ஊர்க்காவல்

" ஊர்க்காவல் "

"அந்த இருட்டு வேளையில் வயக்காட்டு ஓரமாக ஒரு சிறிய வெளிச்சம்.

நெருக்கி வர வர தெரிந்த அந்த கம்பீர உருவம், ஒரு கையில் லாந்தர் விளக்குடன் மறுகையில் குத்தீட்டியுடன்,
'காளஹஸ்தி தேவனுடையது'.
ஊர் காவல் படையின் தலைவன்.

இரவு வயல்களில் வருகிற காட்டுப்பன்றிகளை துரத்தும்
காவலுக்கு இன்று அவர் முறை.

ஐந்து புலிகள் சேர்ந்து வந்தாலும்
நகத்தை வெட்டி கழுத்தில் மாட்டிக் கொள்ளும்,
பத்து யானைகள் சேர்ந்து வந்தாலும் தாக்கி அதன் முடியை மோதிரமாக்கும், அந்த உடலுக்கு இன்று அயர்ச்சி! நடையில்
தளர்ச்சி !
ஏன்? அவரின் அழகான பருவ மகள்.

வெளியே செல்லும் போதெல்லாம் தாயில்லா தன் பெண்ணுக்கு
துணையாக இருக்கும் பக்கத்து விட்டு
கிழவி, இன்று உடல் நலமில்லை என்று படுத்து விட, வீட்டில் தனியாக இருக்கும் பெண்.

அதுமட்டுமல்ல, ' மாயாண்டி' 'மைனர் மாயாண்டி', ஊர் தலைவரின் கேடுகெட்ட மகன்.

குடிகார பெண் பித்தன். புடவை கட்டி இருந்தால் சோளக்கொல்லை. பொம்மையைக் கூட வெறித்துப்
பார்க்கும் பார்வை.

இரண்டு மூன்று நாட்களாக தன் தெருவையே நோட்டமிடுவதாக
தகவல்.

கடமையும், கவலையும் சேர்ந்து வாட்ட, அவர் இங்கே, மனமோ அங்கே!.

திடீரென்று அவருக்கு 'வைரவன்' ஞாபகம், 'எங்கே போயிற்று அந்த வயதான குருட்டு வெள்ளை நாய்?. '

தெருவில் சுற்றி வந்த அதற்கு, ஒரு நாள் உணவு போட்டதிலிருந்து தினமும் அந்த நேரத்துக்கு தன் வீட்டைத் தேடி வந்து விடும் .

அதிகமாக குரைக்காது, எங்கிருந்தாலும் தூரத்தில் முறைத்தபடி நிற்கும்.

சரி தெரு நாய் தானே என்னதான் பெயர் வைத்து வளர்த்தாலும் ஒடி விட்டது என்று நினைத்தார்.


சிறிது நேரம் சென்றிருக்கும் 'அப்பா! அப்பா!" என்ற அலறல், அவர் மகள் சில ஊர் பெண்களுடன்,
'என்னம்மா, என்ன ஆயிற்று?' என்று பதற,

'அப்பா நீங்கள் சென்றவுடன் அந்த குடிகார மாயாண்டி நம்ம வீட்டுக்கு வந்து என்னிடம் தவறாக நடக்க பார்த்தான்.

நான் பயந்து அவனை தள்ளிவிட்டு வெளியே பின்புறமாக ஓடி வந்தேன். அவன் பின்னாடியே விரட்டி வந்தான்.

திடீரென அலறல் சத்தம் கேட்டது, நான் திரும்பி பார்க்காமல் ஒடி, வழியில் இருந்தவர்களுடன் வந்துவிட்டேன்' என்றாள்.

மனம் துடிதுடித்துப் போன காளஹஸ்தி தேவர், 'இருக்கட்டும், நாளைக்கு அவனை பஞ்சாயத்தில் நிறுத்தி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுகிறேன்'. என்று கர்ஜித்தார்.

'நீ இங்கேயே இரும்மா' என்று சொல்ல, ஊர்ப் பெண்களோ "பயப்படாதீங்க, நாங்கள் பார்த்துக்குறோம்", என்று அழைத்துச் சென்றனர் .

தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து கலங்கினார் தேவன் படுத்தப்படியே.

சரசரவென எதோ சத்தம் அவர் சட்டென எழ, ஊர்மக்கள் நான்கைந்து பேர். பதட்டத்துடன் இவர் பார்க்க,

'ஐயா அந்த மாயாண்டி பய, காட்டு பன்றிகள் கடித்து உடல் முழுக்க ரத்தக் காயங்களும் நம்ம ஊரு ஆற்றங்கரையில் பிணமாக கிடக்கிறானாம்', என கூவ,

இவருக்கு ஒன்றும் புரியவில்லை, ' சரி விடியட்டும், நான் வந்து விடுகிறேன் ",
என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.

இருளும், ஒளியும், சூழ்ந்த அந்த விடியல் நேரத்தில் கவலையோடு அமர்ந்திருந்த அவருக்கு பக்கத்தில் திடீரென்று எதோ நிழலாட திரும்பிப் பார்த்தார்.

அந்த அரையிருட்டில் வைரவன் அவரை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தது. வாயில் 'ரத்தம் உறைந்த கறைகள்"!.

எழுதியவர் : (24-Dec-23, 9:31 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே