அணங்கு
வானவில்லில் ஏழுநிற மேற்றி - அரை
வட்டமென அந்தரத்தில் காட்டி - அதன்
வண்ணமதை எண்ணமதி லுண்ணவிடும் கண்ணியனை
வாழ்த்து தினம் வாழ்த்து
*
தேனருவி யோடிவர விட்டு - அதன்
தீர்த்தமிசைப் பாடிவர மெட்டு - தந்து
தித்திப்புச் சத்தத்தைச் சித்தத்துள் ளெத்திக்கும்
தென்றல் இளம் தென்றல்
*
பூவிதழில் வண்டெழுதும் பாட்டு - நிதம்
புன்னகைத்து தண்டலையில் கேட்டு - மனம்
பொன்னூஞ்சல் நின்றாட வென்றென்றும் முன்செல்லும்
போது துயர் ஏது
*
ஆவிதனில் சேர்ந்தியற்கை ஆடும் - எழில்
ஆட்டமதில் பேரின்பம் கூடும் - நிதம்
அற்புதமாய் கற்பனையில் சிற்பமுறக் கற்கள்தரும்
அணங்கு அதை வணங்கு
*
மெய்யன் நடராஜ்