காதல் மாத கவிதைகள்
காதல் மாத கவிதைகள்
¶¶
எதைச் சொன்னாலும்சிரித்து வைக்கிறாய்..
அதெல்லாம் சரி
நான் காதலைச் சொன்னதும் கூட
சிரித்து வைத்தாயே..
அன்றிலிருந்து தான்
எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்..
¶¶
அலையோடு விளையாடினாய்.. ரசித்தேன்
மழையோடு விளையாடினாய்.. மகிழ்ந்தேன்
காற்றோடு விளையாடினாய்.. குளிர்ந்தேன்
நிலவோடு விளையாடினாய்.. மலைத்தேன்
இப்போது காதலோடு விளையாடிவிட்டாயா?
அழுவதைத்தவிர நான் வேறென்ன செய்ய?
¶¶
நானோ காதலைச் சொல்லி பல நாளாச்சு
நீயோ ஆமாவும் சொல்லவில்லை
இல்லையும் சொல்லவில்லை
இப்படி ஆறப்போட்டுவிட்டாயே!
தவிக்குமென்னை மறைமுகமாக ரசிக்கிறாயா!
இல்லை வேறோர் இதயத்தில் வசிக்கிறாயா!
ஏதாகிலும் யோசிக்காமல் ஒரு பதில் சொல்லு
இதுவே எனது யாசிப்பு
¶¶
கல்லூரி முதல்நாள்..
நீ உள்ளே வந்ததுமே
வகுப்பில் காதல் வாசம்..
கைவிடவில்லை காதல் கடவுள்
என் மேலும் காட்டுகிறாரே பாசம்!
உன்னை என் பக்கத்திலேயேஅமரவைத்து
காதல் பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார்
பேராசிரியர்
கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
முந்திக்கொண்டு நீயே பதில் சொன்னாய்..
அது என்னை காப்பாற்றுவதற்காகத்தானே!
நண்பர் கூட்ட அலசல்களில்
எனைப்பற்றியும் உனைப்பற்றியுமே பேச்சு..
அதை கேட்கவே
நான் கல்லூரிக்கு வருவதும் ஆச்சு..
இடைப்பட்ட உன் பிறந்தநாளில்
என்னை மட்டுமே நீ அழைக்கவில்லை
அதிலேயே எனக்கான உனது குறிப்பு இருந்ததை
கண்டுகொண்டது இதயம்!
அதை உறுதி செய்தது
தனியாக நீ எனக்கு கொடுத்த கேக்..
அந்நாட்களெல்லாம் காதலாகவே விடிந்தது..
காதலாகவே கடந்தது..
உறங்கும் வேளையிலும்
காதல் உறங்காமல் இருந்தது..
இப்பொழுதும்
காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது
உன் வீட்டு டிரெங்குப் பெட்டியிலும்
என் வீட்டு டிரெங்குப் பெட்டியிலும்
கடிதங்களாய்..
¶¶
கிட்ட நீ நிற்கும் போது
தலைகால் எதுவும் புரியவில்லை..
துணைக்கால் எதுவும் தெரியவில்லை..
ஒரே "கதல்" "கவிதையக" எழுதித்தள்ளுகிறேன்..
¶¶
எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கும் நான்
உனைக் காணும் வேளைகளில் மட்டும்
யாசித்துக் கொண்டிருக்கிறேன்
காதலுக்காக..
¶¶
கடற்கரைச் சிலைகளை
ஒரு சிலையே ரசித்ததை
இன்று நீ என்னுடன் கடற்கரைக்கு
வந்திருந்த போது தான் கண்டுபிடித்தேன்..
¶¶
ஒவ்வொரு அலைக்கும்
பேர் வைத்து அழைத்துக் கொண்டிருந்தாய்..
எப்போது என் பேர் வருமென
காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
அதற்கு நீ கூறிய காரணம் கேட்டதும் தான்
காதலே பொங்கியது..
"அலை நிலைக்காதே!!"
¶¶
நீ கால் நனைத்ததும்
அலை சிலிர்த்ததை
பார்த்தாயா?
¶¶
தூரத்தில் அழகாய் ஓடியகப்பல் கண்டு
எதற்கு கை தட்டி ரசித்தாய்?
கப்பலே ஒரு முறை
திரும்பிப் பார்த்ததாய் உணர்ந்தேன்..
¶¶
நீ ஓடிப்பிடித்து விளையாட
என்னை அழைத்ததும்
கரையொதிங்கிய கிளிஞ்சல்கள்
நண்டுகள் அனைத்தும் என்னிடம்
கோவித்துக் கொண்டன..
¶¶
கலங்கரை விளக்கம் என்றால்
என்னவென விளக்கு என்று
என்னைக் கேட்டாய்?
உனக்கு புரியும் படியாய்
இப்படி விளக்கினேன்..
அது கப்பல் வழிகாட்டி
நீ காதல் வழிகாட்டி
¶¶
அ.வேளாங்கண்ணி