரமையுடன் நின்று கொண்டிருன்ந்த என்னை தள்ளிக்கொண்டு சென்றார்கள் போலீசார்.
நான் என்னையே நொந்து கொண்டு நடப்பதை நம்பாமல் போலீசாருடன் நடந்து கொண்டிருன்க்கிறேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் புரியாமல் சிறையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன்.
கொலை முயற்சி என்று இந்த “பத்து வருட சிறைக்கு” பயந்துதானே அத்தனை தூரம் சிரமப்பட்டு தப்பித்து சென்றேன், ஆனால் விதி என்னை விடாமல் துரத்தி அதே தண்டனையை புதியதாக அறிவித்து மீண்டும் என்னை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்னால்…! நடு இரவை கடந்த அந்த இருளில் தலை தெறிக்க ஓடி கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதஙகள் பாடுபட்டு சிறையை விட்டு தப்பிக்க வழி முறையை ஏற்படுத்தி தப்பித்திருக்கிறேன்.
இன்னும் சற்று நேரத்தில் என்னை கண்டு பிடித்து விடுவார்கள். இரவு “பீட் வரும்” போலீஸ்காரர் என் அறையில் நான் இல்லாததை கண்டு பிடித்திருப்பார். அதன் பின் அந்த சிறைச்சாலை பரபரப்பாயிருக்கும். அவர்கள் நான் எப்படி தப்பித்திருப்பேன் என்று கண்டு பிடித்து என்னை விரட்டி பிடிக்க முயற்சி நடப்பதற்குள் நான் கண் காணாத தூரம் சென்றிருக்கவேண்டும். மனதுக்குள் வந்த வைராக்கியம் என்னை இன்னும் வேகமாக அந்த சாலையில் ஓட செய்தது.
முதலில் இந்த உடைகளை மாற்ற வேண்டும், அதன் பின்னால் இந்த மனித உலகில் கலந்து மறைந்து போய் விடவேண்டும், அதற்கு வழி என்ன? அதுவரை இப்படி யார் கண்ணிலும் படாமல் ஓடி கொண்டிருக்க வேண்டுமா?
மனதுக்குள் முளைத்து விட்ட இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் ஓடி கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக இது வரை அந்த பாதையில் எந்த வாகனங்களும் என்னை கடக்க வில்லை, எதிரிலும் வரவில்லை. எத்தனை தூரம்தான் இந்த நெடுஞ்சாலையின் ஓரமாய் ஓடிக்கொண்டிருப்பது?
இனி சற்று தூரத்தில் நகரம் வந்து விடும், ஸாலை ஓரமாய் அமைந்திருக்கும் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கும் ஜீவன் என்னை இந்த உடையில் ஓடி கொண்டிருப்பதை பார்த்தால் கண்டிப்பாய் காவல் துறைக்கு தகவல் போய் விடும்.
தீடீரென்று என்னை தாண்டி விளக்கின் வெளிச்சம் பரவ நான் உஷாராகி சட்டென மறைவிடம் ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். என் அதிர்ஷ்டம் பருத்த பெரிய மரம் ஒன்று சாலையோரமாய் நின்றிருந்தது. சட்டென மரத்தின் பின்புறம் சென்றவன் அப்படியே மூச்சு காட்டாமல் மரத்தின் பின்புறம் படுத்து கொண்டேன்.
காரின் முந் வெளிச்சம் அங்கும் இங்கும் அலை பாய்ந்து வருவது போல எனக்கு தோன்றியது. பிரேக் பிடிக்கும் க்ரீச்…க்ரீச்…சத்தம் அந்த இருளின் அமைதியில் நாரசாரமாய் கேட்டது.
யாரவன் எத்ற்கு இப்படி பைத்தியம் போல் வண்டியோட்டி வருகிறான்? நான் எண்ணி முடிப்பதற்குள் “டமார்” எனும் சத்தம் அவ்வளவுதான். மறுபடி அமைதி..!
