குடிகாரன் வீடு

****************
வீட்டில் மனையாள் விருப்பச் சமையலைப்
போட்டுக் குடைந்தெடுக்கும் போக்கினர் - தீட்டிலாக்
கள்ளருந்தும் பாத்திரம் காவிப் படிந்ததெனத்
துள்ளிக் குதிப்பதில்லை தூ..!
*
தூவெனத் துப்பித் துடைப்பத் தடிப்பினும்
போவதை மாற்றிடாப் பொல்லாதார் - சாவதற்
கஞ்சாதே சந்ததமும் கள்ளருந்தி வாணாளைக்
கொஞ்சமா யாக்கிடும் கூத்து
*
கூத்துக் களிப்பெனக் கொண்டாடித் தள்ளாட
ஊத்திக் குடித்து உலறுவர் - பீத்தித்து
ஊர்வம்பு வாங்கி உதைபட்டுக் கொண்டேனும்
பார்'தூற்ற வாழ்வார் பகைத்து
*
பகைவனை நண்பனாய் பாராட்டிப் பேசும்
வகைசெயும் கள்ளிலுண்டு வம்பு -
நகைசெய்தும்
வெட்கம் மறந்து விடாப்பிடியாய் மண்டுவர்
குட்டிச் சுவராதற் கொப்பு
*
ஒப்புவமை யில்லா உயிர்வாழ்வைச் சீரழிக்கும்
தப்பிற் குறுதுணை தாமென்றே - எப்பொழுதும்
கள்ளுக் கடைப்பக்கம் கால்வைக்கும் பேர்வழிகள்
உள்ளத்துள் சாக்கடை ஊற்று
*
ஊற்றாய்ப் பெருக்கெடுக்கும் ஒவ்வாத ஆசையினைக்
காற்றாய் சுவாசிக்கும் கள்வர்கள் - ஈற்றில்
பெருநோய்க்கா ளாகிப் பிடிசோறு முண்ணா
திருக்கும் நிலைதானோ பேறு
*
பேறுகள் லென்ப பெருங்குடி யாலே
ஊறுவிளை விக்கும் ஒருகலையே - கூறுவர்
மாறிடு மெண்ணம் மனதொடு கொள்ளாமல்
நாறுவ தன்றோ நகைப்பு
*
நகைப்பிற் கிடமாய் நடக்குமிம் மாந்தர்
புகைத்தற் கும்மிடார் பூட்டு - திகைப்பூட்டும்
வண்ணம் திரிந்தலைந்து வட்டிக்கு வாங்கியும்
மண்டுவர் தம்மை மறந்து
*
மறந்தும் குடியை மறக்கா மனிதர்
துறக்கவு மெண்ணார் துணிந்து - பிறந்ததே
கள்ளருந்தற் கென்றே கடைவாசல் காத்திருக்கும்
கொள்கையுடன் தாவும் குரங்கு
*
குரங்கெனத் தாவிக் குடித்தழித்து வாழ்வைத்
தரமற்ற தாக்கித் தகர்ப்பர் - வரமாய்க்
கிடைத்த மனைவி குழந்தைகள் ஏங்க
விடைதெரி யாதாகும் வீடு
*
மெய்யன் நடராஜ்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Jan-24, 1:47 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே