அனைத்தும் மாறுகிறது

கடல் எழுப்பும் அலையும் அங்கு
அடங்க நிமிடம் ஆகிறதே
எழும் அலையை ரசிக்கும் உந்தன்
காந்த கண்கள் இழுப்பதனால்

வறண்ட இடத்தில் வழக்கம் மாறாய்
மழையும் எட்டிப் பார்க்கிறதே
திருவிழாவில் தலையை காட்ட
திங்கள் நீயும் வந்ததனால்

பூக்களுமே இரவு என்று
பகலில் மறந்து பூக்கிறதே
சாலையிலே நடக்கும் உன்னை
நிலவு என்று நினைத்ததனால்

டீயில் உப்பை மறந்து போட்டும்
இனிப்பை விட இனிக்கிறதே
நீ குடித்த கோப்பையிலே
ஊற்றி நானும் குடித்ததனால்

உயிர் போகும் மனிதனுக்கும்
மீண்டும் உயிர் கிடைத்திடுதே
எதிர்திசையில் நீயும் வர
எமனும் வழி மறந்ததனால்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (21-Feb-24, 1:24 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 102

மேலே