என்ன நடந்தது? மரத்தின் பின்புறம் மறைந்து படுத்திருந்தவன் மெல்ல எழுந்து வெளியே எட்டி பார்க்க.. அட…நான் மறைந்திருந்த மரத்தில் தான் காரின் வெளிச்சம் நிலை பெற்றிருந்தது.
மரத்தை விட்டு வெளியே வந்து பார்த்தவன் அதிர்ந்து போனேன். காரின் முன் பாதி அளவு சேதமடைந்திருந்தது.
வலியில் அனத்தும் சத்தம், சட்டென முன்புறம் பார்க்க” ஸ்டேரிங்கை” பிடித்த நிலையில் ஒருவன் வலியில் அனத்திக்கொண்டு இருந்தான்.
மெல்ல “ஸ்டேரிங்கை” அவனிடமிருந்து விடுவித்து காரின் கதவை சிரமபட்டு திறந்தேன். பாதி அளவுக்கு மேல் திறக்க முடியவில்லை, அப்படியே அடிபட்டவனை கீழ்புறமாக சரித்து கிடைத்த பாதி அளவின் இடைவெளியில் அவனது உடலை மெல்ல வெளியே இழுத்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக உடலை சிரமபட்டு மெல்ல வெளியே இழுத்து வந்தேன்.
வலியில் முணங்கினான், என் பேர் சிவராமன், நான்..நான்.. சொல்ல சொல்ல….. அப்படியே நினைவிழந்து போனான். அவனது மூக்கில் விரல் வைத்து பார்த்தேன். மூச்சு நின்று போயிருந்தது.
என்ன செய்வது? இரண்டு நிமிடம் யோசித்தவனுக்கு சட்டென பிரகாசமானது. அவன் படுத்திருந்த நிலையில் கவனித்தேன். என் உயரம் அளவு இருந்தான். முகம் ஏறக்குறைய என்னை போலத்தான் இருந்தது.
அடுத்த நிமிடம் மள மளவென அவனது உடைகளை கழட்ட ஆரம்பித்தேன். இறந்தவனுக்கு என்னுடைய உடைகளை போட்டு அவனது உடைகளை நான் மாற்றிக்கொண்டேன். அப்படியே அவனை இழுத்துக் கொண்டே உள் புற காட்டு வழியாக சிறிது தூரம் இழுத்து சென்றேன்.
சற்று தூரம் காட்டு வழியாக இழுத்து சென்றவன் அதன் பின்னால் இருந்த பெரும் கடலை கண்டதும் உடனே யோசனை வேறு விதமாக வந்தது. உடலை கடலை நோக்கி இழுத்து சென்றவன் கரையை நோக்கி வரும் அலைகளை எதிர்த்து சிறிது தூரம் கடலுக்குள் கொண்டு சென்றேன்.
பெரும் அலை ஒன்று வர அவனது உடலை அப்படியே விட்டு விட்டு கரைக்கு ஓடி வந்தேன். அங்கிருந்தே பார்க்க நான் போட்டு வந்த உடல் அப்படியே கடலலைகள் உள்ளிழுத்து சென்றது.
திரும்பி ஓடி வந்தவன் காரின் அருகில் சென்று காருக்குள்ளே எல்லா இடத்தையும் சோதித்தேன்.
சிவராமன், “சிவா காஸ்டிங்ஸ்” முகவரி தெளிவாக அச்சடிக்கப்பட்ட விசிட்டிங் கார்டு கிடைத்தது. அப்படியானால் இந்த கம்பெனியின் முதலாளியாக இவன் இருக்க வேண்டும்.
“சர்ரென்று” ஒரு வெளிச்சம் என் அருகில் வந்து நின்றது. என்ன சார் ஆச்சு? இருவர் இறங்கி ஓடி வந்தனர்.
என் உடையில் இரத்த கறைகள் அவனை இழுத்து சென்றதால் ஏற்பட்டிருந்ததது. சார் உங்களுக்கு ஒண்ணுமில்லையே..?
யாரை கேட்கிறார்கள் ஒரு நிமிடம் திகைத்தவன் “ என்னைத்தான் நான் இப்பொழுது சிவராமன் அல்லவா.
