காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 20

20. பிரியமான தோழி


மூன்று நான்கு படுக்கைகள் போடக்கூடிய அளவிலான அறையில் ஒரு ஓரமாக மரத்தினால் ஆன சோஃபா செட்டை பிரித்து நீண்டதை நடுவிலும் இரு ஓற்றை சோஃபாவை அதன் இருபுறமுமாக போட்டு அலங்கரித்து வைத்திருந்தனர். ஒரு சிறிய மீன்கள் வளர்க்கும் கண்ணாடி தொட்டி ஒருபுறம் சிறிய மேஜை மீது வைக்கப்பட்டு இருந்தது. அறையின் நடுவில் சிவப்பு நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டு அந்த அறையை அழகு படுத்த முயன்று கொண்டிருந்தது. சுவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக க்ரேயான்களால் கிறுக்கியது போன்று வரையப்பட்ட ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்தன.


அறையின் வாசலில் நின்று உட்புறம் பார்வையை பதித்து அங்குலம் அங்குலமாக அலசி கொண்டு இருந்த திலோதமாவின் கையைப் பிடித்து உள்ளே வரும்படி சைகை செய்தாள்.


எப்படி இருக்கு இந்த அறை என்றாள் திலோவை நோக்கி.


பதிலுக்கு புன்னகைத்த திலோத்தமா அழகா, சுத்தமா, சின்னதா இருந்தாலும் நேர்த்தியாக அடுக்கி இருக்கும் விதம் ரொம்ப அழகா இருக்கு. இந்த வரைபடங்கள் எல்லாம் இங்க எதிர்காலத்தில் உலகப் புகழ்பெறப் போற ஓவியர்கள் பல பேர் இருக்காங்கன்னு உணர்த்துகிறது ப்ரியா.


இவள் கூறுவதை புன்னகையுடன் கேட்டிருந்த ப்ரியா இவளை வாஞ்சையாக பார்த்தாள்.


திலோவின் பின்னணி பற்றி நன்றாக அறிந்திருந்த ப்ரியா அவளுடைய மென்மையான பெருந்தன்மையான குணம் அறிந்து, பார்வைக்கு வெகு அழகாக தோன்றும் திலோத்தமா உடைய மனது அவளது தோற்றத்தை விடவும் வெகு அழகு என்று அறிந்து மனம் நெகிழ்ந்தாள்.


அக்கணமே ப்ரியா அவளை மனமாற தன் ப்ரியமான தோழியாக ஏற்றுக் கொண்டாள் என்றாள் அது மிகையாகாது.


ப்ரியம்வதாவும் அதே ஆசிரமத்தில் வளர்ந்தவள் ஆகையால் அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் என்றுமே அவள் அடிமை. ஆனால் திலோவை முதல் முறையாக இப்பொழுது தான் பார்க்கின்றாள் என்றாலும் திலோவின் மீது அளவுகடந்த பாசம் உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை.


முன் ஜென்ம பந்தம் எதுவும் இருக்கும் போலும் என்று நினைத்து மெதுவாக சிரித்துக் கொண்டாள்.


இவள் முகத்தையே கூர்ந்திருந்த திலோவுக்கு, ப்ரியா ஏன் சிரிக்கிறாள் என்று புரியவில்லை. யோசனையாக,


என்ன ஆச்சு ப்ரியா என்றாள்....

அது.... ஒன்னும் இல்ல திலோத்தமா ஒரு இரண்டு மணிநேரம் முன்ன தான் உங்களை பற்றி பாரதி சொன்னார். கேட்டதில் இருந்து உங்களை உடனே பார்க்கனும்னு மனசு ஒரே பரபரப்பா இருந்தது.

பாரதி கிட்ட கூட கேட்டேன், பின்ன ஒரு நாள் அழைச்சிட்டு போறதா சொன்னார் ஆனால் பாருங்க நீங்களே இங்க வந்துட்டீங்க.

வந்த உடனே என்னைப் பார்த்து எனக்காக கண்ணீரே வந்திட்டது உங்களுக்கு, அதோட இப்ப இந்த ரூம்ல, நீங்க குறைகளை பார்க்காம இங்க இருக்க நல்லதை மட்டும் பார்த்த உங்க குணத்தில் தெரியுது உங்க அடிப்படை இயல்பு.


இப்படி உங்களைப் பற்றி யோசித்து யோசித்து நான் உங்க ஃபேன் ஆகிட்டேன்.
என்னை அறியாமலே நான் உங்க கிட்ட ஈர்க்கப்படுறத நினைத்து விட்ட குறை தொட்ட குறையா போன ஜென்மத்தில் ஏதோ சொந்தம் இருந்திருக்கலாம் என்று நினைத்து சிரித்தேன்.


