துறவா உடம்பினான் என்னபயன் - பழமொழி நானூறு 398

நேரிசை வெண்பா

நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப்
பட்டார் துடியிடை யார்ப்படர்ந் - தொட்டித்
தொடங்கினா ரில்லத் ததன்பின் துறவா
உடம்பினான் என்ன பயன். 398 - பழமொழி நானூறு - (உரைப்பகுதியில் உள்ள பதிவு)

நேரிசை வெண்பா

நட்டாரை ஆக்கி, பகைதணித்து, வைஎயிற்றுப்
பட்(டு)ஆர் அகல்அல்கு லார்ப்படர்ந்(து) - ஒட்டித்
தொடங்கினார் இல்லத்(து), அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்? 398 - பழமொழி நானூறு - (பாடல் வரிசையில் உள்ள பதிவு)

பொழிப்புரை:

1. உரைப்பகுதியில் உள்ள பதிவின்படி:

தன்னுடன் நட்புச் செய்துகொண்டவர்களைச் செல்வமுடையவராகச் செய்து பகைவரை அழித்து, கூரிய பற்களையும், பட்டுடை பொலியும் உடுக்கை போன்ற இடையினையும் உடைய மனைவியர் மீது காதல் கொண்டு பொருந்தி இல்லறத்தைத் தொடங்கிச் செய்தவர்கள், அது முடிந்த பிறகு, துறவறத்தில் துறந்து செல்லாத உடம்பினான் என்ன பயனுண்டாம்?

2. பாடல் வரிசையில் உள்ள பதிவின்படி:

தன்னுடன் நட்புச் செய்துகொண்டவர்களைச் செல்வமுடையவராகச் செய்து பகைவரை அழித்து, கூரிய பற்களையும், பட்டு நிகர் அகன்ற பெண்ணுறுப்பினை உடைய மனைவியர் மீது காதல் கொண்டு பொருந்தி இல்லறத்தைத் தொடங்கிச் செய்தவர்கள், அது முடிந்த பிறகு, துறவறத்தில் துறந்து செல்லாத உடம்பினான் என்ன பயனுண்டாம்?

கருத்து: இல்லற நெறியில் நின்று, இல்லற சுகம் துய்த்து, பின்னர்த் துறவறம் சேர்ந்து அறநெறிகளைச் செய்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

விளக்கம்: 'நட்டாரை ஆக்கி' என்றது, செல்வத்தால் அவர் குடியைப் பொலியச் செய்வதை.'நட்டவர் குடி உயர்க்குவை' என்பதே இது.

'துறவா உடம்பினான் என்ன பயன்' என்பதற்கு, அதன் பின்னும் துறந்து செல்லாத உடம்பு, அடைவதற்கு உரிய இன்பம் அந்த இல்லறத்தில் இன்னும் என்ன உண்டு என்றும் கொள்ளலாம்.

துறவறமாயின் தவஞ்செய்யவே மறுமைப்பேறு அடைதல் உறுதி.

இல்லறத்தில் வாழ்ந்து இன்பம் பெற்றுப் பேரின்பம் பெறுதற்குத் துறவற நெறியிற் சேர்தலே உடம்பினால் எய்தும் பயனாம்.

'துறவா உடம்பினான் என்னபயன்' என்பது பழமொழி.

குறிப்பு:

சர்ச்சைக்குரிய ’பீப்’ பாடலில் சொல்லப்பட்ட கொச்சையான சொல் இலக்கியத்தில் நயமான சொல்லால் நாசூக்காக வழங்கப்படுவதைக் காணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jan-24, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே