தர்ப்பணம்

தர்ப்பணம்
காலை ஒன்பது மணிக்கு மேல் இருக்கலாம். அரசு அலுவலகங்கள் சூழ்ந்திருந்த “கலெக்டர் அலுவலக” காம்பவுண்டுக்குள் எங்கும் பரபரப்பாய் இருந்தது. அதுவும் காலை நேரத்தில் பணியாளர்கள் சரியான நேரத்திற்குள் அலுவலகத்திற்குள் நுழைவதற்காக வேண்டிய கட்டாயத்திலும், அது போக அலுவலகத்தில் காரியம் ஆக வேண்டி வந்திருந்த பொது மக்கள் வேறு தாங்கள் காணவேண்டி வந்திருக்கும் அலுவலகத்தை தேடியும் அலைந்து கொண்டிருந்தனர்.
பத்து மணிக்கு அலுவலகத்திற்குள் இருந்தாக வேண்டும். ஒன்பது ஐம்பதுக்குத்தான் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை கலெக்டர் அலுவலக காம்பவுண்டுக்குள் கொண்டு வந்தார் சாமியப்பன்.
எங்கு நிறுத்துவது? சிறிது தடுமாட்டம். ஊழியர்களுக்கு தனியாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இருந்தாலும், அங்கும் தாறுமாறாக வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுவும் கொஞ்சம் உள்புறமாகவும் இருந்தது.
இரண்டு மூன்று வேப்ப மரங்கள் பரந்து விரிந்திருந்ததால் நிழலுக்கு கவலையில்லை என்றாலும் வாகனங்களை நிறுத்துவதில் “ஒழுங்கு” என்பது மருந்துக்கும் கிடையாது. வண்டிகளை நிறுத்தி வைக்கும் விசயத்தில். சாமியப்பனும் அப்படித்தான் கிடைத்த இடத்தில் வண்டியை ‘சொருகிவிட்டு’ செல்ல கூடியவர்தான். இன்று கொஞ்சம் தாமதமாகி விட்டது, இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கிறது.
சாமியப்பன் ‘அரசாங்கத்தில்’ பணி புரிந்தாலும் ‘நேரம் தவறாமை’ என்பதை மட்டும் சரியாக கடை பிடிப்பவர். இன்று அது தவறி விடுமோ? பரபரப்பாய் அதோ அந்த மரத்தை ஒட்டிய புதர் அருகே வண்டியை கொண்டு போனவர், அங்கு கிடந்த் உடைந்த காய்ந்து போன சுள்ளிகளின் மீது சக்கரத்தை மேலேற்றி வண்டியை நிறுத்தி விட்டு, ஹெல்மெட்டை கழட்டி வண்டியில் மாட்டி விட்டு வேகமாக அலுவலகத்துக்குள் நுழைய நடந்தார்.
மண்டையில் ஏதோவொன்று சட்டென்று வேகமாக மோதியது. “ஆ” வலியில் தலையை தடவியபடி எது மோதியது? என்று பார்த்தார். இரண்டு மூன்று காக்காக்கள் அவர் தலைக்கு மேல் பறந்தபடி இருந்தது. அட சே இந்த காக்காவுக்கு வேற வேலை இல்லை, “உஷ் உஷ்” வேகமாக கையை அசைத்தார்.
‘காகங்கள்’ இவர் ‘அரட்டலுக்கு’ அசராமல் மீண்டும் வேகமாக அவரது தலையை நோக்கி பறந்து வந்தது. தன் தலையை காப்பாற்றி கொள்ள அவர் முயற்சித்தது வீணாயிற்று, அது மீண்டும் அவர் தலை மீது மோதி பறந்தது.
இது ஏதடா வம்பாய் போச்சு..! காகங்களை விரட்டுவதை விட்டு விட்டு தன் தலையை காப்பாற்ற வேகமாக அலுவலகத்தை நோக்கி ஓடினார். காகங்கள் ஒன்று மாற்றி மற்றொன்று மேலே பறந்து ஒரு சுற்று வந்து இவர் தலை மீது இறங்குவதற்குள் அலுவலக கட்டிடத்துக்குள் நுழைந்து விட்டார்.
சனியன்…மனசுக்குள் திட்டியவாறு வேக வேகமாக அவரது இருக்கைக்கு ஓடினார். போவதற்கு முன் அலுவலக கணக்கு மேலாளர் மேசையின் மீது வைத்திருந்த “வருகை பதிவேட்டில் “ கையெழுத்து போட்டு விட்டு தன் ‘செல்போனை’ எடுத்து பார்த்த பொழுது நேரம் சரியாக பத்து மணியை காட்டியது.
