காலத்தால் செய்த உதவி

காலத்தால் செய்த உதவி

வகுப்பில் ஆழ்ந்து பாடம் எடுத்து கொண்டிருந்தார் புரொபசர் ராமபிரகாசம். மாணவர்களும் அன்றைய அதிசயமாய் சப்தமில்லாமல் அவரது உரையை கேட்டு கொண்டிருந்தார்கள்.
வாசலில் ஏதோ நிழல் அசைவாய் தெரிய தனது கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார். இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். புரொபசர் எப்பொழுதும் தனது பாடவேளையில் இடைஞ்சல்கள் ஏற்படுவதை விரும்புவதில்லை. அதுவும் மாணவர்களை ஒருமுகப்படுத்தி பாடத்துக்குள் கொண்டு வந்த நேரத்தில் இந்த இடஞ்சலை சுத்தமாக விரும்பவில்லை.
யெஸ்..குரலில் சற்று காரமாகவே கேட்டார்.
பரசுராமன்னு ஒரு ஸ்டூடண்ட்..அந்த இளைஞன் மெல்ல முணங்கினான்,
பரசு சற்று உரத்து வகுப்பை பார்த்து குரல் எழுப்ப, ஒரு மாணவன் எழுந்து முன்னால் வந்தான், அவனை சற்று கோபமாய் பார்த்து பாடவேளையில இப்படி இடைஞ்சல் பண்ண கூடாது, போய் என்னன்னு கேட்டுட்டு என் கிளாஸ் முடிஞ்ச பின்னாடி வா.
சாரி சாரி சார்..அந்த மாணவன் பணிவாய் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
அதற்குள் மாணவர்களிடையே சற்று சலசலப்பு வந்திருந்தது. அதை வளர விடகூடாது என்னும் வேகத்தில் சட்டென தனது உரையை விட்ட இடத்தில் இருந்து தொடர ஆரம்பித்தார். மாணவர்களிடையே சலசலப்பு மறைந்து போனது.
பாடவேளை முடிந்து தான் கொண்டு வந்த குறிப்பு புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு வகுப்பை விட்டு வெளியே வந்தவர் அந்த மாணவன் மட்டும் தயங்கியபடியே வெளியே நிற்பதை பார்த்தார். அப்பொழுதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது தான் அவனை வகுப்பு முடிந்தவுடன் தான் உள்ளே வரவேண்டும் என்று சொன்னது.
இப்பொழுது அவர் சாதாராண நிலையில் இருந்தார். என்னப்பா? யாரு அது? உன்னை கூப்பிட்டு போனது?
சார்..கண்களில் நீர், சார் அப்பா தவறிட்டாராம் சார், ஊருக்கு கூட்டிட்டு போறதுக்கு எனக்காக காலேஜ் காம்பவுண்ட் வாசல்ல காத்துகிட்டிருக்கான் சார், உங்களை தொந்தரவு பண்ணவேண்டாமுன்னு, நான் உள்ளே இருக்கற ‘புக்ஸ்’ எல்லாத்தையும் எடுத்துட்டு போறதுக்காக வெயிட் பண்ணிகிட்டிருக்கேன் சார்.
புரொபசர் ராம பிரகாசத்துக்கு ‘சுரீரென்றது’, அட கடவுளே, இவன் என்ன பையன்..!
தந்தை இறந்து விட்டார் செய்தி வந்தும், நான் சொன்ன ஒரு வார்த்த்தைக்கு மதிப்பு கொடுத்து காத்து நிற்கிறான்.
அவன் தோளை தொட்டவர் சாரிப்பா..போ..உள்ளே போ..அவனை ஆறுதல் படுத்தும் விதமாக தோளை அழுத்தி அனுப்பி வைத்தார்.
மாடியில் இருக்கும் இவரது அறை ஜன்னல் வழியாக காலேஜ் காம்பவுண்ட் வாசலை பார்த்த போது, வந்த இளைஞனுடன் பரசு முதுகின் மேல் ஒரு பையை மாட்டியபடி வேகமாக நடந்து போவதை பார்த்தார். அவன் மேல் அவருக்கு தன்னையறியாமல் இரக்கம் வந்திருந்தது.
இது கடைசி வருசம், அவங்கப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்திருந்தா இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிச்சு அவன் பட்டதாரி ஆனதை பார்த்திருக்கலாம்.
