மாற்றங்கள்
ஓடும் ரயிலில்
ஒரு வித பதற்றம்
உந்தன் கால் கொலுசு
ஒலியினைக் கேட்டு
சில மணி நேரப்
பயணமும் இன்று
பல மணி நேரக்
காத்திருப்பாகும்
உந்தன் இருப்பை
நீட்டிக்கத்தானே
இயந்திரம் ஆகும்
இடை இடை மரணம்
சூரியன் மறைய
தாமதம் ஏனோ
வெண்ணிலவு உந்தன்
அழகினில் மயங்கி
கடலிலும் கூட
இன்றலை இல்லை
காலையில் உந்தன்
கால் அடையாமல்
மிட்டாய் கூட
இனிப்பாய் இல்லை
உன் இதழ் ஓரச்
சுவையினை அறிந்து
வானிலை ஏனோ
மாறுது இன்று
வாடிய உன் முக
வாட்டத்தைக் கண்டு
வடக்கிலுள் இமயம்
தென்திசை நோக்கி
நகர்வது உந்தன்
காரணம் தானோ
உன் மனப் பாதை
போக்கினைக் கண்டு
உலகமும் இயங்குது
ஓர் விதி கொண்டு