“வாரே வா” தன்னை மனதுக்குள் பாராட்டி கொண்டார். இந்த சாமியப்பனா கொக்கா ? “பங்சுவாலிட்டி என்பது ‘நான் தான்’ மனசுக்குள் சிலாகித்தபடி, அங்கிருந்து திரும்ப எத்தனித்தார்.
அதுவரை அவரையே பார்த்து கொண்டிருந்த மேலாளர் என்ன சாமியப்பன் சரியான நேரத்துக்கு கையெழுத்து போட்டுட்டீங்கன்னு சந்தோசமா?
ஆமாம் தலையசைத்தார்” என்னோட பதினைஞ்சு வருச ‘சர்வீசுல’ ஒரு நாள் கூட ‘லேட்’ ஆக வந்ததில்லை, பெருமையாக சொன்னார்.
‘ஆமாமா’ தலையசைத்த மேலாளர் அது சரிதான், உள்ள வரும்போது யாரையோ திட்டிட்டு வந்த மாதிரி இருந்துச்சு?
அப்பொழுதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது, “ஆமா சார்” வண்டியை நிறுத்திட்டு வரும்போது”‘காக்கா கூட்டம்” விரட்டி விரட்டி கொத்த வந்தது. விரட்டி விரட்டி பாத்தேன், ஆனா விடாம கொத்த வந்தது, அது கிட்ட தப்பிச்சு உள்ள வர்றதுக்குள்ள பெரும் பாடா போச்சு..சலித்தபடி தன் மேசையை நோக்கி நடக்க முயற்சித்தார்.
‘ஒரு நிமிசம்’ மேலாளர் முகம் யோசனையாக அவரையே பார்த்தது. சாமியப்பனுக்கு துணுக்கென்றது அவரின் முகத்தை பார்த்து..
ஏன் சார் ஒரு மாதிரி என்னை பார்க்கறீங்க?
இல்லை ‘காகம் கொத்துனா’ நம்ம முன்னோரே வந்த மாதிரி. நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு காரியம் எல்லாம் சரியா செய்யறீங்களா?
அப்பா அம்மாவுக்கா? சார் அவங்க ‘எண்பது வயசுல’ இன்னும் நல்லாத்தான் இருக்காங்க.
அப்பா அம்மான்னா அவங்களோட முன்னோர்கள், அதாவது உங்க தாத்தா பாட்டி..!
சார் “அதெல்லாம் எங்கப்பா அம்மா சரியாத்தான்” செய்யறாங்கன்னு நினைக்கறேன். சின்ன வயசுல இருந்து பார்க்கறனே..
அப்படீன்னா இனிமே நீங்கதான் அந்த காரியத்தை பார்க்கணும்னு சொல்லாம சொல்லுதோ என்னமோ?
அப்படியும் இருக்குமோ? தலையாட்டியபடி தன் இருக்கைக்கு வந்தவர் இதையெல்லாம் சொன்னால் ‘சம்சாரம்’ ஒத்துக்குவாளா? அவள் சும்மாவே இவரின் ஒரு சில பழக்க வழக்கஙளையே “சுத்த கர்நாடகம்” என்று கேலியாக பேசுபவள். குழந்தைகள் அதற்கு மேலே.
என்ன செய்வது? யோசனையுடன் தன் நாற்காலியில் உட்கார்ந்தார். பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ‘பத்மாவதி’ அங்கிருந்தபடியே என்ன சார் ‘அக்கவுண்டண்ட்’ என்னமோ சொல்லிகிட்டிருந்தாரு.
இவர் நடந்த விசயத்தை சொன்னார். அவளும் இருக்கலாம் சார், எனக்கென்னமோ உங்களை ‘உங்க குல தெய்வ கோயிலுக்கு’ வர சொல்லி ஞாபக படுத்துதோ என்னமோ?
“ஓ” இப்படியும் இருக்குமோ? மேலாளர் சொன்னதை விட இது சுலபமானதாக பட்டது. காரணம் அவரது “குல தெய்வம்” டவுன் பஸ் பிடித்து போகும் அளவுக்கு அருகில்தான் இருந்தது.இதற்கு சம்சாரத்தை பிடித்து தொங்க வேண்டியதில்லை, இவரே வண்டியை எடுத்து சென்று வந்து விடலாம்.
இருக்கலாம் மேடம் “மகிழ்ச்சியாய் சொன்னார்” இந்த வாரமே போயிடலாமுன்னு நினைக்கறேன்.
பத்மாவதி அம்மையாருக்கு ஒரே மகிழ்ச்சி தன் யோசனையை சட்டென்று அவர் ஏற்று கொண்டது.
