தேன்மலரைச் சூடியென்னைத் தேடிவரும் பூங்கொடியாள்
தேன்தனைச் சிந்தி தினம்சிரிக்கும் மல்லிகைத்
தேன்பூவைச் சூடி தினம்வரும் பூங்கொடி
ஏன்வரவில் லைஇன்னும் இந்தப்பொன் மாலையில்
வான்நிலவே கேட்டுச்சொல் வாய்
-------ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மூன்றாம் சீர்
மோனைப் பொலிவுடன்
தேன்தனைச் சிந்தும்மென் தென்றல்பூ மல்லிகைத்
தேன்மலர் சூடியே தேடிவரும் பூங்கொடி
ஏன்வரவில் லையின்று என்னவள் மாலையில்
வான்நிலவே கேட்டுச்சொல் வாய்
----இப்பொழுது சற்று மாறிய மோனைப் பொலிவுடன்
தேன்தன்னைச் சிந்தும்மென் தென்றல்பூ மல்லிகைவெண்
தேன்மலரைச் சூடியென்னைத் தேடிவரும் பூங்கொடியாள்
ஏன்வரவில் லையின்று என்னவள்பொன் மாலையிலே
வான்நிலவே கேட்டுச்சொல் வாய்சென்று தோழியிடம்
-----காய் காய் காய் கூவிளங்காய் கலிவிருத்தம்
தேன்தன்னைச் பொழியும்மென் தென்றல்பூ மணமல்லிகை
தேன்மலரை அணிந்தென்னைத் தேடிவரும் மலர்க்கொடியாள்
ஏன்வரவில் லையின்று எனதவள்பொன் இளம்மாலையில்
வான்நிலவே கேட்டுச்சொல் வாயெந்தன் கொடியாளிடம்
----காய் முன் நிரை நிற்கும் கலித்தளை மிகுத்து மாச்சீர்
விளக்கனிச் சீர் தவிர்த்த தரவு கொச்சகக் கலிப்பா