இல்லை சார், எனக்கு கொஞ்சம் கொஞ்சம் சிராய்ப்புத்தான்.
நல்ல வேளை சார் தப்பிச்சிட்டீங்க, வாங்க உங்களை பக்கத்துல ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்துடறேன்.
“பரவாயில்லை” என்று சொல்ல வந்தவன் “வேண்டாம் நாம் போய் தற்போது அவனாக நடித்து மருத்துவமனையில் படுத்து கொள்ளலாம், முடிவு செய்தவன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். அவர்கள் உதவியால் மருத்துவமனையில் என் “விசிட்டிங் கார்டை” கொடுத்து “அட்மிட்” ஆனவன் என்னை கூட்டி வந்தவர்களுக்கு நன்றி சொல்லி என் “விசிட்டிங் கார்டை” காண்பித்து இந்த கம்பெனிக்கு போன் செய்து விவரங்களை தெரிவித்து நான் இங்கு “அட்மிட்” ஆகி விட்டதாக சொல்லி விடுங்கள்.
அவர்கள் சென்ற பின்பு சிறிய அளவு ‘காயங்கள்தான்’ என்று சொன்னாலும் என்னை கண்டு பிடித்து விடுவார்களோ என்னும் எனது பயத்தால் என் பி.பி., எகிறி இருந்ததால் இந்த “விபத்தின் அதிர்ச்சி” என்று சொன்ன மருத்துவர்கள் இரண்டு நாள் இங்கேயே “பெட்ரெஸ்ட்” எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.
அப்பாடி..எப்படியோ தற்போதைய சூழ்நிலையில் நான் பாதுகாப்பாய் இருக்க அமைதியான ஒரு இடம் கிடைத்து விட்டது, இந்த நிம்மதியில் கண்ணை மூடி அயர்ந்து உறங்கினேன்.
எல்லாம் அன்று ஒரு நாள் மட்டும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. மறு நாள் காலையில் ஒரு போலீஸ் அதிகாரியும், உடன் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் என் அருகில் வந்து நின்றனர்.
உங்க பேருதான் சிவராமனா?
மனதுக்குள் பெரும் பயம் என்னும் பிரளயம் நடந்து கொண்டிருக்க, அதை வெளிகாட்டாமல் தலையை மட்டும் அசைத்தேன்.
ஒரு கடிதத்தை எடுத்து காண்பித்தார். அதில் என்னை “கைது” செய்வதாக “வாரண்ட் இருந்தது”.
மனம் “திடுக்” என்று கூச்சலிட அவர் முகத்தை பார்த்தேன்.
உங்க மனைவியை கொலை பண்ணிட்டு தப்பிச்சு போக முயற்சி பண்ணிருக்கீங்க, ஆனா நல்ல வேளையா “ஆக்சிடெண்ட்” ஆனதால் “ஹாஸ்பிடல்ல” வந்து அட்மிட் ஆக வேண்டியதா போச்சு.
அப்பொழுதே என் நாடி நரம்பெல்லாம் விழுந்து சுத்தமாக மரத்து போனது போல் ஆகி விட்டேன். அட கடவுளே சிவராமன் ஒரு கொலையாளியா?
உண்மையில் நான் யார்? என் பின்னனி என்ன என்பதை எல்லாம் கண்டு கொள்ளாத “காவல் துறையும்”, நீதி துறையும் என்னை மாட்ட வைப்பதில் தான் ஆர்வம் காட்டியது. ஊடகங்கள் கூட என் பெயர் “சிவராமன்” என்றும் எனக்கு தெரியாத அவனது “முன்னாள் கதைகள்” எல்லாம் “யூ ட்யூப்”, தொலை காட்சி சேனல்கள் என்று மாறி மாறி காட்டி கடைசியில் பத்து வருட கடுங்காவல் தண்டனையில் கொண்டு வந்து விட்டது.
இந்த கதையை வாசகர்களான உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்களாவது போலீசிடமும், மற்றவர்களிடமும் சொல்லி “நான் அவனில்லை” என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Dec-23, 5:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 76

மேலே