ஒரு வாரமாக வகுப்பில் பாடம் நடத்தும் வேளையில் அவன் தென்படுகிறானா என்று அவர் கண்கள் அலைபாய்ந்தது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக அவனை
காணமுடியவில்லை. இவருக்கே பொறுக்க முடியாமல் பரசு உட்கார்ந்திருக்கும் மேசை பக்கத்தில் அமர்ந்து இருந்த பையனை அழைத்து விசாரித்தார்.
சார் அவனோட அப்பா இறந்துட்டதால இனி அவனால படிப்பை தொடர முடியாதுன்னு சொல்லிட்டான் சார்.
ஏம்ப்பா இது கடைசி வருசமாச்சேப்பா, இன்னும் நாலு அஞ்சு மாசம்தான் இருக்கு,
நாங்களும் சொன்னோம் சார், இவனுக்கு பின்னாடி மூணு பேர் இருக்காங்கலாம் சார், அவங்கம்மா சீக்காளியா இருக்காங்க. இவன் அவங்கப்பா வேலை செஞ்ச கம்பெனியில போய் சேர்ந்துட்டான் சார். அவங்கப்பாவுக்காக இவனுக்கு ஆறு மாசம் டிரெயினியா அந்த கம்பெனியில சேர்த்துட்டாங்க, ஆனா சம்பளம் கம்மியாத்தான் கிடைக்கும், பரவாயில்லைன்னுட்டு போய் சேர்ந்துட்டான். ஆறு மாசம் கழிச்சு சம்பளம் உசத்தி கொடுத்துடுவாங்களாம்.
ராமபிரகாசத்துக்கு மனசு ஆறவில்லை. மனைவியிடம் சொல்லி புலம்பினார். பாவம் அந்த பையன், நான் கூட கடைசி நாள்ல அவனை மிரட்டிட்டேன். ஏங்க நீங்க அந்த பையனுக்கு ஏதாவது உதவனும்னு நினைச்சீங்கன்னா அவன் ஊருக்கு போய் உதவி செஞ்சுட்டு வந்துடுங்களேன், மனைவி இவரின் மன ஆறுதலுக்கு சொன்னாள்.
ஆமா..! அப்படி கூட செய்யலாமில்லையா? இவர் பரசுவின் முகவரியை அலுவலகத்தில் வாங்கி கொண்டார்.
கதவை திறந்த பரசு இவரை எதிர்பார்க்கவில்லை. அதுவும் மாலை ஆகியிருந்தது. நெடுந்தூரம் காரை எடுத்து வந்திருந்ததால் முகம் களைத்து கண்கள் சோர்வாக தெரிந்தது.
சார் உள்ளே வாங்க சார், அவரை அழைத்தான். வீடு சாதாரண ஓட்டு வீடு, முன் புற அறையை தொடர்ந்து வரிசையாய் இரண்டு மூன்று அறைகள் இருக்கலாம் என்று ஊகித்தார். காரணம் ஒவ்வொரு அறையிலிருந்தும் ஒருவர் இவர்களை நோக்கி வந்ததால் இப்படி அனுமானித்தார்.
அம்மாவையும், கூட பிறந்தவர்களையும் அறிமுகப்படுத்தினான்.அதற்குள் அவன் தங்கையாய் இருக்க வேண்டும், சொம்பு நிறைய தண்னீரை கொண்டு வந்தவள் “அங்கிள் சுடு தண்ணிதான், ஆற வச்சது, முதல்ல குடிங்க” என்றாள். புன்சிரிப்புடன் வாங்கி அவ்வளவு தூரம் காரை ஓட்டி வந்த களைப்பில் முக்கால் சொம்பு தண்னீரை குடித்து விட்டுத்தான் கொடுத்தார்.
அதற்குள் இவன் அம்மா காப்பியும், சாப்பிடுவதற்கு இரண்டு மூன்று பிஸ்கட்டுகளையும் ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்த கொடுக்க, இவர் வாங்கி சாப்பிட்டபடி அவனை பற்றி விசாரித்தார்.
