மறு அலை - சிறுகதை
மறு அலை - சிறுகதை
சந்திரலேகாவின் மனம் கனல் விழுங்கியதைப் போல் கனன்றுக் கொண்டிருந்தது. எத்தனைக் கண்ணீர்த் துளிகள் கொண்டும் அக்கங்குகளை ஆற்றுப் படுத்தமுடியவில்லை.
மணியம்மாள் இறந்த மறுநாள் அன்று
அவளின் பீரோவைத் திறக்கவேண்டும் என்று ஈஷ்வரன் பிடிவாதமாக தன் அத்தையின் மகன் ரவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
இழவு விழுந்த வீட்டில் அண்ணன் தம்பிகள் பங்குப்போட்டு வாங்கி வந்த மளிகைக் காய்க்கறிகளை தன் கண்களால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் மூத்தமருமகளான
ஈஷ்வரனின் மனைவி விஜயா
அம்மா சொன்னதாக தன் மனைவியின் ஐந்து சவரன் நகையை குடும்ப சொத்து பராமரிப்பிற்கென அடமானம் வைத்திருந்ததை திருப்ப மறந்திருந்தான் ஈஸ்வரனுக்கு அடுத்தவன் பிரபாகரன்.
வட்டிப்பணம் குட்டிப்போட்டு குட்டிப்போட்டு தலைக்குள் பெரும் பாரத்தை உருவாக்கியிருந்தது.
அடுப்படியில் பிரபாகரனின் மனைவி
மஞ்சுளா அதை அவனிடம் அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்
கொதிக்கும் நீரில் கழுவிய அரிசியை
போட இஷ்ட்டமில்லாதவளாக
மீண்டும் கழுவிக் கொண்டேயிருக்கிறாள்.
ஆஸ்த்திரேலியாவிலிருந்து தன் இரு குழந்தைகளுக்கும் காதுகுத்தி மொட்டை அடிக்கவேண்டும் என எல்லோருக்கும்
இளையவனான ஸ்ரீகுமரன் இருபது நாளிற்கு முன்னமே வந்திருந்தான்.
மனைவி ம்ருதுளாதேவியின் பார்வைக்குள் அடைப் பட்டவனாய்
வந்த நாள் முதல் மாமனார் வீட்டிலும்
மனைவியின் தாய் மாமன் வீட்டிலும்
தஞ்சம் புகுந்துவிடுவது இது முதல் முறை அல்ல என்றாலும் தானும் பிறந்து வளர்ந்த ஊரைத் தாண்டியே மாறி மாறிப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றி பெரிதாக ஒன்றும் வருந்தியதாகத் தெரியவில்லை. பிறந்து வளர்ந்த வீட்டை
விளையாடித் திரிந்த மும்பரத்தை, ஓடியாடி ஓய்ந்துறங்கிய அவன் அறையை ஏன் சில சமயம் அன்னையே
மறந்திருக்கிறான்.
தந்தையின் உடல் நலம் சற்று சரியில்லாத போதே அவர் தீர்மானித்தார். சந்திரலேகா, ஈஷ்வரன், பிரபாகரன் திருமணத்தை முடித்தது போலவே இவனுக்கும் திருமணம் நடத்திவிட வேண்டும் என்று. ஆனால் துருதிஷ்ட்டவசமாக பெண்ணே அதிகக்காலம் அமையாமல் தூரத்து சொந்தக்காரர் ஒருவர் மூலம் அமைந்த இடமே ம்ருதுளா தேவி. ஊருக்கு வருகின்ற சமயங்களில் அவள் பார்வையைவிட்டு அவன் நகர்ந்துவிடக் கூடாது. உடன் பிறந்தவர்கள் இவனிடமிருந்து ஏதும் பிடுங்கிவிடுவார்களோ என்பதைப் போல் பார்வை இருக்கும். மாமன் வீடு மச்சினன் வீடு என தஞ்சம் நடப்பது எதற்கும் தான் பொறுப்பில்லை என்பதைப்போல் ஒரு பிறவியும் வாழ்க்கையும். என்றாவது தானும் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று அவனாக நினைத்துக் கொண்டாலே தவிர சொல்லும்படி இல்லை.
மணியம்மாள் இறந்த மறுநாளே பீரோவை திறப்பது முறையல்ல
ஐந்துநாள் சம்பிரதாயம் முடியட்டும்
திறந்துகொள்ளலாம் என மணியம்மாளின் தங்கை மகன்
வஸீகரன் எல்லோரையும் அமைதிப் படுத்தினான்.
சந்திரலேகாவும் மணியம்மாளும்
வஸீகரனிடம் அவனுடைய சிறு வயதுதொட்டே நிறைய விஷயங்களைப் பகிர்வார்கள். அது இன்றுவரை தொன்றுதொட்டு வந்தது ஆண் மக்கள் மூவருக்கும் பிடிக்கவில்லை என்றாலும்
வஸீகரன் நியாயம் தவறாதவன் என்பதில் மூவருக்கும் உடன்பாடு இருந்தது.
