கல்லாத்து உலகளவு

கல்லாதது உலகளவு /
———

கல்வியெனும் கடலினுக்கு
கரையென்று ஏதுமுண்டோ /
வல்லவரோ நல்லவரோ
வகுப்பினிலே சிறியவரே /

பால்வெளியாய்ப் பலதுறைகள்
படிப்பதுவோ சிலவகைகள் /
நூல்பலவும் பள்ளிகளும்
நுண்ணறிவெலாம் கொடுத்திடுமோ /

கசடறவே கற்பதுவும்
கற்பனைதான் மறுப்பேது /
பசிபோக்கும் பாடங்களைப்
படித்திடுதல் சிறப்பன்றோ /

ஔவையவள் மொழியினையே
ஒதுக்கிடுதல் இயன்றிடுமோ /
பௌவமாய்ப் பரந்திருக்கும்
படித்தலுக்கு எல்லையேது /

நம்மைநாமே பகுத்தறிவோம்
நமக்கான துறையினிலே /
செம்மையாகப் பயின்றிடுவோம்
சீருடனே திகழ்ந்திடுவோம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (27-Dec-23, 1:32 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 34

மேலே