அந்த ஊரை ஒட்டிய நகர் ஒன்றில் இரவு தங்கியவர் காலையில் பரசு வேலை செய்து வந்த கம்பெனி முதலாளியை நேரில் சந்தித்து பேசினார். அவனது மதிப்பெண்ணையும், இன்னும் ஆறு மாதமே அவன் பட்டதாரியாவதற்கு இருப்பதையும் எடுத்து சொன்னவர், ஆறு மாதம் அவனது குடும்பத்துக்கு உங்களால் உதவ முடிந்தால் அவன் பட்டதாரியாகி உங்கள் கம்பெனிக்கே வந்து விடுவான் என்பதையும் எடுத்து சொன்னார்.
முதலாளிக்கு ஆச்சர்யம், இப்படியும் ஒரு ஆசிரியரா? தன் மாணவனுக்காக தொலை தூரத்திலிருந்து இங்கு வந்து அவனுக்காக வாதாடி படிக்க வைக்க சொல்வது. சார் உங்களை மாதிரி ஆசிரியரை இப்பத்தான் பாக்கறேன், கண்டிப்பா நீங்க சொல்றபடி செய்யறோம், அவனை காலேஜ் படிப்பை கண்டினியூனிட்டி பண்ண சொல்றோம். அதுவரைக்கும் அந்த குடும்பத்துக்கு இவனோட ட்ரெயினிங்க பீரியட் சம்பளத்தை அவனோட வீட்டுக்கு அனுப்பி வச்சுடறோம்.
ரொம்ப நன்றி சார்..மன திருப்தியுடன் வெளியே வந்தவர், காரை எடுத்து கொண்டு தனது ஊர் வந்து சேர்ந்தார்.
அடுத்த வாரமே பரசுவை வகுப்பில் பார்க்க முடிந்தது. ஆறு மாதங்கள் ஓடியிருந்தது, தேர்வுகள் எல்லாம் முடிந்த அன்று மாலை ராமபிரகாசம் அறைக்கு வந்தவன் அவருக்கு மிக்க நன்றி சொல்லி உங்க உதவியை மறக்க மாட்டேன் சார், என்னை மறுபடி எங்க அப்பா வேலை செஞ்ச கம்பெனியில போய் சேர்ந்துக்க சொல்லிட்டாங்க சார். அதுமட்டுமில்லை, சூப்பர்வைசராவே போஸ்டிங்க் கொடுத்து இருக்காங்க. எல்லாம் உங்க தயவாலேதான் சார்.
அப்படியெல்லாம் சொல்லாதே, நீ முன்னுக்கு வர்றதுக்கு இது ஒரு படின்னு நினைச்சு வாழ்க்கையை தொடங்கு என்று அவனை அனுப்பி வைத்தார்.
புரொபசர் ராமபிரகாசம் ஓய்வு பெற்று விட்டார். அன்று மாலை அவருக்கு பிரியா விடை கொடுக்க அங்கு அவருடன் பணி புரிந்த ஆசிரியர்கள் உட்பட எல்லா ஊழியர்களும் இருந்தனர்.
அவரது முப்பது வருட ஆசிரிய பணியையும், குணத்தையும் பற்றி அவரவர்கள் சொல்லிக்கொண்டிருந்த பொழுது வேகமாய் வந்த ஒரு நடுத்தர மனிதன் தானும் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேச அனுமதி கேட்டான். யாருக்கும் அவன் யாரென்று அடையாளம் தெரியவில்லை.
அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான், தான் இந்த கல்லூரியின் முன்னால் மாணவன், என் பெயர் பரசுராமன். நாளை இந்த ஊரில் எனது நிறுவனத்தின் கிளை ஒன்றை இங்கு தொடங்கப்போகிறேன். அதை இவர் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டு கொள்ளவே கல்லூரிக்கு வந்தேன். வந்த பின் தான் தெரிந்தது, இன்று இவருக்கு பணி ஓய்வு பெறும் நாள் என்று. அதனால் தான் உங்களிடம் அனுமதி பெற்று, கல்லூரியை பற்றியும் இவரை பற்றியும், ஒரு சில வார்த்தைகள் பேச வந்திருக்கிறேன். மேலும் ….
நாளை தொடங்கப்போகும் எனது நிறுவனத்தை இவரது கையால் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ராமபிரகாசத்துக்கு பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் கடந்து போன இந்த நிகழ்ச்சிகள் ஞாபகம் வர தொடங்கியிருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Feb-24, 2:15 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 169

மேலே