சந்திரலேகாவின் முன்பு வைத்து ஸ்ரீ குமரன் தான் ஆரம்பித்தான். அம்மா
நம் நான்கு பேர் பேரில் தனித்தனியாய் என்ன சேர்த்து வைத்திருந்தாலும்
எல்லாவற்றையும் ஒன்றிணைத்து
நான்காக பங்கிடவேண்டும் என்றான்.
சந்திரலேகாவும் இதை ஆமோதித்தாள் பொறுப்பு வஸீகரன் கையில் கொடுக்கப்பட்டது. ஸ்ரீ குமரன் சொன்னதைக் கேட்ட மறுகணம் ஈஷ்வரனும் பிரபாகரனும் மனைவிகளுடன் இரகசியம் பேசியப்படி ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்கள்
ஐந்துநாள் கழித்து பீரோவைத் திறந்தார்கள். வஸீகரன் தான் திறந்தான்.
முதல் கணக்குப் புத்தகத்தில் வீட்டு வாடகை வசூல் செய்யப்பட்ட பணத்தில்
ஈஷ்வரன் பிரபாகரன் ஸ்ரீகுமரனுக்கு தலா ஆறு லட்சம்.
சந்திரலேகாவின் கல்யாணத்தில் எழுபது சவரன்கள் போட்டப்படியாலும் அவள் மகன் திருமணத்திற்கு பதினோரு சவரன்கள் போட்டப்படியாலும் சந்திரலேகாவிற்கு இதில் பங்கில்லை.
மணியம்மாளின் பொன்னாபரணங்கள் அறுபது சவரன்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஈஷ்வரன் மற்றும் பிரபாகரனின் பெண்குழந்தைகள் இருவருக்கும் தலா இருபது சவரன்கள் ஸ்ரீ குமரனின் ஆண் குழந்தைகள் இருவருக்கும் தலா பத்து சவரன்கள் என
இதிலும் அவளிற்கென எதையும்
அறிவித்திருக்கவில்லை.
வஸீகரன் அவளைப் பார்த்தான் அவள் எதுவும் பேசாமல் மெளனித்திருந்தாள்.
வஸீகரன் ஸ்ரீ குமரனிடம் குமரா எல்லாம்
வாசிச்சாச்சுடா என்ன பண்ணலாம்
ஈஷ்வரனையும் பிரபாவையும் கலந்துட்டு சொல்லு நாலா பிரிக்கலாம்னு சொன்னதே நீதானே டா உன் மனசு யாருக்கு வரும். நானே இருந்து எல்லாம் சரிபண்ணிக் கொடுத்துட்டுப் போறேன்
பேசிட்டு சொல்லு என அவன் பாணியில் சொல்லிவிட்டு எல்லோரும் வழக்கம்போல சிரித்து பேசி சாப்பிட்டு அன்று இரவு கழித்திருந்தார்கள் .
சந்திரலேகா மற்றும் அங்கும் இங்கும் என உழன்றுக் கொண்டே இருந்தாள்.
பேச்சில் ஏதும் வித்யாசம் தெரியவில்லை. அவளுடைய இச்செய்கை வஸீகரனுக்கு விசித்திரமாகவே தென்பட்டது.
எல்லாரும் உறங்க போகும் போதே நள்ளிரவு மணி ஒன்றைக் கடந்திருந்தது.
எல்லோரும் உறங்கி விழித்திருந்தார்கள்
வஸீகரன் எழுந்து குளித்து முடித்து வரும் முன்பே எல்லோரும் அவரவர் வேலைகளுக்காய் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
வஸீகரன் ஒவ்வொருவராய் கவனித்தான் ஆனால் யாரும் அவனைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லை
காலை உணவு தாமதமாகவே உண்டு கழித்துவிட்டு வஸீகரனாகவே தொடங்கினான். என்னடா கொமரா
நேத்து சொன்னதுபோல எல்லோரும் பேசி ஒரு முடிவெடுக்கலாமா ? என்றான்.
அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லடா ம்ருதுளாவோட சித்தப்பா ஹாஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம் பார்த்துக்க ஆளில்லையாம் போயிட்டு அப்படியே அடுத்தவாரம் கிளம்பணும் வேற
இடையில வந்து பணத்தை எடுக்கணும்
பேங் போயி. காசுக்கு எப்படி செலவு வருது பாத்தியா வஸீ . நா ஒண்ணு நினைக்க சாமி ஒண்ணு நினைக்குதுடா என்றான்.
ஈஷ்வரனும் பிரபாகரனும் ஏதும் சொல்லவில்லையே என்றுப் பார்த்தான் வஸீகரன் .
ஈஷ்வரனின் மனைவி விஜயா செலவான மளிகைப் பொருட்கள் போக மீதமிருந்த மளிகைப் பொருட்கள் காய்க்கரிகளை பங்கிட்டுக் கொண்டிருந்தாள். பிரபாவின் மனைவி பேசு பேசு என்பதைப்போல கண்களால் பிரபாவை எரித்துக் கொண்டிருந்தாள்.