வெகுளி தனமாக ப்ரியா கூறியதைக் கேட்டு தன்னை அறியாமலே திலோத்தமா கூறினாள், ஏதோ ஜென்மத்தில் என்ன இந்த ஜென்மத்திலேயே நாம் இருவரும் இனி ஃப்ரெண்ட்ஸ் என்று கூறி அவள் கரங்களை பிடித்து குலுக்கினாள்.


இருவருக்கும் இடையே நட்பு மட்டும்தானா....?? அல்லது இரத்த பந்தமும்......


யாருக்கு தெரியும் விதியின் திருவிளையாடல் பொருத்துதான் பார்க்க வேண்டும்.


******


இடதுபுறம் நெஞ்சை அழுத்தியபடி சாய்ந்து கொண்டிருந்த கணவனைக் கண்டு அம்ரித்வாணி பெருங் குரல் எடுத்து கத்தியபடி ஓடிச்சென்று அவரின் ஆறடி உயர ஆஜானுபாகுவான உடலை தாங்கிக்கொள்ள முயற்சித்து முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நச்சென்று அவளின் தலை தரையில் மோத வெண் நிற டைல்ஸ் சிவப்பு நிறம் பூண்டது.


"பட்ட காலிலேயே படும்", என்பதற்கு இணங்க தரையில் விழுந்த அம்ரித்வாணிக்கு மேல் விழுந்த கோபாலகிருஷ்ணன் மெல்ல மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்தார்.


தான் தூக்கி வளர்த்த செல்வத்தின் நிலையை நினைத்து வருத்தம் மேலோங்க தலையில் கை வைத்து அமர்ந்திருந்த கஜலெஷ்மி, மாடியில் எழுந்த குழப்பமான சத்தத்தில் ஈர்க்கப்பட்டு அதிர்ந்து எஜமானரின் அறையை நோக்கி விரைந்தாள்.


அங்கு கண்ட காட்சியில் இதயம் துடிக்க மறந்து ஸ்தம்பித்து விட்டார் கஜலெஷ்மி. சுதாரித்து முதலாளியிடம் போகும் போது இரு முழு நிமிடங்கள் கழிந்து விட்டன.


நேரம் கடக்க கடக்க இரத்தம் மென்மேலும் பெருக்கெடுக்க பயத்தில் கஜலெஷ்மியின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.


கொய்ங் கொய்ங் கொய்ங்..... ஆம்புலன்ஸ்
சத்தத்தில் சாலையில் நடமாடிய கூட்டம் விரைந்து இருமருங்கிலும் விலகி நின்று ஒன்றன் பின் ஒன்றாக விரைந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸை பார்த்து எப்பொழுதும் போல (கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது) வழக்கமான வேலையை செய்தனர்.


முதலாளியும் அவர் மனைவியும் ஆளுக்கு ஒரு ஆம்புலன்ஸில் விரைந்து கொண்டிருக்க அதை பின் தொடர்ந்து கஜலெஷ்மி காரில் சென்று கொண்டிருந்தார்.


ஒரு பெரிய ப்ரைவேட் மருத்துவமனையின் முன் சென்று ஆம்புலன்ஸ் இளைப்பாற அவர்களின் குடும்ப டாக்டர் ஸ்ட்ரெக்சர் உடன் எதிர் கொண்டு அழைத்தார். வழக்கமாக வசதியானவர்களுக்கு கிடைக்கும் அணைத்து பணிவிடைகளும் உடனே அவர்களுக்கு வழங்கப்பட நோயாளிகளுடன் சேர்த்து மருத்துவரையும் உள்ளடக்கிய அறையின் கதவு சாத்தியிருக்க கண்களில் நீர் மல்க சாத்திய கதவை வெறித்துக் கொண்டு இருந்தார் கஜா.


அம்ரித்வாணிக்கு கஜாவைப் பிடிக்காது என்பதால் எப்பொழுதும் தொணதொணத்தபடி இருப்பார் என்றாலும் முதலாளி கோபாலகிருஷ்ணன் அவளை வீட்டின் வேலைகாரி ஆக ஒருபோதும் நடத்தியது இல்லை. அந்த இல்லத்தில் அவளும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் தான் நடத்துவார். அவள் குடும்பத்தில் எந்த பிரச்சனையையும் நிலைத்து இருக்க விட்டது இல்லை அவர்.


முதலாளியின் நல்ல குணத்திற்கு அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏன் வரவேண்டும் என மனதில் மறுகியபடி வைத்த கண் எடுக்காமல் அந்த அறையின் கதவையே வெறித்துக் கொண்டு இருந்தார் கஜலெஷ்மி.



மீண்டும் சந்திப்போம்........


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (29-Jan-24, 9:03 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 63

மேலே