எதிர் சீட்டு ‘ராமபிரகாசம்’ இவர்கள் இருவரும் பேசி கொள்வதை கேட்டு கொண்டிருந்தவர் அங்க போயிட்டு “சனீஷ்வரனுக்கு தனியா ஒரு அர்ச்சனை பண்ணிடுங்க, அதுவும் முக்கியம். காக்கா அவரோட வாகனம்.
பத்மாவதி அம்மாள் அவரை முறைத்தாலும், தன்னுடைய யோசனையுடன் சேர்த்து சொல்லி விட்டதால் “போனால் போகட்டும்” என்று பார்வையை மாற்றி கொண்டாள்.
அலுவலகம் பரபரப்பாக தனது வேலைகளை ஆரம்பித்து கொண்டது. அலுவலகத்துக்குள் வருபவர்கள் அனைவருமே “சே.. இந்த காக்காக்கள் தொல்லை” தாங்கலை சுத்தி சுத்தி வந்து கத்திகிட்டே இருக்குது என்று முணுமுணுத்தபடியே சென்றது இவர் காதிலும் விழுந்தது.
அப்படியானால் அவரை மட்டுமல்ல, எல்லோரையும் தொல்லை படுத்தி கொண்டிருக்கிறது இந்த காக்கை கூட்டம், மனதுக்குள் நினைத்து கொண்டாலும் மூதாதையரையும், குலதெய்வ கோயிலுக்கு செல்வதையும் மறக்க முயற்சிக்கவில்லை சாமியப்பன்.
உணவு இடைவேளை மணி இரண்டாகியிருந்தது, பசி வயிற்றை கிள்ள, வண்டியை எடுத்து வீட்டுக்கு போய் வந்து விடலாம் நினைத்து தனது மேசை “ட்ராயரை” பூட்டி விட்டு வண்டியை எடுக்க வெளியே வந்தார்.
அலுவலகத்தை விட்டு பாதி தூரம் வந்தபின் தான் ஞாபகம் வந்தது, காலையில் அவரை காக்கா விரட்டியது. பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தார். எந்த சத்தமும் வரவில்லை, என்றதும் கொஞ்சம் மன நிம்மதியுடன் வண்டி அருகில் வந்தார்.
அந்த காட்டு புதர் செடியின் மீது வண்டியின் சக்கரம் ஏறியிருந்ததை அப்பொழுதுதான் பார்த்தவர் “சே டயர்” டேமேஜாகியிருக்குமோ? மனதுக்குள் எண்ணியபடி வண்டியில் ஏறி மெல்ல பின் புறமாக நகர்த்தினார்.
“கா” கா” திடீரென சத்தம் அவசர அவசரமாக தனது ஹெல்மெட்டை மாட்டி கொண்டவர் வண்டியை வேகமாக அங்கிருந்து நகர முயற்சித்தார்.
அப்பொழுதுதான் அவரது பார்வை அவர் ஏறி நிறுத்தியிருந்த அந்த உடைந்த சுள்ளி புதரின் மீது பார்வை சென்றது.
இரண்டு குஞ்சுகள் இறந்து கிடந்ததையும், முட்டை ஒன்று அருகே உடைந்து கிடந்ததையும் பார்த்தார்.
மனம் அதிர்ச்சியாகி விட்டது. அப்படியானால் காக்கைகள் இவரைத்தான் குறிவைத்து விரட்டியிருக்கிறது. காரணம் தானாக புரிந்தது.
“இவர்தான் குஞ்சுகளை” கொன்று விட்டதாக கருதி தாக்கியிருக்கின்றன.
வீட்டுக்கு சென்றாலும் மதிய உணவு இறங்கவே இல்லை, மனம் முழுக்க இறந்து போன குஞ்சுகளையும், உடைந்த முட்டையையும் நினைத்து வருந்தி கொண்டிருதது. ஏதேதோ சொன்னவர்கள் ‘வண்டியை நிறுத்திய’ இடத்தை பாத்தியான்னு? ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம், மனதுக்குள் நினைத்து கொண்டார்.
“தான் அவைகளை கொல்லவில்லை” என்றாலும், காற்றில் அந்த மரத்தில் இருந்து விழுந்திருந்த அந்த கூட்டின் மீது ஏறி தன் வண்டியை நிறுத்தியிருக்கிறோம். அதனால் கூட குஞ்சுகளும் முட்டையும் இறந்திருக்கலாம். உடைந்திருக்கலாம்.
இப்பொழுது அவர் மனம் தனக்கு இல்லையென்றாலும் இறந்து போன குஞ்சுகளுக்காகவாவது “முன்னோர் தர்ப்பணம்” செய்யவேண்டும், குல தெய்வ கோயிலுக்கும் போக வேண்டும் என்று மனம் முடிவு செய்து கொண்டது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Jan-24, 9:37 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 61

மேலே