மிருதுளாதேவி அவள் தம்பி காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி குமரனை துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சட்டென்று பிரபாகரன் என் மனைவியோட சங்கிலியை பணையம் வச்சி குடும்ப சொத்துக்காக பராமரிப்பு செலவு பண்ணேன். ரெண்டு பேரும்
அதைப்பத்தி பேசவே இல்ல என்றான்.
ஈஷ்வரன் நீ அம்மாவிடம் கேட்டு தான் செஞ்சேன்னு சொல்றதை இப்ப நாங்க நம்ப அம்மா இல்லை என்ன பண்ண
என ஆரம்பித்தான்
வஸீகரன் பேச்சிற்கு இடைநின்றுத் தடுத்து இப்ப இதையெல்லாம் பேசற நேரமாடா . இருப்பதை நாலா வகுக்க முடியுமா ? முடியாதா ? என்றான்.
பிரபாகரன் சந்திரலேகாவைப் பார்த்து
அம்மாதான் உன் பேருக்கு ஒண்ணும் செய்யல ன்னு ஊர்ஜிதமாகிடுச்சே
இனி நீ இந்த பணத்துக்கு, நகைக்கு மேல எல்லாம்ஆச படவேணாம் . நீ இந்த வீட்டுக்கு மகாராணி மாதிரி வந்து போயிட்டிரு என்றதும் வஸீகரன் சந்திரலேகாவைப் பார்த்தான் தாரைத்தாரையாய் கண்ணீர்த் துளிகளுடன் அக்கண்கள் நிலம்
பார்த்தப்படி இருந்தன.
ஈஷ்வரனையும் குமரனையும்
பார்த்தான் இருவரும் ஏதும் நடக்காததுபோல் அவன் தன் மனைவியுடன் சமயற்கட்டிற்குள் சென்றான் . குமரன் ஏதும் சொல்லாமல்
மனைவி மக்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்
சந்திரலேகா அவ்விடத்தில் இருக்க ஒல்லாமல் வஸீகரனுடன் அவள் மகனிடம் சேர்த்துவிடும்படி கேட்டுக்
கொண்டதை மறுக்க முடியாமல்
தன் காரில் ஏறிய கொஞ்ச நேரத்தில்.
அக்கா உனக்கு என்னக்குறை
புக்காத்துல இல்லாத வசதியா
பையன் இஞ்சினியர் கைநிறைய
சம்பளம் இருக்கு உன்னை தாங்கறான்
நானென்ன சித்தி பையனாட்டவா
இருக்கேன் உனக்கு வேண்டியதெல்லாம்
அருகிருந்து செஞ்சிடமாட்டேனா என்றான்.
அவள் குரல் இடைமரித்து, கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்
அந்த வீடுக் கட்டும்போது அதனோடவே வாழ்ந்தவடா நான் ஒவ்வொருக் கல்லா அப்பாவுக்கு எடுத்துத் தரும்போது
இது என் வீடு ன்னு நினைச்சு நினைச்சு
சந்தோஷப்பட்டிருப்பேன். இவனுங்க மூணுபேரையும் அப்பா கோபத்துக்கு
முன்னால கொண்டுபோகாமே அணைச்சு வளத்தியிருப்பேன்.என் அப்பா என் அம்மா என் தம்பிக என் வீடு ன்னு சொல்லி சொல்லி வளந்துட்டு
இனி இந்த வீட்டுக்கும் எனக்குமுள்ள பந்தம் அவ்ளோதானா ?
என் பேருல அம்மா ஒரு லட்ச ரூபாய் இல்ல ஒரு கோடியே போட்டிருந்தாலும்
நா அதை இவங்களுக்குத் தானே கொடுத்திருப்பேன் . அம்மா இதை ஏன் நினைக்கலை. இவனுங்க இதை ஏன்
நினைக்கலை.
தாய் தந்தை இல்லாம போயிட்டா ஒரு பொண்ணுக்கு இனி எல்லாம் அவ்ளோதானா ?
இனி யாரோ போலதான் இங்க வந்து போகணுமா ? எனக்கான உரிமை, மரியாதை அன்பு பாசம் இப்படி
எல்லாத்தையும் அவமானப்பட்டுதான், அதை இனி ஒவ்வொருதரமும் கேட்டுக்கேட்டுதான் பெறணுமா ?
இனி இந்த நெருப்பை ஆற்ற எத்தனை கங்கையை அள்ளி தலைக்கூற்றணுமோ சர்வேஸ்வரா எனக் கதறினாள்.
வஸீகரன் ஆறுதல் ஏதும் சொல்லமுடியாதவனாய்
மூச்சடைத்துபோய் அவளையேப் பார்த்திருந்தான் .
முற்றும்.
பைராகி